திருச்சி, ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 2023 பிப்ரவரி 24ஆம் தேதி ரத்து செய்தது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய இத் தீர்ப்பு பலதரப்பட்ட மக்கள் மத்தியில் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் உருவாக்கியது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆக்கப்படுவார்கள் என திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, அர்ச்சகர் நியமன பணிக்கான நேர்காண லை நடத்தியது. இதில் 75 பேர் விண்ணப்பம் செய்ததில், 28 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, 24 பேர் அர்ச்சகர்களாக, 4 பேர் மடப்பள்ளியில் பணி நியமனத்தை அரசு வழங்கியது. இந்த 24 அர்ச்சகர்களில் ஐந்து பேர் பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
முட்டுக்கட்டை போட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பு
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் அர்ச்சகராக சேர்வோர் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவராக, ஆகமப் பள்ளிகளில் பயிற்சி பெறுவோராக இருக்க வேண்டுமென 2020ஆம் ஆண்டில் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு ஏதுவான வகையில் அறநிலையத்துறையின் இப்புதிய விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதி சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்பட பத்துக்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான முதன்மை அமர்வு ஆகஸ்ட் 2020இல் வழங்கிய தீர்ப்பு இந்த தளத்தில் கடந்த பல பத்தா ண்டுகளாக நடைபெற்ற முன்னேற்றத்தை முடக்கியது. “ஆகமக் கோயில்களுக்கு, குறிப்பாக அர்ச்சகர் நியமனத்திற்கு அறநிலையத்துறை வகுத்த விதிகள் செல்லாது. ஆகமக் கோயில்கள், ஆகம முறைப்படி அமையாத கோயில்கள் என்பதைப் பிரிக்க தமிழ்நாடு அரசு மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி.சொக்க லிங்கம் தலைமையில் குழு அமைக்க வேண்டும். குழுவில் சென்னை சமஸ்கிருத கல்லூரி பேராசிரியர் கோபால்சாமி உள்ளிட்ட அய்வர் இருக்க வேண்டும். ஆகமக் கோயில் களை அடையாளம் கண்ட பின்பு, அர்ச்சகர் நியமனம் ஆகமங்கள் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.மீறினால், உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடரலாம்” என தீர்ப்பு வழங்கப்பட்டது.
கேரள வழக்கில் தீர்ப்பு
கேரள மாநிலம் சார்ந்த வழக்கில் 2002ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் “மலை யாள பிராமணர்கள் மட்டுமே கேரள கோயில் களில் அர்ச்சகராக முடியும் என்ற வாதம் மறுக்கப்பட்டு- உரிய கல்வித் தகுதிகளுடன் உள்ள எல்லா இந்துக்களும் அர்ச்சகராகலாம்” என மிகச் சரியாக சுட்டிக் காட்டியது. இந்த தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேலும், “அர்ச்ச கர் நியமனம் என்பது அரசின் மதச்சார்பற்ற நட வடிக்கை” என உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் சொல்லப்பட்டிருந்தவற்றை சென்னை உயர்நீதிமன்றம் அடியோடு மறுத்து தீர்ப்பு கொடுத்தது. இதில் கொடுமை என்னவெனில் தமிழ்நாடு அரசின் சார்பில் இவ்வழக்கில் வழக்காடிய வழக்குரைஞர்கள் தமிழக அரசின் கொள்கை நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துரைக்க வில்லை. அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஏதுவாக உச்சநீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகள், இது சார்ந்து அரசு நியமித்த குழுக் களின் ஆய்வு பரிந்துரைகள் ஆகியவற்றை மேற்கோள்காட்டி வாதம் செய்யாமல் சனாதன சக்திகளிடம் நீதிமன்றத்தில் கோட்டை விட்டனர். அதுமட்டுமல்ல, இதுவரை இவ்வழக்கின் தீர்ப்பு குறித்து தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வில்லை. பொது தளங்களில் எவ்வித விவாதமும் மேற்கொள்ளவில்லை.
சனாதனத்தின் பேரில் சட்டத்திற்கு ஆபத்து
இதன் தொடர்ச்சியாக 2023 பிப்ரவரி இறுதி யில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பைக் காண வேண்டியுள்ளது. தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை சார்பில் திருச்சி சுப்பிரமணிய சுவாமி கோயி லில் நியமிக்கப்பட்ட பிரபு, ஜெயபாலன் ஆகிய அர்ச்சகர்கள் நியமனத்தை மதுரை உயர்நீதி மன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்துள்ளார். மேலும், பிறப்பின் அடிப்படை யில்தான் அர்ச்சகர் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என சனாதன மை கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளார். வழக்கு விசாரணையில், மூத்த வழக்கறி ஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனைப் பார்த்து “கரு வறைக்குள் போய் எல்லாரும் பூஜை செய்ய லாம் என்று சொல்கிறீர்களே, நான் யார் தெரியுமா? நான் ஸ்மார்த்த பிராமணன். நானே கருவறைக்குள் போக முடியாது.” என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சனாதன தர்மத்தை ஓதியுள்ளார். “கோயில் நிர்வாகத்திற்கு கீழே உள்ள பணியாளர்களை நியமிப்பதற்கான விதிகளை உருவாக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது” என வழக்கு விசாரணையில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் கூறுகிறார். உடனே நீதிபதி “அப்போ முஸ்லீம், கிறிஸ்டி யன் எல்லாம் பூஜை செய்ய கோயில் உள்ளே விட்டுடலாமா” என நியாயமற்ற முறையில் சொல்லாத விஷயத்தை திரித்து விஷக் கருத்தை கக்கினார் ஜி. ஆர். சுவாமிநாதன்.
