articles

img

விவசாயிகளை ஏமாற்றிய மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம்! - பெ.சண்முகம்

நவம்பர் -26 வரலாற்றில் பொன்னெழுத்துக்க ளால் பொறிக்கத்தக்க நாளாக ஆகிவிட்டது. ஆம்! 2020 நவம்பர் 26 அன்று “தில்லி சலோ” என்ற முழக்கத்தை முன்வைத்து அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு போராட்டத்தை துவக்கி யது. பிறகு அதில் மற்ற விவசாய சங்கங்களும் இணைந்து 500க்கு மேற்பட்ட விவசாய சங்கங்களை கொண்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) யாக வளர்ந்தது. இப்படியொரு பரந்த ஒற்றுமை, இதற்கு முன்பு உருவான தில்லை. எத்தனையோ எழுச்சிமிக்க விவசாயப் போராட்டங்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்க ளில் நடைபெற்றுள்ளன. அவை அனைத்தும் முக்கிய மான போராட்டங்கள் தான். ஆனால், தில்லியில் திரண்டு விவசாயிகள் நடத்திய போராட்டம் வித்தியா சமானது. நாடு தழுவிய போராட்டமாக அது நீடித்தது. அனைத்து மாநில விவசாயிகளும் குறிப்பிட்ட சில கோரிக்கைகளுக்காகப் போராட்டத்தில் உணர்வுப் பூர்வமாக கலந்து கொண்டனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை கண்முன்னால் நாடு கண்டது. சாதி, மதம், இனம், மொழி எல்லாவிதமான வேறு பாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு “விவசாயி” என்ற அடையாளத்துடன் அப்போராட்டம் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஓராண்டு நிறைவில்...

போராட்டம் துவங்கி ஓராண்டு நிறைவு பெறும் நிலை யில் 2021 நவம்பர் 19 அன்று பிரதமர் திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றி மூன்று விவசாய சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்ப வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் விவசாயிகள் தான் என்று இதன் மூலம் பிரதமர் ஒப்புக் கொண்டதற்காக நன்றி கூற வேண்டும். ஆயிரக்கணக்கான டிராக்டர்களை சாலையில் நிறுத்தியிருந்த போதும், டிராக்டர்களில் விவசாயிகள் போராட்டக்களத்திற்கு வந்த போதும் அவர்கள் விவசாயிகளாக பிரதமர் கண்ணுக்கு தெரியவில்லை.  பிரதமர் வேண்டுகோளை ஏற்று போராட்டக்குழு போராட்டத்தை முடித்துக் கொள்ளவில்லை. ஏனென் றால், இவருடைய கடந்த கால ஆட்சி, அணுகுமுறை இவரை நம்பத்தகுந்தவராக விவசாயிகளால் ஏற்க முடியவில்லை. எனவே, நாடாளுமன்றத்தில் சட்டப் பூர்வமாக திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை களை அரசு மேற்கொள்ள வேண்டும். அத்துடன் விவசாயிகள் முன்வைத்துள்ள இதர கோரிக்கைகள் குறித்து பிரதமர் எதுவுமே குறிப்பிடவில்லை. அதனால் போராட்டம் தொடரும் என்று தலைவர்கள் அறிவித்தனர். 

ஒன்றிய பாஜக அரசு நடைமுறைப்படுத்திவரும் தாராளமயக் கொள்கைக்கெதிராக விவசாயிகளால் நடத்தப்பட்ட போராட்டம் இது. சமூகத்தின் பல்வேறு பகுதியினரும் இப்போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியதன் மூலம் நவீன தாராளமயக் கொள்கைக்கு எதிராக மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியதை நாடு கண்டது. குறிப்பாக, இந்திய தொழிலாளி வர்க்கம் போராட்டத்தின் ஆரம்பம் முதல் முடியும் வரை வர்க்க ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக விவசாயிகளோடு கரம் கோர்த்து களத்தில் நின்றது. உலகில் பல நாடுக ளில் நவீன தாராளமயக் கொள்கைக்கு எதிராக லட்சக் கணக்கில் திரண்டு போராடி வருவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது அரசியல் மாற்றத்தையும் பல்வேறு நாடுகளில் ஏற்படுத்தியுள்ளது நம்பிக்கை அளிக்கும் நிகழ்வாகும்.  2021 நவம்பர் 29 அன்று மூன்று சட்டங்களும் நாடாளுமன்றத்தில் திரும்பப் பெறப்பட்டது. இது விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்திற்கும், தியாகத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி. மற்ற கோரிக்கைகள் சம்பந்தமாக ஒன்றிய அரசின் வேளாண்மை துறை செயலாளர் போராட்டக்குழு வுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக, 2021 டிசம்பர் மாதம் 9அன்று அரசின் சார்பில் வேளாண்மை துறை செயலாளர் அவர்கள் எழுத்துப் பூர்வமான உறுதிமொழிக் கடிதத்தை ஐக்கிய விவ சாயிகள் முன்னணிக்கு அளித்தார். அதை பரிசீலித்த போராட்டக்குழு டிசம்பர் மாதம் 11 அன்று போராட் டத்தை ஒத்திவைப்பதாக முறைப்படி அறிவித்தது. விவசாயிகள் வீடு திரும்பினர். 

