ஒரு தொழிலாளியின் வேதனை இன்னொரு தொழிலாளிக்குத்தான் தெரியும். ஒரு தொழிலாளிக்கு இன்னொரு தொழிலாளிதான் உதவிக்கரம் நீட்டுவான். அதுதான் உழைப்பாளிகளின் பண்பு.
தமிழில் கிடைக்கப்பெற்ற நூல்களுள் காலத்தால் பழமையானது தொல் காப்பியமாகும். இந்நூல் ஓர் இலக்கண நூல். எனினும், பழந்தமிழிலிருந்த இலக்கிய வடிவங்கள் பற்றியும் அந்நூல் பேசியுள்ளது. மேலும், தொல்காப்பியத்துள் காணப்பெறும் இலக்கணக் கூறுகள் பிற்காலத்தில்இலக்கிய வடிவங்களாகவும் தோற்றம் கொண்டுள்ளன. குறிப்பாக, பாடாண் திணையிலுள்ள துறை கள், பின்னர் உலா, பரணி, பிள்ளைத்தமிழ், ஆற்றுப்படை முதலான இலக்கிய வடிவங்க ளாக உருப்பெற்றுள்ளன. அதாவது, தமிழில் பிற்காலத்தில் செழித்து வளர்ந்த இலக்கி யங்களுக்குத் தொல்காப்பியமே வித்தாகும். இலக்கியத்தில் பாடப்பெறுகின்ற ஆண் மகனின் ஆளுமையைப் பேசும் திணை பாடாண்திணை எனப்படுகின்றது. இந்தத் திணைக்கான துறைகளுள் ஒன்றாக, “கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்”
என்பதைத் தொல்காப்பியம் குறிப்பிட் டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ‘ஆறு’ என்ற சொல்லுக்கு ‘வழி’ என்பது பொருளாகும். ‘கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஒரு வள்ளலிடம் சென்று பரிசு பெற்றுத் திரும்பும் வழியின் இடையே தன்னைப்போல் வறுமையில் வாடியிருக்கும் கூத்தரையோ பாணரையோ பொருநரையோ விறலி யையோ தாம் பரிசு பெற்ற வள்ளலிடம் பரிசு பெற்றுத் திரும்புமாறு வழிகாட்டுவது’ என்பதே மேலுள்ளதற்குப் பொருளாகும். உலா, பரணி, பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்க ஆற் றுப்படை என்பது மிக முக்கியமானதும் வேறு பட்டதுமான தன்மையைக் கொண்டிருக்கும் இலக்கிய வடிவமாக உள்ளது. கலைஞர்களே கலைஞர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதே இவ்விலக்கியத்தின் தனித்த அடையாளமாகும். கூத்தரும் பாணரும் பொருநரும் விறலிய ரும் தமிழகத்திலிருந்த அலைகுடியினர் ஆவார். இயல், இசை, கூத்து எனும் முத்தமிழ்த் திறத்தையும் அவர்கள் பெற்றி ருந்துள்ளனர். ஊர்ஊராகச் சென்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அதன்வழிக் கிடைக்கும் வருவாயைக் கொண்டே வாழ்ந் துள்ளனர். மிகச் சிறந்த திறமையைப் பெற்றி ருந்தும்கூட அவர்கள் வறுமையோடு தான் வாழ்ந்துள்ளனர். அதேபோன்று கூட்டமாக வாழ்ந்துள்ளனர். இவர்களின் வாழ்வியல் பற்றிய பதிவுகளை எட்டுத்தொகை நூல் களில் ஓரளவிற்குக் காண முடிகின்றது. பத்துப் பாட்டிலுள்ள பொருநராற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை) ஆகி யன இவர்களைப் பற்றிச் சற்று விரிவாகப் பேசியுள்ளன.
புறநானூறு (69) ஒரு பாணனைப் பற்றிக் கூறும்பொழுது, ‘கையிலே யாழ், வயிற்றிலே பசி, வேறுவேறு நூலால் தைக்கப்பட்ட, வியர்வையில் நனைந்த கந்தல் ஆடை’ எனக் குறிப்பிட்டுள்ளது. இன்னொரு பாடல் (68) பாணர்கூட்டத்தை உடும்பின் தோலை உரித்து விட்டது போன்ற எலும்பு வெளிப் படும் கூட்டம் என்றும், தம் பசியைப் போக்கு வோர் இல்லாததால் தம் கலையின்மீதே வெறுப்புக் கொண்டிருக்கும் கூட்டம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றிற்கெல்லாம் உச்சமாக, பாணனின் இல்லத்தைச் சிறு பாணாற்றுப்படை பின்வருமாறு காட்சிப்படுத்தியுள்ளது.