கேரளாவின் அமைதிப் புரட்சி
மேற்கண்ட சூழலில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இக்கோரிக்கை சார்ந்து எடுத்த போற்றுதலுக்குரிய செயல்பாடு களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. கேரளாவில் 2017 அக்டோபர் மாதம் திருவிதாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் சார்பில் பட்டியலினத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட பிராமணரல்லாத 36 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். பிரா மணர் அல்லாதோரை அர்ச்சகராக நியமிக்க கேரளா தேர்வாணையம் சார்பில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி அடைந்த 54 பேருக்கு அர்ச்சகர் பணி கிடைத்துள்ளது. இவர்களைக் கொச்சி தேவஸ்தானம், அர்ச்சகர்களாக நிய மித்துள்ளது. கொச்சி தேவஸ்தான வரலாற்றில் பிராமணர் அல்லாதோர், அர்ச்சக ராக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை யாகும். இது கேரளாவில் நடைபெற்ற அமைதிப் புரட்சி என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறி யுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள இடது முன்னணி அரசின் நடவடிக்கை யை பாராட்டி மகிழ்ந்தார். கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பு மட்டுமே பார்ப்பன ரல்லாதோர் அர்ச்சகர் நியமனம் குறித்து எதிர்ப்பு தெரிவித்தது.
தமிழுக்கு எதிராக வன்மம் கக்கும் சனாதன சக்திகள்
அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்றே தமிழ் மொழியில் அர்ச்சனை, குடமுழுக்கு நடை பெறுவதற்கு தொடர்ந்து வன்மத்தோடு சனா தன சக்திகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். தமிழில் குடமுழுக்கு குறித்து கருத்து கேட்பதற்காக நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்ப டையில் ஆன்மீகப் பேச்சாளர் சுகிசிவம் தலைமையிலான ஆன்மீகக் குழு நெல்லை சென்றது. அக்குழுவின் கருத்து கேட்புக் கூட்டத்தில் பாஜகவினர் உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஆன்மீகப் பெரிய வர்களை அவதூறு வார்த்தைகளில் அர்ச்ச னை செய்திட எள்ளளவும் தயங்கவில்லை. ‘இந்துக்களுக்கான கட்சி’ என ஒரு புறம் சொல்லிக் கொண்டே ஆன்மீகப் பெரியவர் களை அவதூறு செய்வதில், இழிவுபடுத்து வதில் கைதேர்ந்தவர்களாக தங்களை காட்டிக் கொண்டனர் பாஜகவினர்.
அனைத்து இந்துக்களையும் அர்ச்சகராக்குக!
கருவறைத் தீண்டாமைக்கு எதிராக ஆண்டுக்கணக்கில் நடைபெற்ற போராட்டங் களை, இயக்கங்களை ஒற்றைத் தீர்ப்பில் அழித்தொழிக்க முற்பட்ட சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய தீர்ப்பின் பாதகங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டா மை ஒழிப்பு முன்னணியின் மத்திய சென்னை மாவட்ட குழுக்கள் சார்பில், அனைத்து இந்துக்களையும் அர்ச்சகராக நியமிக்க, திருச்சி முருகன் கோயிலில் இரண்டு அர்ச்சகர் நியமனம் குறித்து நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வலி யுறுத்தி 2023 மார்ச் 28ஆம் தேதி அனைத்து கோயில்கள் முன்பு துண்டறிக்கை பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பல்துறை சார்ந்த ஆளுமைகள், கட்சி மற்றும் வர்க்க வெகு ஜன அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்ற னர். இவ்வியக்கம் பக்தர்கள், அர்ச்சகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. 2023 ஏப்ரல் 1-ந் தேதி வில்லிவாக்கத்தில் பெருந்திரள் மக்கள் பங்கேற்புடன் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
செய்ய வேண்டியது என்ன?
ஆகமக் கோயில்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், அரசு நியமித்த அர்ச்சகர்கள் பணி நியமனத்தை நீக்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை யின் தீர்ப்பை எதிர்த்தும் சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு உறுதியாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு உதவிடும் வகையில் மக்கள் மன்றத்தில் கருத்தியல் உரையாடலை முன்னெடுக்க வேண்டும். சாதி சனாதன அடிப்படையில் பக்தர்கள் மீது காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிராக நடைபெறும் இயக்கங்களை சுயமரியாதைக் கான போராட்டத்தின் தொடர்ச்சியாக கருத வேண்டும். இந்த தளத்தில், தமிழக மண்ணில் அரசியல் சமூக பண்பாட்டு களங்களில் நடந்துள்ள ஆக்கப்பூர்வமான செயல்பாடு களை ஜனநாயக சக்திகள் முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்து மதத்தில் உள்ள பல்வேறு சமயப் பிரிவுகள் தங்களின் உரிமைக்காக, பன்மைத்தன்மை கொண்ட வழிப்பாட்டு முறை களுக்காக நடைபெறும் போராட்டத்தின் ஜன நாயக உள்ளடக்கத்தை அங்கீகரிக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக தமிழ் மொழி யில் அர்ச்சனை, குடமுழுக்கு நடைபெறு வதை உறுதி செய்ய வேண்டும்.