articles

img

முப்பாலில் கலப்படம் செய்ய முயலும் ஆளுநர் ரவி! - மதுக்கூர் இராமலிங்கம்

திருக்குறள் தந்திரமும் அல்ல; மந்திரமும் அல்ல; அது ஒரு சுதந்திரம். வள்ளுவரின் வேட்டியின் நிறம் வெண்மையாகத்தான் இருந்திருக்கும். ஏதெனினும் அது கட்டாயம் காவி அல்ல.  

- ஆர்.பாலகிருஷ்ணன், ஐஏஎஸ்
 

பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக திருவள்ளுவர் தினத்தை தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்.  தைப் பொங்கலுக்கு அடுத்த  நாள், மாட்டுப் பொங்கல் அன்று திருவள்ளுவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் கூடிய தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றை கொண்டு வருவது என்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தார்கள். எனினும், திருவள்ளுவரின் காலம் குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துகள் உள்ளன.  திருவள்ளுவரின் பிறந்த தினமாகவோ அல்லது நினைவு தினமாகவோ கருதி பொங்கலுக்கு அடுத்த  நாள் திருவள்ளுவர் தினம் என்று தீர்மானிக்கப்பட வில்லை. மாறாக, திருக்குறளின் பெருநெறியை போற்றிக் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே திருவள்ளுவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

திருவள்ளுவரின் உருவம்கூட கற்பனையாக வரையப்பட்ட ஒன்றுதான். மழித்தலும், நீட்டலும் வேண்டா என்று கூறிய வள்ளுவர், தாடி மற்றும் கொண்டையோடு இருந்திருப்பாரா என்பதும் கேள்விக்குரிய ஒன்றே. எனினும், திருவள்ளுவரை தமிழக மக்கள் எந்தவொரு மதத்தோடும் இணை த்துப் பார்ப்பதில்லை. அவர், சமண சமயத்தை சேர்ந்த வராக இருக்கக் கூடும் என்பதே பெரும்பான்மை தமிழறிஞர்களின் கணிப்பு. அவர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் என்ற கருத்தும் உண்டு. ஆனால், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் தினத்தையொட்டி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் காவி உடையோடும், விபூதி பட்டையோடும் உள்ள திருவள்ளுவர் படத்தை பகிர்ந்து ‘திருவள்ளுவர் தினத்தில் ஆன்மீக பூமியாக தமிழ்நாட்டில் பிறந்த மதிப்பிற்குரிய கவிஞரை, சிறந்த தத்துவஞானியை, சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான பிறவியுமான திருவள்ளுவருக்கு எனது  பணிவான மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன். முழு மனித குலத்திற்கும், வழிகாட்டுதலாகவும் உத்வேகமாகவும் திருக்குறள் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இராமநாதபுரத்தில் காவி உடை தரித்த வள்ளு வரின் படத்திற்கு அவர், மலர் தூவி மரியாதை செலுத்தி யுள்ளார்.

கருத்தியல் கலப்பட முயற்சி

ஏற்கனவே இவர், வள்ளுவரை காவி உடைக்குள் திணித்து வள்ளுவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுத்த முயன்றார். அப்போதே, தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு  எழுந்தது. எனினும், அவர் விடாமல் இந்த கருத்துத் திணிப்பை செய்து வருகிறார்.  ஆர்எஸ்எஸ் அமைப்பின் அக்மார்க் தயாரிப்பான ஆர்.என்.ரவி, ஆளுநர் என்ற நியமனப் பதவியைப் பயன்படுத்திக் கொண்டு பல்வேறு சேட்டைகளை செய்து வருகிறார். தமிழக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றுகிற சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஊறப் போடுகிறார். தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடியப் பிறகு, நீதிமன்றம் ஆளுநரின் தலையில் அடிக்கடி குட்டு வைத்தாலும் இவர் அசருவதில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஒருபுறம் முட்டுக்கட்டை போடும் இவர், மறுபுறத்தில் செய்து வரும் கருத்தியல் கலப்படம் மிகுந்த கண்டனத்திற்குரியதாக உள்ளது.  சனாதனம் என்ற வார்த்தையை இவர் அனுதினம் அனுஷ்டானம் செய்கிறார். சனாதனம் என்ற வார்த்தை எளிய இந்து மக்களிடம் வேறு பொரு ளில் அறியப்பட்டாலும், ஆர்.என்.ரவி உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் ஆசாமிகள் அந்த வார்த்தையை மநு அநீதி மற்றும் வர்ணாசிரமத்தின் அடிப்படையிலான மாற்ற முடியாத சாதியப் படிநிலை என்ற பொரு ளிலேயே பயன்படுத்தி வருகின்றனர்.  இதனிடையே பிரதமர் மோடியால்தான் திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளின் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று ஆளுநரின் சகபாடி யான அண்ணாமலை கயிறு திரிக்கிறார். விவிலி யத்திற்கு அடுத்தபடியாக உலகின் அதிக மொழி களில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். ஜனசங்கம் போன்ற இந்துத்துவா அமைப்புகள் உரு வாவதற்கு முன்னாலேயே திருக்குறள் பல மொழி களில் உலக மக்களை சென்றடைந்துவிட்டது. 

