articles

img

போபால் நச்சு வாயு விபத்து: நீதி தேவதையின் கண்கள் திறக்குமா? - பேரா பொ.இராஜமாணிக்கம்

1984 டிசம்பர் 2-3 நள்ளிரவில் நடந்த போபால் நச்சு  வாயு விபத்து குறித்த ஒரு மிக முக்கியமான ஒன்றிய அரசின் வழக்கில், 2023. மார்ச்சில் உச்ச நீதிமன்றம் ஒரு அதிர்ச்சியான தீர்ப்பை வழங்கி இருப்பதைக் கவ னத்தில் கொள்ள வேண்டும். அதாவது 1989இல் சுமார் 47 கோடி டாலர் மட்டுமே (470 மில்லியன் டாலர்) யூனியன் கார்பைடு கம்பெனி இழப்பீட்டுத் தொகையாக ஒத்துக் கொண்டு, இந்திய அரசை சமாளித்து விட்டது. இதை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் மேலும்  110 கோடி டாலர் இழப்பீட்டை யூனியன் கார்பைடை எடுத்துக் கொண்ட புதிய கம்பெனி (டவ் கெமிக் கல்ஸ்) வழங்க வேண்டுமென்றும் ஒன்றிய அரசு 2010இல் போட்ட கியூரேடிவ் பெட்டிசன் வழக்கின் தீர்ப்பு கடந்த மார்ச் மாதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐந்து நபர்கள் கொண்ட இந்த பெஞ்ச் ஒன்றிய அரசின் மீது கடும் விமர்சனத்தை வைத்துள்ளது. சுமார் 30 ஆண்டுக ளுக்கு மேல் நடந்து வரும் இவ்வழக்கில் இப்பொழுது மீண்டும் அதிமான  இழப்பீடு கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது எனக் கேட்டது. 

கதவு சாத்தப்பட்டதால் கலக்கம்

இதற்கு  அப்போதைய இழப்பீடு என்பது பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையைச் சரியாகக்  காட்டாத தால் ஏற்பட்டதென்றும் தற்போது பாதிக்கப்பட்டவர்க ளின் எண்ணிக்கைக்கேற்ப  அதிக இழப்பீடு வழங்க வேண்டுமென்று கேட்கிறோம் என ஒன்றிய அரசு வாதிட  இது சட்டத்தின் முன் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல எனவும் அப்படி இழப்பீடு கொடுப்பதென்றால் ஒன்றிய அரசு தான் வழங்க வேண்டுமென்று திருப்பி அடித்தது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி யின் கதவு சாத்தப்பட்டுவிட்டதாக கலங்கி நிற்கின்றனர். இந்திய அரசு பாதிக்கப்பட்டவர்களிடம் எந்தவித மான ஆலோசனைகள், கருத்துகள் கேட்காமல்  மிக ரகசியமாக யூனியன் கார்பைடுடன் ஒப்பந்தம் செய்து  ஏற்றுக் கொண்டுவிட்டதாக குற்றம் சாட்டினர். இழப்பீட்டுத் தொகை கேட்டது 330 கோடி டாலர் (3.3 பில்லியன் டாலர்). ஆனால் கிடைத்ததோ 47 கோடி டாலர் (470 மில்லியன் டாலர்). இதனால் பாதிக்கப்பட்ட வர்கள் மேலும் இழப்பீட்டுத் தொகை வேண்டுமென்று கேட்ட போது நீதி மன்றம் யூனியன் கார்பைடு 1.7 கோடி டாலரில் மருத்துவமனை கட்டிக் கொடுக்க உத்தரவிட்டு இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க மறுத்துவிட்டது.

இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்படுவது யார்? 

