articles

img

திருமணங்களும் பல லட்சம் கோடி வர்த்தகமும் - ஜி.ராணி

திருமண விழாக்களை நம்பியிருந்த எண்ணற்ற சிறு, குறு தொழில்கள், அவை சார்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தற்போது அதிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.  அந்த இடத்தை படிப்படியாக திருமணம் சார்ந்த துறைகளில் ஈடுபட்டுள்ள பெரும் நிறுவனங்கள் கைப்பற்றி வருகின்றன.

திருமணம் ‘சொர்க்கத்தில்’ நிச்சயிக்கப் படுகிறது என பெரியவர்கள் கூறு வார்கள். ஆனால் உண்மையில் திரு மணங்கள் லட்சங்களும் கோடியும்  இருந்தால்தான்  உறுதி செய்யப்படுகின்றன. 2023  நவம்பர் 23 முதல் டிசம்பர் 23 வரை ஏராளமான முகூர்த்த நாட்கள். இந்த ஒரு மாத காலத்தில் இந்தியாவில் 38 லட்சம் திருமணங்கள் நடைபெற  இருக்கின்றன. இதன் மூலம் 4.74 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம், பணப்பரிவர்த்தனை நடக்கும் என அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் (CAIT) அறிக்கை சொல்கின்றது. இதில் தில்லியில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான திருமணங்கள் நடைபெறுகின்றன எனவும் அங்கு 1.25 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நடை பெறும் என்றும் அறிக்கையில் சொல்லப் பட்டுள்ளது.

தங்கமே பிரதான இடம்

இந்த விபரங்களின் படி, ஒரு குடும்பம் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதற்கு சராசரியாக 1.25 கோடி ரூபாய் செலவாகிறது. தங்கம், உடைகள், மண்டபம், உணவு, சீர் வரிசைப்பொருட்கள்  மற்றும் இதர சாமான்கள் வாங்குவதற்கு செலவாகிறது. ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கவே இத்தனை லட்சங்கள் செலவாகும் என்றால் 2 அல்லது 3 மகள்களை வைத்திருக்கும் பெற்றோரின் நிலை என்னாகும் என்று நினைத்தாலே தலைசுற்றும்.   கடந்தாண்டு இந்தியாவில் 32 லட்சம் திருமணங்கள் நடைபெற்றன. இதில் 3.7 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்ற தாகவும் சிஏஐடி தேசிய தலைவர் பி.சி. பார்த்தியா மற்றும் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் திரு மணங்களில் மட்டும் மொத்தம் 130 பில்லி யன் டாலர் செலவழிக்கப்படுகிறது. எரிசக்தி, வங்கி, இன்சூரன்ஸ் ஆகிய மூன்று பெரும் தொழில்களைத் தொடர்ந்து நான்காவது பெரிய தொழில் இந்தியாவில் திருமணத் தொழிலே ஆகும். இந்த விபரங்களின் பின்னணியில், இந்தியாவில் விற்பனையாகும் தங்கத்தில் பாதி மணப்பெண் நகைகள்தான் என உலக தங்கக் கவுன்சில் தெரிவித்துள்ள தகவல் முக்கியத்துவம் பெறுகிறது. தங்கத்தின் விலை எவ்வளவு கூடினாலும் தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவ தில்லை. விழாக்கள், திருமணங்கள், அன்பளிப்புகள் என தங்கம் மக்களின் வாழ்வில் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. உலக தங்க விற்பனையில் இரண்டா வது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தங்கத்தை மையமாகக் கொண்ட திருமணங்கள், எளிய மக்களைத் துரத்துகின்றன.  தங்கத்திற்கு ‘மஞ்சள் பிசாசு’ என்று பெயரும் உண்டு.  வெறும் உலோகம் என்ற நிலையைத் தாண்டி உலகம் முழுவதும் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலை களுக்கு ஏற்ப தங்கத்தின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன.  தங்கத்தின் மதிப்பை நிர்ணயிக்கிற கூறுகளில் பண வீக்கமும், சமூக பொருளாதார அரசியல் நெருக்கடிகளும் முக்கியமான பங்கு வகிக் கின்றன. தங்க பதுக்கலை, முதலீட்டை, வர்த்தக சூதாட்டத் தேவையை தூண்டு கின்றன. அதைப் பயன்படுத்தி  வேகமாக வளர்ச்சியடையக் கூடியதாக- மேலும் பண மதிப்பு மிகுந்ததாக தங்கம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