சாணக்கியரின் வாரிசுகள்

மோடியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு வந்தால்தான் திருவள்ளுவரை துணைக்குச் சேர்த்துக் கொள்வார். மோடி ஆட்சி புதிதாக கட்டியுள்ள  நாடாளுமன்றக் கட்டிடத்தில் வள்ளுவரின் எழுது கோலை வைக்கவில்லை. மாறாக, மன்னராட்சியின் செங்கோலைத்தான் வைத்துள்ளனர். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் உருவத்தை  அந்தக் கட்டிடத்தில் வரைந்து வைக்கவில்லை. மாறாக, மநு அநீதியின் மலிவு பதிப்பாக உள்ள  அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியரின் படத்தைத் தான் அச்சுறுத்தும் வகையில் அலங்காரமாக வரைந்துள்ளனர். சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ள அர்த்த சாஸ்திரத்தில் ‘ஒருவர் தன்னுடைய வர்ணத்திற்குரிய கடமையைச் சரியாக செய்தால், சொர்க்கத்திற்குச் செல்லலாம். மூன்று வேதங்கள் மூலம் நான்கு வர்ணத்திற்கும், வாழ்வின் நான்கு நிலைகளுக்கும் உரிய கடமையைச் செய்தால், இப்பிறவியில் தன்  கடமையை முடிப்பதால் மகிழ்ச்சியுடன் இருப்பதோடு, அடுத்த ஜென்மத்திலும் மகிழ்ச்சியோடு இருக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது. பிறப்பினால் பேதம் கற்பிக்கும் சாணக்கியரின் சனாதன வாரிசுகள் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று ஓங்கி முழங்கிய திருவள்ளுவரின் பெயரைக்கூட உச்சரிக்கத் தகுதியற்றவர்கள்.  அர்த்தசாஸ்திரத்தில் கைவினை செய்யும் தொழி லாளர்கள் பொதுவாக நாணயமற்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. எந்தவொரு தொழிலையும், உழைப்பையும் அர்த்தசாஸ்திரமோ, மநு சாஸ்திரமோ மதிப்பதில்லை. மாறாக, சாதியின் பெயரால்  சுரண்டிக் கொழுக்கிறவர்களையே உயர்ந்தவர்கள் என்று பாராட்டும் இந்த அநீதி நூல்கள் அவர்களுக்கு சொர்க்கத்திலும் சுகமான இடம் போட்டு வைத்திருக்கின்றன. 

உழவை இழிவாகக் கருதும் மநு
அதிலும், உலகிற்கு உணவளிக்கும் உழவுத்  தொழிலை மிகவும் இழிவானதாகவும் பாவகரமான தாகவும் சித்தரிக்கிறது. மநு நூல் ஸ்லோகம் 10.7-இல் விவசாயம் செய்பவர்கள் கலப்பை, மண்வெட்டி போன்றவற்றால் பூமியை வெட்டுவதாலும், பூமியில் உள்ள உயிரினங்களை வெட்டுவதாலும் இது உயர்ந்த தொழில் அல்ல என்கிறது. ஆனால், திரு வள்ளுவர் உழவுத் தொழிலுக்கு தனியொரு அதிகாரமே தந்ததோடு, உழன்றும் உழவே தலை என்றும் உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி என்றும் போற்றிக் கொண்டாடுகிறார். உழவர்கள் மட்டும் கையை மடக்கிக் கொண்டு உழவுத் தொழிலை செய்ய மறுத்துவிட்டால், முற்றும் துறந்ததாக சொல்லித் திரியும் முனிவர்களும்கூட சோற்றுக்கு வழியில்லா மல் அலைய வேண்டியிருக்கும் என்று, துறவிகளை விட உழவர்களை முன்னிறுத்தியவர் வள்ளுவர். வர்ணாசிரம தர்மத்தின்படி முதல்நிலையில் உள்ள பிராமணர்கள் என்பவர்கள் எந்தக் காரணம் கொண்டு உழவுத் தொழிலை செய்யக் கூடாது. அப்படிச் செய்வதென்றால் நரகத்திற்கு போக வேண்டும் என்று மிரட்டிய மநு எங்கே...  ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்’ என்று உழைக்கும் உழவர்களை முன் வரிசையில் நிறுத்தி, வேத விற்பனர்களைக் கூட பின்வரிசைக்குத் தள்ளிய வள்ளுவர் எங்கே...