1984 டிசம்பர் 2நள்ளிரவில் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் வால்வுகள் பழுதானதால் ரசாயனத் தொட்டி வெடித்து அதிலிருந்து 27 டன் நச்சு வாயு பீச்சி அடித்து  அமைதியாக தூங்கிக் கொண்டிருந்த போபால் நகரின் மீது பரவத் தொடங்கி யது. மீத்தைல் ஐசோ சயனைடு,  என்ற நச்சு வாயுவில் மெத்தில் ஐசோசயனைடு, ஹைட்ரஜன் சயனைடு, மானோ மெத்திலமைன், மற்றும் சில வேதிப் பொ ருட்கள்  வெளியேறி காற்றில் பரவியது. காற்று வீசிய திசையில் வேகமாகப் பரவ மக்கள் மூச்சுத் திணற, கண்கள்  எரிச்சல் அடைய பல்லாயிரக்கணக்கில் மக்கள் பதறி அடித்துக்கொண்டு ஓடினர். 

தாய்ப்பாலில் நச்சு

ஆயிரக்கணக்கில் கொத்துக் கொத்தாக பூச்சிக ளைப் போல் அப்பொழுதே செத்து மடிந்தனர். முதல் வாரத்திலேயே 8000 பேர் செத்து மடிந்துள்ளனர். 1984 முதல் இன்று வரை 25,000 பேர் இறந்து போக,  ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டு பெருந் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.  விபத்துக்குப் பின் கம்பெனி மூடப்பட்டு எந்தவித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கம்பெனி யில் 67 ஏக்கர் இடத்தில் பல வருடங்களாகச் சேமித்து வைக்கப்பட்ட நச்சுக் கழிவுகளும் அகற்றப்படவில்லை. இதனால் இதில் உள்ள நச்சுக் கழிவுகள்  நிலத்தடி நீரில் கலந்து புற்று நோய், மூளைப்பாதிப்பு, பிறப்பு பாதிப்பு ஆகியனவற்றிற்கு காரணமாய் இருந்திருக்கிறது. 2002இல் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி தாய்ப்  பாலில் காரீயம், மெர்க்குரி உள்ளிட்ட நச்சு உலோ கங்கள் காணப்படுவதாக அறிவித்தனர்.   இன்றும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல வித உடல் பாதிப்புகள், கண்பார்வை இழப்பு, மரபணுக் குறைபாடு நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுடன் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் போது   யூனியன் கார்பைடு லிமிடெட் வழங்கிய இழப்பீடுத் தொகை என்பது தலைக்கு ஐம்பதாயிரம் கூடத் தேற வில்லை.  இதைப் பெறுவதற்கும் 20 ஆண்டுகள் காத்தி ருக்க வேண்டியதாயிருந்தது. 

இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்?

அமெரிக்காவில் கணினி கண்காணிப்பு இந்தியாவில் மனித கண்காணிப்பு

யூனியன் கார்பைடு கம்பெனி தனது நாடான ஐக்கிய அமெரிக்காவில் விர்ஜீனியாவில் இது போன்ற கம்பெனியை நடத்தி வந்துள்ளது. ஆனால் அந்தக் கம்பெனியில் நவீன தொழில் நுட்ப அமைப்புகள் இருந்தன. குறிப்பாக தொழிற்சாலையில் கம்ப்யூட்டர் கண்காணிப்பு முறையும் எச்சரிக்கை முறையும் இருந்தன. ஆனால் போபால் தொழிற்சாலையில் இந்த மாதிரியான ஏற்பாடுகள் எதுவுமில்லை.மனி தர்களே கண்காணித்து வாயு வெளியேறினால் வாசனை மூலம் கண்டறிந்து எச்சரிக்கை செய்ய வேண்டுமாம்.  விபத்து நடந்த சில மாதங்களுக்கு முன் குளிர் விப்பான் எந்திரத்தை நிறுத்தி வைத்து செலவினை மிச்சப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் பாதுகாப்பு வால்வுகளில் ஒன்று பழுதடைந்து இருந்தும் இரண்டு வால்வுகளை வைத்து இயக்கி இருக்கிறார்கள். அந்த இரண்டும் அப்போது ஏற்பட்ட விபத்தை சரி செய்ய இயலாமல் போனது. இது போன்று பல கருவிகள் இயக்குவதற்கான தகுதி அற்றவைகளாக இருந்தன எனக் குறிப்பிடுகின்றனர். யூனியன் கார்பைடு ரசாயன யுத்தத்திற்காக சோதனை செய்த சதி எனவும் பேசப்பட்டது.  இது போன்ற தகுதியற்ற, பாது காப்பற்ற தொழிற்சாலையை இயக்குவதற்கு அனுமதி கொடுத்தது மட்டுமல்லாமல் அதை கண்காணிக்கா மல் இருந்த அரசுகளும் முக்கியக் காரணமாகும். 

