articles

img

தொழிலாளர் வர்க்க நலன் காக்கும் மாற்றுக் கொள்கைகளை உரத்து முழங்குவோம்! - டாக்டர் கே.ஹேமலதா

1970 மே 30 ல் துவங்கப்பட்ட சிஐடியு இன்று டன் 54 ஆண்டுகளை நிறைவு செய் கிறது. சிஐடியு தொடங்கப்பட்ட காலத்தில் அதனை  தனிமைப்படுத்த ஆளும் வர்க்கங்கள் எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. தொழிலாளர்களின் உரிமைகள், ஊதியம், நலன்கள் மற்றும் பணி நிலைமைகளை பாதுகாப்பதில், சிஐடியு தற்போது முன்னணிப் பாத்திரம் வகிக்கிறது.

வர்க்கப் போராட்ட அடிப்படை

1970 அக்டோபர் 2-4ல் ஜெய்ப்பூரில் கூடிய சிஐடியு நிர்வாகக் குழு கூட்டத்தில் சிஐடியு  அமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.  “அனைத்து வகை சுரண்டலில் இருந்தும் சமூகத்தை முழுமையாக விடுவிப்பதே சிஐடியு லட்சியம். அனைத்து விதமான உற்பத்தி சாதனங்கள், விநியோகம் மற்றும் பரிவர்த்தனைகளை சமூக உடைமையாக்கி சோசலிச சமூகத்தை நிறுவு வதன் மூலமே, தொழிலாளர் வர்க்கம் சுரண்டப்படுவ தற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என சிஐடியு அமைப்புச் சட்டம் கூறுகிறது. எந்த ஒரு சமூக மாறுத லும் வர்க்கப் போராட்டம் இல்லாமல் சாத்தியமில்லை எனவும் அமைப்புச் சட்டம் உறுதிபடக் கூறுகிறது. தொழிலாளி வர்க்கத்தை ஒன்றுபடுத்தும் கட மையை நிறைவேற்றுவது, லட்சியங்களை அடைய வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்துவது ஒரு நீண்ட  நெடிய போராட்டம் ஆகும். ஒன்றுபடுவோம்! போராடு வோம்! என்ற சித்தாந்த ரீதியிலான முழக்கத்தை சிஐடியு துவக்கத்திலேயே முன் வைத்தது. வர்க்க அடிப்படையில் தொழிலாளர்களைத்  திரட்டுவதில், சிஐடியு முன்னிலை வகிக்க வேண்டும். சமூக மாறுதலுக்கான, சுரண்டலுக்கு முடிவு கட்டுவதற்கான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்திற்குரிய பங்கை தொழிலாளர்கள் உணரச் செய்ய வேண்டும். துவக்கம் முதலே, தொழிற்சங்கங்களின் கூட்டு இயக்கங்களை வளர்த்தெடுப்பதில், நிலைக்கச் செய்வதில், கூட்டு பொதுக் கோரிக்கைகளை உரு வாக்குவதில், ஒன்றுபட்ட நடவடிக்கைகளில், சிஐடியு  முனைப்புடன் செயல்பட்டு வந்துள்ளது.

தொழிலாளர்  முன்னுள்ள சவால்கள்

இன்று தொழிலாளி வர்க்கம் சந்திக்கும் சவால் கள் ஏராளமானவை. வாழ்வின் அனைத்து நிலைக ளிலும், எதிர்கொள்ளும் தாக்குதல்களும் ஏராளம். நவீன தாராளமயக் கொள்கைகளின் பெயரால் வாழ்வா தாரத்தின் மீது பணி நிலைமைகள் மீது, கொடூரமான தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஆர்எஸ்எஸ் போன்ற  மதவாத, பிளவுவாத சக்திகள்  சாதி, மதம், மொழி, வட்டாரம் என்ற பெயரில் ஒற்றுமையை சிதைத்து வருகின்றன. ஒன்றுபட்ட போராட்டங்களை பலவீனப்படுத்தி, பெரு முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவகம் செய்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, நவீன தாராளமயக் கொள்கைகளை மூர்க்கத்தனமாக அம லாக்கிக் கொண்டே, ஆர்எஸ்எஸ்-சின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலான மதவாத, பிளவுவாத கொள்கைக ளையும் அமலாக்கியது. இத்தகைய சவால்கள் மற்றும் தாக்குதல்கள் இந்தியாவோடு நிற்கவில்லை. முதலாளித்துவத்தின் அமைப்பு ரீதியிலான நெருக்கடிக்கு மத்தியில், உலகம் முழுவதும் ஆளும் வர்க்கங்களும் அவர்களது நலன் களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கங்களும் இத்தகைய தாக்குதல்களை தடுக்கின்றன.  வலது சாரி சக்திகளுக்கு தூபம் போட்டு, போராடும் சக்திக ளின் ஒற்றுமையை சிதைத்து வருகின்றன. அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு காட்டுபவர்கள், மாற்றுக் கருத்து கொண்டோர் ஒடுக்கப்படுகின்றனர். 