வர்ணாசிரம முகத்திற்கு வள்ளுவ ஒப்பனையா?

ஆளுநர் ரவி போன்றவர்களின் மனதுக்குள்  இருப்பதெல்லாம் மநு நீதியும் அர்த்தசாஸ்திர மும்தான். ஆனால் தமிழ் நிலத்தில் திருக்குறள் கருத்துகள் வேரோடி இருப்பதால், மக்களை கவர்வ தற்காக மாரீச மான் போல, கபட வேடமிட்டு வரு கிறார்கள். ஆனால், அவர்களது வர்ணாசிரம முகத் திற்கு வள்ளுவ ஒப்பனை பொருந்தாததால் முயன்று, முயன்று தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். சதுர்வர்ணம், மயாசிஸ்டம் என்று பகவத் கீதை யில் பகவான் கிருஷ்ணரே சொல்லிவிட்டார் என்று  கதையளப்பார்கள். அதாவது, நான்கு வர்ணங்களை யும் கடவுள்தான் படைத்தாராம். ஆனால் அவரே நினைத்தால்கூட அதை மாற்ற முடியாதாம். இதுதான் கீதாச்சாரம். ஆனால் திருவள்ளுவர் ஊழ் என்கிற விதியை மாற்ற முடியாது என்று ஒரு அதிகாரத்தில் கூறிய போதும், அவரே அந்த ஊழை திருத்தி முயற்சி செய்தால், ஊழையும்கூட உட்பக்கம் காணலாம். அதாவது, தலைவிதியை மாற்றிவிடக் கூடிய ஆற்றல்கூட மனித உழைப்புக்கும் முயற்சிக்கும் உண்டு என்று முரசு கொட்டுகிறார்.  தெய்வத்தால் ஆகாத காரியங்களைக் கூட மனித முயற்சியால் செய்துவிட முடியும் என்கிறார் வள்ளுவர். அதுதான் ‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்ற வள்ளுவத்தின் பிரகடனம். ஆனால் மறுபுறத்தில், இவர்கள் மனதுக்குள் வைத்து பூஜிக்கும் மநு அநீதி “நீ என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், இந்தப் பிறவியில் உன் சாதிக்கென்று தீர்மானிக்கப்பட்ட தொழிலைத்தான் செய்ய வேண்டும். அடிமை யாகத்தான் வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால், அடுத்த பிறவியில் நன்றாக இருக்கலாம்” என்று  நப்பாசைக் காட்டி மனித உழைப்பை சுரண்டு வோர்க்கு, அரண் அமைத்துத் தருகிறது.