ரகசிய சந்திப்பு- பேரம்-  நீதிமன்ற தீர்ப்பு

சொல்லப் போனால், இந்திய அரசு  விபத்து நடந்த வுடன் அக் கம்பெனியின் தலைமைச் செயல் அலுவலர் ஆண்டர்சன் அமெரிக்காவில் இருந்து வந்த பின் சிறிது நேரம் வீட்டுக் காவலில் வைத்திருந்துவிட்டு, அதன் பின்னர் அமெரிக்காவுக்கு  ரகசியமாக, பாது காப்பாக தப்பியோட வைத்தது. அதன் பின்னர் அவரோடு இந்தியத் தூதுவர்களால் ரகசிய சந்திப்பு நடத்தப்பட்டு இழப்பீட்டுத் தொகையும் ரகசியமாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது (பிப்.1985).   அதைத் தொடர்ந்து இந்திய அரசு மட்டுமே இழப்பீட்டுத் தொகையை கேட்டுப் பெறும் என அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. அதன் பின்னர் என்ன இழப்பீடு ரகசியமாகப் பேசப்பட்டதோ அதே அள விலான இழப்பீட்டுத் தொகையை உச்ச நீதிமன்றம் 1989இல் இறுதி செய்தது.  எனவே இதற்குப் பொறுப் பேற்க வேண்டியது யூனியன் கார்பைடு மட்டுமல்ல இந்திய அரசும் தான்.

தாமதமாகும் நீதி...
தடுக்கப்படும் நீதி...

இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க  வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் இப்பொழுது மறுத்துள்ளது (2023, மார்ச் 14). உச்சநீதி மன்றத்தின் நீதியின் பால் நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் இந்தத் தீர்ப்பால் அதிர்ந்து போய் இருக்கின் றனர். நீதியின் கதவுகள் சாத்தப்பட்டு விட்டதாக வருந்துகின்றனர். இந்த மக்களுக்கு உரிய நீதி கிடைக்குமா என்றால் ஒரு வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளதாக அன்றிலி ருந்து இன்று வரை பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்டு வரும் தில்லி அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த என்.டி.ஜெயபிரகாஷ் கூறுகிறார். அந்த வழக்கை போபால் கேஸ் பேத் மகிளா உத்யோக் சங்காதன் (BGPMUS) போபால் கேஸ் பேத் சங்கர்ஷ் சஹயக் சமிதி (BGPSSS)ஆகிய இரண்டு அமைப்பு கள் உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள தாகவும் அதில் இதுவரை வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை விட ஐந்து மடங்கு உயர்த்திக் கேட்டுள்ள தாகக் குறிப்பிடுகிறார்.  யூனியன்  கார்பைடு  கம்பெனி 2001இல் டவ்  கெமிக்கல்ஸ் என்ற கம்பெனிக்கு கை மாற்றப்பட்டது தொடர்பான கிரிமினல் வழக்கு சிபிஐ மூலம் நடை பெற்று வருகிறது.இது நாள் வரை இந்தியாவில் விசாரணைக்கு வர முடியாது என வம்படித்த அந்த  கம்பெனி கடந்த அக்டோபர் மாதம் வழக்கு விசார ணைக்கு வர வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கும் 2024,ஜனவரி 6க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் பாதிப்பு தவிர, பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்திய போபால் விபத்தால் பாதிக்கப்பட்டு இன்றும் பல நோய்களுடன் போராடிக் கொண்டிருக்கும் ஐந்து லட்சத்திற்கும் மேலானோர் நீதிக்காகக் காத்திருக்கின்றனர்.  நீதி தேவதையின் கண்கள் திறக்குமா? 

கட்டுரையாளர் : மேனாள் பொதுச் செயலாளர், 
அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பு