“திறவாக் கண்ண சாய்செவிக் குருளை கறவாப் பால்முலை கவர்தல் நோனாது புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில் காழ்சோர் முதுசுவர்க் கணச்சித லரித்த பூழி பூத்த புழற்கா ளாம்பி ஓங்குபசி உழந்த ஒருங்குநுண் மருங்குல் வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும் அழிபசி வருத்தம் …”
அதாவது, அப்போதுதான் பிறந்தி ருக்கின்ற நாய்க்குட்டி, தன் தாயிடம் பாலுண்ண நினைத்துக் காம்பைக் கவ்வு கின்றது. ஆனால், பாலில்லாத நாய் வலி தாங்க முடியாமல் குரைக்கின்றது. இப்படிப் பட்ட இல்லத்தில், மண் சரிந்து விழுந்த இடத்தில் காளான் பூத்துள்ளது. வறுமையில் வாடும் கிணை கொட்டும் பெண், தன் நகங்க ளால் கிள்ளி எடுத்த கீரையை உப்பில்லாமல் சமைத்து, வேறு எவரும் பார்த்தால் அவர்கள் கூறும் சொற்களுக்கு நாணம் கொண்டு, வாயிற்கதவை அடைத்துக்கொண்டு சுற்றத் தோடு உண்டனர் என்பதே மேற்கண்ட பாட லடிகளின் பொருளாகும். இல்லத்திலிருக்கும் குட்டி ஈன்ற நாய்க்குக்கூடப் பால் இல்லை என்பது வறுமையிலும் கொடிய வறுமை யாகும். இப்படிப்பட்ட வறுமையிலிருந்த பாணர்கள் ஒரு வள்ளலை நாடிச் சென்று பரிசு பெற்றுத் திரும்புகின்றனர். அவர்கள் பெற்ற பரிசு யானைக்கன்றுகளும் யானை களும் அணிகலன்களும் என்று பொரு நராற்றுப்படை கூறியுள்ளது. சாதிலிங்கம் கொண்டு நிறமூட்டப்பட்ட போர்வையையும் நல்ல தேரினையும் எருதுகளையும் பாகனு டன் சேர்த்து யானை குதிரைகளையும் அணி கலன்களையும் பெற்றதாகச் சிறு பாணாற்றுப்படை கூறியுள்ளது. தீயினால் சுடப்பட்ட பொன்னாலாகிய தாமரையையும் பொன்னாலான பொன்னரி மாலையையும் நான்கு குதிரைகள் பூட்டிய பொன்னால் செய்த தேரினையும் பெற்றதாகப் பெரும்பாணாற்றுப்படை கூறியுள்ளது. பொன்தாமரை, தேர், யானைகள், பசுக்கள், காளைகள், குதிரைகள் முதலியவற்றைப் பெற்றதாக மலைபடுகடாம் கூறியுள்ளது. இவ்வனைத்தையும் பாணர்கள்தான் பெற்றார்களா? அல்லது பாடிய புலவர் பெற்ற தனைப் பாணர்மீது ஏற்றிக் கூறினாரா? அல்லது பாணர் பெற்றதாகப் புலவர் அடித்து விட்டாரா? எனப் பல வினாக்கள் எழுகின்றன. பாணர்கள்
பெற்றதாகக் கொண்டாலும் அவர்கள் அலைகுடியினராகத்தான் வாழ்ந்துள்ளனர். பாணருக்கும் பொருநருக்கும் கூத்த ருக்கும் வள்ளல்கள் வாரி வழங்கியுள்ளனர் எனக் கொண்டாலும் அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு வெளியில் வேறு யாருக்கும் சொல்லாமல் வாழவில்லை. நமக்குக் கிடைத்துவிட்டதே, அதுவே போதும் என நிம்மதியாகவும் இருக்க வில்லை. தன்னைப்போல் கலைஞர்களாக இருக்கக் கூடியவர்களைக் கண்டுகொள்ளா மலும் இருக்கவில்லை. ஒரு தொழிலாளியின் வேதனை இன்னொரு தொழிலாளிக்குத்தான் தெரியும். ஒரு தொழிலாளிக்கு இன்னொரு தொழிலாளிதான் உதவிக்கரம் நீட்டுவான். அதுதான் உழைப்பாளிகளின் பண்பு. இந்தப் பண்புதான் அன்றைய கலைஞர்களான பாணர், கூத்தர், பொருநர் உள்ளிட்டோரிட மும் இருந்துள்ளது. இருப்பதைப் பகிர்ந்து கொள்ளும் பக்குவமும் அவர்களிடம் இருந்துள்ளது. ஆதலால்தான் தன்னைப் போலிருக்கும் இன்னொரு கலைஞனை, வள்ளலிடம் ஆற்றுப்படுத்தியுள்ளனர். உடன்வாழ் கலைஞனை ஆற்றுப்படுத்தும் இந்தப் பண்புதான் ஆற்றுப்படை இலக்கி யங்களின் தனித்தன்மையாகவும் திகழ்கின்றது. பிற்கால இலக்கண நூல்கள் பாணர், பொருநர், கூத்தர், விறலி என்பவர்களோடு புல வர்களையும் சேர்த்துக் கொண்டன. ஆனால், புலவராற்றுப்படையில் மேற்சுட்டிய பண்புக்கு இடமில்லை!