கல்வியும் அறிவும் பொது எனும் குறள்நெறி

வர்ணாசிரமம் கல்வியை, அறிவை அனை வருக்கும் ஒருபோதும் பொதுவில் வைத்த தில்லை. வேதம் மட்டுமே அறிவு என்று நம்ப வைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் சூத்திரர்களும், பஞ்சமர்களும் வேதத்தை படிக்கக் கூடாது என்று தடுத்ததோடு மட்டுமல்ல, சொன்னால் நாக்கை வெட்டு, கேட்டால் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்று,  மனதுக்குள் சொல்லிக் கொண்டால்கூட உடலை இருகூறாக பிளந்துவிடு என்றெல்லாம் உபதேசம் செய்கிறது வர்ண அநீதி. ஆனால், கல்வியையும் அறிவையும் அனைவருக்கும் பொதுவில் வைக்கிறது திருக்குறள் அழிவிலிருந்து அனைவரையும் காக்கும் கருவி யென்றும், அறிவுடையார் எல்லாம் உடையார் என்றும்  வள்ளுவம் ஒட்டுமொத்த மனித சமூகமும் அறிவுபெற வேண்டுமென அறிவுறுத்துகிறது.  ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ என கல்வியை எல்லோருக்குமான பொதுக் கிணறாகவே சித்தரிக் கிறது குறள் நெறி. எண்ணும் எழுத்தும்தான் முகத்திரண்டு கண்கள்,  கண்ணுடையார் என்போர் கற்றோர் என்றெல்லாம் கல்வியை கொண்டாடுகிற திருக்குறள், எந்த இடத்தில் யார் படிக்க வேண்டும், யார் படிப்பிக்க வேண்டும் என்று சொன்னதே இல்லை. கல்விக்கு பால் பேதம் கற்பித்தலும் இல்லை.  திருக்குறளில் பல இடங்களில் பசியின் கொடுமை விவரிக்கப்பட்டுள்ளது. நெருப்புக்கு மத்தியில் கூட தூங்கிவிடலாம். ஆனால் பசியோடு ஒரு மனிதன் வாழ முடியாது என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் பசிப்பிணி போக்கும் வழியாக வள்ளுவரால் அன்றைக்கு ஈகையைத்தான் முன்வைக்க முடிந்தது.  ஆனால் அதேநேரத்தில் ஒருவர் இரந்துதான் உயிர்வாழ வேண்டும் என்ற சமூகநிலை இருக்கு மானால் இந்த உலகத்தைப் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுளே அழிந்துபோகட்டும் என்றும் சினம் கொள்கிறார் வள்ளுவர்.

அதன்பின் சமூக வளர்ச்சியில் கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்ஸ் என்ற மேதைகள் தோன்றி உலக ஒட்டுமொத்த மானுடத்தின் பசிப் பிணி போக்கும் தத்துவத்தை, சுரண்டலை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்டும் கருத்தியலை முன் வைத்தனர்.  இப்போதைய காலத்திற்கு பொருந்தாத சில கருத்துக்கள் திருக்குறளில் உண்டு. குறிப்பாக பெண் வழிச் சேரல் போன்ற அதிகாரங்கள். ஆனால்  திருக்குறள் ஒரு போதும் பிறப்பினால் பேதம் கற்பித்தது இல்லை. ஒருவருடைய தகுதி பிறப்பின் காரணமாகவே தீர்மானிக்கப்படுகிறது என்று ஒருபோதும் சொன்னதில்லை. ஆனால் இந்தக் கருத்தை நீக்கி விட்டால் இவர்கள் சொல்லும் சனாதனம், சாரம் இழந்து சாயம் போய்விடும்.  இப்படித்தான் ஆர்எஸ்எஸ் ஆசாமியான தருண் விஜய் என்பவர் தமிழ்நாட்டில் வந்து தமிழர் களுக்கு திருக்குறள் வகுப்பெடுத்தார். வட புலத்தில் வள்ளுவருக்கு சிலை வைக்கப் போகிறேன்  என அலம்பல் செய்தார். ஆனால் ஹரித்துவாரில் வள்ளுவர் சிலையை மூட்டை கட்டி போட்டுவிட்டு போய்விட்டார். வர்ணாசிரம வாதிகள்தான் வள்ளு வருக்கு இங்கே சிலை வைக்கக் கூடாது என அடம்பிடித்தவர்கள். பிறகு பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் வள்ளுவர் சிலை வைக்கப்பட்டது என்பது  வரலாறு அல்ல நேற்றைய செய்தி.  பொது நெறி பேசும் ஒப்புயர்வற்ற திருக்குறளை களவாட முயல்வது கயமைத்தனம் அல்லவா? அதனால்தான் வள்ளுவரே கூட ‘மக்களை போல்வர் கயவர்’ என்று எச்சரித்துவிட்டு போயிருக்கிறார்.பல நூறு ஆண்டுகள் ஆன பின்பும், இன்னமும் கெடாமல் இருக்கிறது முப்பால். அப்பாலில் கலப்படம் செய்ய ஆளுநர் ரவி முயல வேண்டாம்.  களவு எனும் அதிகாரத்தில் வள்ளுவர் சொன்னதை ஆளுநருக்குச் சொல்லி வைப்போம். களவின் மூலம் சேரும் செல்வம், கடைசியில் அழிவையே தரும் என்கிறார் வள்ளுவர். எனவே சொந்தச் சரக்கு  விலை போகாத சோகத்தில், வள்ளுவத்தை அபகரிக்க முயல வேண்டாம் வர்ணாசிரம வாதிகள்.