நவீன தாராளமயத்தின் தோல்வி

1970-களில் முதலாளித்துவ நெருக்கடியை சமா ளிக்க கொண்டுவரப்பட்ட நவீன தாராளமயம், முற்றாக தோல்வியுற்றது நிரூபணம் ஆகி வருகிறது .முதலாளித் துவ அமைப்பில் ஆதிக்கம் வகிக்கும் சர்வதேச நிதி மூலதனம், நெருக்கடிக்கு தீர்வு எதையும் உருவாக்க முடியவில்லை. மென்மேலும் தொழிலாளர்கள் மீது தாக்குதலை அதிகரிப்பது, தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்துவது, பொது சொத்துகளை கொள்ளை யடிப்பது, சூறையாடுவது ஆகியவற்றின் மூலம் தங்க ளது லாபம், செல்வத்தை முதலாளித்துவம் பெருக்கி வருகிறது. இதற்கு வசதியாக வலதுசாரி சக்திகள், சர்வாதிகார அரசுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

வேலைநிறுத்த உரிமையைப் பறிக்க சதி

சங்கம் சேரும் உரிமையை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) கோட்பாடு எண் 87 பாதுகாக்கி றது.  இவ்வுரிமையின் உள்ளார்ந்த அர்த்தமாக வேலை  நிறுத்தம் செய்யும் உரிமையும் உள்ளது. இதுதான் இதுகாறும் ஏற்கப்பட்ட நிலை. ஆனால் தற்போது ஐஎல்ஓவின் ஆட்சி மன்றக் குழு, வேலை நிறுத்தம் செய்யும் உரிமையை பன்னாட்டு நீதிமன்றத்தின் பரி சீலனைக்கு அனுப்புவது என பெரும்பான்மை வாக்கு களுடன் முடிவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுக ளாக பல முதலாளித்துவ நாடுகளில், அரசாங்கங்க ளின் துணையுடன் ஆளும் வர்க்கங்கள், இந்த உரி மையைப் பறிப்பதற்கு சதித்திட்டம் தீட்டி வருகின்றன. உலகத் தொழிற்சங்க சம்மேளனத்துடன் (WFTU) இணைந்துள்ள சிஐடியு போன்ற அமைப்புகள் இச்சதியை வன்மையாக கண்டித்து உள்ளன.

10 ஆண்டுகாலம் பட்ட பாடுகள்

நம் நாட்டில் மோடி அரசு 10 ஆண்டுகளாக பின் பற்றிய கொள்கைகள், தொழிலாளர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் உட்பட உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினருக்கு நாசகர விளைவுகளையே ஏற்படுத்தி உள்ளன.  வேலையின்மை, குறிப்பாக, படித்த இளைஞர்களிடையே வரலாறு காணா வகை யில் உயர்ந்துள்ளது. லட்சக்கணக்கான சிறு, குறு,  நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால், பெரு மளவு வேலை இழப்பு ஏற்பட்டது. நிரந்தரத் தொழி லாளர் எண்ணிக்கை கடுமையாக வீழ்ந்துள்ளது. காண்ட்ராக்ட், தற்காலிக, குறிப்பிட்ட கால வேலை, பகுதிநேர வேலை செயலி வழித் (கிக்) தொழிலாளர் என வேலை பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, பணியிடப் பாதுகாப்பற்ற, தொழிலாளர் பட்டாளம் பல்கிப் பெருகி வருகிறது. 29 அடிப்படை தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக நான்கு சட்டத்தொகுப்புகளை நிறைவேற்றி, தொழிலாளர்களை நவீன அடிமைகளாக்கும் முயற்சி யில் மோடி அரசு தீவிரமாக இறங்கியது. பொதுத்துறை  சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, தேசத்தின் இயற்கை வளங்கள் அனைத்தும் தனியார் கார்ப்பரேட்/ அந்நிய முதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படு கின்றன. அத்தியாவசிய பண்டங்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன. மக்களின் நுகர்வு சக்தி குறைந்துள்ளது. மக்களின், குறிப்பாக பெரும் பகுதி முறைசாரா தொழிலாளரின் கடன் சுமை கூடியுள்ளது. அனைத்துத் துறைகளைச் சார்ந்த ஏராளமான தொழிலாளர்கள், ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவா ரத்தின் மதவாத சூழ்ச்சிகளுக்கு இரையாகியுள்ளனர். இந்து மதம் அல்லாத, மற்ற மதங்களிலும், அடிப்படை வாத சக்திகள் தலை தூக்கி வருகின்றன. ஒன்றுபட்ட போராட்டங்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில், மத, சாதிய அடையாளங்கள் முன்னிறுத்தப்படு கின்றன.