திருமணக் கடனை அடைக்க
இந்தியாவில் மக்களின் வாங்கும் சக்தி நாளுக்கு நாள் சுருங்கி வரும் சூழலில் லட்சக்கணக்கான மக்கள் காதிலும், கழுத்தி லும்  மெல்லிய செயின்  கூட தங்கத்தில் போட முடியாத நிலையில் தான்  உள்ளனர்.  தமிழ்நாட்டில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மூலமாக ஏராளமான பெற்றோர் தன் பெண்ணின் திருமணத்திற் காக நகைகள், உடைகள், சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதற்காக பல்லாயிரம் ரூபாய் கடனாக பெற்று திருப்பிச் செலுத்த முடி யாத அவல நிலைமையும் நீடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தன் பெண்ணின் திருமணத்தை முடிக்க தனி பெண்கள், தூய்மைப்பணியாளர்கள்,  கூலி வேலை யை மட்டும்  நம்பி இருப்பவர்கள், அடித்தட்டில் இருக்கக்கூடிய அனைத்து மக்களும்  படும் பாடோ சொல்லி மாளாது. இப்படி வாங்கிய கடனை அடைப்பதற்காக பள்ளிப் படிப்பைக் கூட முடிக்க முடியாமல் ஏராளமான இளம் பெண்கள் தங்களின் கனவுகளை துறந்து விட்டு  திருமண செலவுகளில் பங்கெடுக்க, ஜவுளிக்கடை, பஞ்சாலை, டெய்லர் மற்றும் எண்ணற்ற தனியார் நிறுவனங்களுக்கு சொற்பக் கூலிக்கு வேலைக்கு செல்கின்ற னர். நாள் முழுவதும் கால் கடுக்க நின்று உழைப்பைச் செலுத்துகின்றனர். ஒருகிராம் தங்கத்தின் விலை சுமார் 6000 ரூபாய்க்கு விற்கும் நிலையில், குறைந்தபட்சம் ஐந்து பவுனுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் செலவு செய்து  வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் வரதட்சணை கொடுக்க முடியாமல் பல இளம் பெண்கள் தற்கொலை என்ற  முடிவுக்கு செல்கிறார்கள்.

இவை அனைத் திற்கும்  காரணம், திருமணம் என்பது வணிக மயமாகியிருப்பதும், தங்க வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள  கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வேட்கையும் ஆகும். இந்த திருமண வணிகம் என்பது வரும் நாட்களில் இன்னும் மிகப் பெரிய வர்த்தகமாக வளரும் என்று  மதிப்பிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் 1325 பில்லியன் டாலர் அளவிற்கு இதன் மதிப்பு அதிகரிக்கும்; அதில் தங்கம் 50 சதவீதத்திற்கும் மேல்; உடை கள் 17 சதவீதம் அளவிற்கு இடம் பிடிக்கும் எனவும் ஆய்வு நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ளன.  திருமண விழாக்களை நம்பியிருந்த எண்ணற்ற சிறு, குறு தொழில்கள், அவை  சார்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தற்போது அதிலிருந்து வெளியேற்றப்படு கின்றனர். அந்த இடத்தை படிப்படியாக திருமணம் சார்ந்த துறைகளில் ஈடுபட்டுள்ள பெரும் நிறுவனங்கள் கைப்பற்றி வருகின்றன. பெரும் பணக்காரர்கள், உயர் நடுத்தர வர்க்கத்தினர், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரின் இல்லத் திருமணங்களை குறி வைத்து பெரும் நிறுவனங்கள் இந்த வணிகத்தை, கொள்ளை லாபத்திற்கான களமாக மாற்றியுள்ளன. இதன் காரணமாக சந்தையில் பெருமளவுக்கு அதிகரித்துள்ள திருமணம் சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளின் அதீத விலை உயர்வு, திரு மண விழா மகிழ்ச்சியிலிருந்து சாதாரண ஏழை, எளிய உழைப்பாளி மக்களின் குடும்பங்களை தள்ளியே வைத்துள்ளன.