இதர கோரிக்கைகள்  எப்போது நிறைவேறும்?

வேளாண்மைத்துறை செயலாளர் அளித்த உறுதி மொழி என்ன? இதர முக்கிய கோரிக்கைகள் என்ன? 

1. அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் உற்பத்தி செலவுடன் 1 1/2 மடங்கு விலை (C2+50) தீர்மா னிப்பதுடன், அதை உத்தரவாதப்படுத்தும் வகையில் மத்திய சட்டமியற்றப்பட வேண்டும்.  

2. மின்சார திருத்த மசோதா 2020ஐ திரும்பப் பெற வேண்டும்.  

3. அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ஒரு  முறை தள்ளுபடி செய்து கடனிலிருந்து விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும்.  4. ஒருங்கிணைந்த பயிர்க்காப்பீட்டு திட்டம் செம்மையாக செயல்படுத்தப்பட வேண்டும்

- இவை தான் அந்த முக்கிய கோரிக்கைகள்

  1.  மேலும், போராட்டத்தில் மறைந்த தியாகிகள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்;
  2.  போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும்; Hலக்கிம்பூர்கேரியில் விவசா யிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெனி அமைச்சரவையிலிருந்து நீக்கப் பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்;
  3. போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு சிங்கு எல்லையில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.

இது தொடர்பாக, ஒன்றிய வேளாண்மைதுறை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சஞ்சய் அகர்வால், அரசின் சார்பில் கீழக்கண்ட உறுதி மொழியை அளிப்பதாக ஐக்கிய விவசாயிகள் முன்ன ணிக்கு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில் குறைந்த பட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தும் சட்ட மியற்றுவது சம்பந்தமாக ஒரு குழு அமைப்பதாக வும், அதில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி பிரதி நிதிகளும் இடம் பெறுவர் என்றும் குறிப்பிட்டார். மின்சார திருத்த மசோதாவைப் பொறுத்தவரை, ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பிறகு தான் நாடாளுமன்றத்தில் தாக்கல்  செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இதர கோரிக்கைகள் குறித்து பேசி தீர்வு எட்டப்படும் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் தான் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. 

11 மாதங்கள் கடந்தும்...

இந்த உறுதிமொழி வழங்கப்பட்டு இப்போது பதினோரு மாதங்கள் கழிந்து விட்டது. கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக, மின்சார திருத்த மசோதா வை தானடித்த மூப்பாக ஒன்றிய பாஜக அரசு நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்துவிட்டது. குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது தொடர்பான குழுவைப் பொறுத்தவரை இந்தக் கோரிக்கைக்கு எதிரான கருத்து உடையவர்களைக் கொண்டு ஒரு கமிட்டியை அறிவித்தது. அதை ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஏற்கவில்லை. இதர கோரிக்கைகள் தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் ஒன்றிய பாஜக அரசு நடத்த வில்லை. விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற சிந்தனை சிறிதளவு கூட இந்த அரசுக்கு இல்லை என்பதைத் தான் இது வெளிப் படுத்துகிறது.

பாடம் புகட்டுவோம்!

எனவே, விவசாயிகளை ஏமாற்றிய மோடி அரசுக்கு பாடம் புகட்டுகிற வகையில், 2022 நவம்பர் 26 அன்று நாடு முழுவதும் அனைத்து ஆளுநர் மாளிகை முன்பும், பல லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும்  பிரம்மாண்டமான பேரணிகளை நடத்தி, வாக்குறு தியை மறந்துபோன பிரதமர் மோடிக்கு நினைவூட்டு வோம். நிறைவேற்றவில்லையென்றால், மீண்டும் நாடு தழுவிய அளவிலான போராட்டத்தை தீவிரப்படுத்துவ தைத் தவிர வேறு வழியில்லை என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவெடுத்துள்ளது.  நவம்பர் 26, அரசியல் சாசன நாள். ஆம்! சட்டத்தின் முன் அனைவரும் சமம்! அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வகை செய்யும் இந்திய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்ட நாள். விவ சாயிகள் பேரெழுச்சியின் இரண்டாமாண்டு நிறைவு  நாள். இந்திய அரசியல் சாசனத்தின் விழுமியங்களை பாதுகாக்கும் வகையிலும், இதற்கு எதிராக செயல்படும் சக்திகளை அடையாளங்கண்டு அவர்க ளை தனிமைப்படுத்த இந்திய விவசாயிகள் முன்வர வேண்டும் என்ற விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும் விவசாயிகளின் இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.  ஒரு போரில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். எனினும் இன்னும் யுத்தம் மிச்சமிருக்கிறது. எனவே, மேலும் அதிக உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் போராட்டத்தை முன்னெடுப்போம். நவம்பர் 26இல் ஆயிர மாயிரமாய் அணிதிரள்வோம். விவசாயிகளை ஏமாற்றிய ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் புகட்டு வோம். 

கட்டுரையாளர் : மாநிலத் தலைவர்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

  

;