கூட்டுப் போராட்டங்களின் வெற்றி

1991 முதலே, நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக கூட்டு இயக்கங்களை வளர்த்தெடுப்பதில் சிஐடியு முனைப்பு காட்டி வந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் எண்ணற்ற நாடு தழுவிய, தொழில்வாரி யான வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் நடந் துள்ளன. அடுத்தடுத்த போராட்டங்களில் பங்கேற் போர் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்துள்ளது. பத்தாண்டுகளில் தேசம் தழுவிய ஆறு  பொது வேலை நிறுத்தங்கள் நடத்தப்பட்டுள்ளன. துவக்கத்தில் தனியார் மயம், காண்ட்ராக்ட் முறையை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்து உருவாகாத போதிலும், தற்போது அனைத்து தொழிற்சங்கங்களும் நவீன தாராளமய கொள்கைகளின் நாசகர விளைவுகளை புரிந்து கொண்டுள்ளன. மோடி அரசை வீழ்த்தவும் கூட்டாக அறைகூவல் விடப்பட்டது. மேலும் தொழிலாளர், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் ஒற்றுமை  வளர்க்க வேண்டிய தேவையை சிஐடியு வலியுறுத்தி வருகிறது. 1982 ஜனவரி 19இல், விவசாயிகளுக்கு கட்டுப்படியா கும் விலை, விவசாயத் தொழிலாளருக்கு ஒருங்கி ணைந்த சட்டம், விலைவாசியைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களின் கோரிக்கைக ளுக்காக தொழிற்சங்கங்களின் கூட்டு வேலை நிறுத்தத்தை உருவாக்க சிஐடியு பல முயற்சிகளை எடுத்து வெற்றி கண்டது. அன்று போலீஸ் துப் பாக்கிச் சூடு நடத்தியதில் நாடு முழுவதும் பத்து பேர் கொல்லப்பட்டனர். அந்த மகத்தான தியாகிகள் காட்டிய  பாதையில், 2023 ஆகஸ்ட் 24 இல் தொழிற்சங்கங்க ளின் கூட்டமைப்பு மற்றும் விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் சிறப்பு மாநாடு தில்லியில் நடை பெற்றது. பொது கோரிக்கைகள் மீது தொழிலாளி, விவ சாயி, விவசாயத் தொழிலாளி இணைந்து கூட்டாக போராடுவது, மோடி அரசை தேர்தலில் வீழ்த்துவது உட்பட பல முடிவுகளை சிறப்பு மாநாடு தீர்மானித்தது.

பெரும் முதலாளிகளுக்கு  எதிரான பெரும் போர்

சிஐடியுவின் அமைப்பு மாநாட்டில் ஸ்தாபகத் தலை வர் தோழர் பி.டி.ரணதிவே தனது நிறைவுரையில் “இன்று இந்தியாவில் நாம் பிரதான எதிரிகளுடன், ஏகபோகங்களுக்கு எதிராக, பெரு முதலாளிகளுக்கு எதிராக, அவர்களைப் பாதுகாக்கும் அரசுக்கு எதிராக பெரும் போரில் ஈடுபட்டுள்ளோம்” என்றார். அவர் கூறியது 54 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதும் பொருந்தும். மேலும் ஊக்கமாக, தீவிரமாக, உணர்வுபூர்வமாக இப்போரை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உண்மையான எதிரிகளை,  தொழிலாளர்கள் அடையாளம் காணச் செய்வதில் நாம் வெற்றி பெற்றோமா? வர்க்க ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் சக்திகளை தொழிலாளர் அடையாளம் கண்டுள்ளார்களா? சிஐடியு அகில இந்திய மாநாடு, இப்பாதையில் நாம் வெகு தூரம் செல்ல வேண்டி உள்ளது என தீர்மானித்தது இதர  போராட்டங்களுடன், நாடாளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி, தொழிலாளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 2023 இல் ரூர்கேலாவிலும் 2024 பிப்ரவரியில் அனு மகொண்டாவிலும் நடைபெற்ற சிஐடியு நிர்வாகக் குழு கூட்டங்களில் நமது கடமைகளை உணர்ந்து செயல் பட தீர்மானித்தோம். தொழிலாளர், விவசாயிகளின் கூட்டமைப்பு நடத்திய போராட்டங்கள், மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை ஓரளவு முன்நிறுத்த உதவின. சாதிய, மதவாத பிரிவினை சக்திகளின் வர்க்க ஒற்றுமை சீர்குலைக்கும் முயற்சிகளை முறிய டிக்கவும் உதவின. ஜூன் 4ல் வெளிவரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும், நவீன தாராளமயக் கொள்கைகள், இந்துத்துவா பிரிவினைவாத கொள்கைகள், அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு போன்றவைகளை முறியடிப்பதில் தொழிலாளி வர்க்கம் முனைப்பு காட்ட வேண்டும் .மேலும் வெகு மக்களுக்கு ஆதர வான கொள்கைகள், மாற்றுக் கொள்கைகளை அம லாக்க புதிய அரசை வலியுறுத்த வேண்டும்.

சுரண்டலற்ற சோசலிச சமூகம் என்ற சிஐடியுவின் லட்சியத்தை நோக்கிய பயணத்தையும் நாம் உறுதி யோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்!

தமிழில் : ஆர்.சிங்காரவேலு 



 

;