articles

img

மேலும் விரிகிறது நேட்டோவின் சூழ்ச்சி வலை

நேட்டோ உச்சி மாநாடானது,  கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் துருப்புகளையும்,  ஆயுதங்களையும் குவிப்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை இறுதிசெய்துள்ளது.  அதாவது தற்போதுள்ள 40 ஆயிரம் துருப்புகளை 3 லட்சம் துருப்புகளாக அதிகரிக்கிறது. இவ்வாறு, நேட்டோ நாடுகளின் துருப்புகளால் ரஷ்யா சுற்றி வளைக்கப்படுகிறது.

லிதுவேனியா தலைநகர் வில்நியஸில் ஜூலை 11-12 தேதிகளில் நேட்டோ ராணுவக் கூட்டமைப்பின் உச்சிமாநாடு நடைபெற்றது. அமெரிக்காவினால் தலைமை தாங்கப்படும் மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டணியான நேட்டோ தனது மூர்க்கத்தனத்தை இம்மாநாட்டின் மூலம் ஒரு புதிய மட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்த உச்சி மாநாட்டின் பிரதான பிரச்சனை உக்ரைன் யுத்தம் என்று கூறப்பட்டிருந்தபோதிலும், உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ள பிரகடனம் இதற்கும்  அப்பால் சென்று, உலகத்தை ஆதிக்கம் செய்வதற்குத்  தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்ப தாகத் தன்னுடைய நோக்கத்தையும் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கூறப்பட்டுள்ளதைப் போலவே, இந்த ஆவணமும், உலகம் முழுதும் நிலம், ஆகாயம், கடல் மற்றும் இணைய வெளியில் (land, air, maritime and cyberspace domains) பாது காப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அது தொடர்பாக “360-டிகிரி அணுகுமுறை” (“360-degree  approach”) குறித்துப் பேசுகிறது.

உக்ரைன் மோதல் தொடர்பாக, இம்மாநாட்டுப் பிரகடனத்தின் தொனி போர்வெறி கொண்டதாக உள்ளது; அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக எவ்விதமான வாய்ப்புகளும் எவ்விதத்திலும் குறிப்பிடப் படவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முன் நிபந்தனையாக அது கோருவது என்னவென்றால், “ரஷ்யா, அனைத்து உக்ரைன் எல்லைகளிலிருந்தும் முழுமையாகவும், நிபந்தனை எதுவுமின்றியும் பின்வாங்கவேண்டும்” என்பதாகும். மேலும் இந்த உச்சிமாநாடு, உக்ரைனுக்கு அதிக அளவில் ஆயுதங்களையும், தளவாடங்களையும் அளிப்பதற்கு தனியே ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளவும் முடிவு எடுத்திருக்கிறது.

அந்தரத்தில் ஜெலன்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி,  நேட்டோவில் உடனடியாக உறுப்பினராக வேண்டும் என்று கோரிவந்தபோதிலும், அவருடைய கோரிக்கை க்கு நேட்டோ தலைவர்கள் இணங்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், உக்ரைனை நேட்டோவுடன் இணைத்துக் கொண்டால், நேட்டோ ஒப்பந்தத்தின் கீழ்  உள்ள 5ஆவது விதியை முடுக்கிவிட வேண்டி யிருக்கும்; அதாவது, இப்போது ரஷ்யாவுடன் நடை பெற்றுவரும் போரில் அமெரிக்காவும், நேட்டோவில் உள்ள இதர நாடுகளும் நேரடியாகவே பங்கேற்க வேண்டியிருக்கும். இதனை அவை விரும்ப வில்லை. எனினும் வெளியிடப்பட்டுள்ள பிரகடனத்தில், “உக்ரைன் நேட்டோ கூட்டணியுடன் அரசியல்ரீதியாக வும் மற்றும் இணைந்து இயங்கக்கூடிய முறையிலும் மாறியிருப்பது வலுவடைந்து கொண்டிருக்கிறது” என்று, ஜெலன்ஸ்கியை சமாதானப்படுத்தும் விதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரைக்கும், நேட்டோ நாடுகள் அளித்திடும் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி,  உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவுடன் சண்டையிட்டு, அதன் பாதிப்புகளால் துயரின் பிடியில் தொடர்ந்து சிக்கியிருப்பது நீடிக்க வேண்டும் என்றே விரும்புகிறது.

ரஷ்யாவைச் சுற்றி  குவிக்கப்படும் படைகள்

நேட்டோவில் பின்லாந்து ஒரு புதிய உறுப்பு நாடாகச் சேர்ந்திருப்பதும், சுவீடன் நேட்டோவை அணு கிக்கொண்டிருப்பதும் இம்மாநாட்டில் முக்கியத்துவம் பெற்றது. இவ்விரு நாடுகளும் சேர்ந்ததன் மூலம், ரஷ்யாவுடனான நேட்டோ ராணுவத்தின் நிலவழி எல்லைகள் (land border) இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகமாகியிருக்கிறது. மேலும் நேட்டோ உச்சி மாநாடானது, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முழு வதும் துருப்புகளையும், ஆயுதங்களையும் குவிப்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை இறுதி செய்துள்ளது. அதாவது தற்போதுள்ள 40 ஆயிரம் துருப்புகளை 3 லட்சம் துருப்புகளாக அதிகரிக்கிறது. இவ்வாறு, நேட்டோ நாடுகளின் துருப்புகளால் ரஷ்யா சுற்றி வளைக்கப்படுகிறது. ரஷ்யாவைச் சுற்றியுள்ள எல்லைகளில் நேட்டோ நாடுகளின் துருப்புகள் நிலைநிறுத்தப்படுவது விரிவுபடுத்தப்படுகிறது. நேட்டோவின் துருப்புகள் ரஷ்யாவின் கிழக்கு எல்லைகளில் விரிவாக்கம் செய்யப்பட்டதுதான் ரஷ்யா, உக்ரைனுடன் மோதுவதற்கு முதலில்  காரணமாக இருந்தது. ஜெர்மனி ஒன்றுபடுத்தப்பட்ட பின்னர், நேட்டோ தன்னுடைய துருப்புகளை கிழக்குப் பகுதியில் விரிவுபடுத்தாது என்று அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் அளித்திருந்த உறுதி மொழிக்கு துரோகம் இழைத்து படைக் குவிப்பை விரிவுபடுத்தின.

உலகளாவிய ராணுவ சூழ்ச்சிகள்

தற்போது வில்நியஸ் பிரகடனம், மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியங்கள் உட்பட உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நேட்டோவின் ராணுவ சூழ்ச்சித் திட்டங்கள்  குறித்துப் பேசுகிறது. இதிலிருந்து அது உலகைத் தன்னுடைய மேலாதிக்கத்தின்கீழ் கொண்டுவர விரும்புவது புலனாகிறது.

சீனாவுக்கு குறி

பிரகடனத்தில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு முக்கியமான அம்சம் சீனா குறித்ததாகும். “சீனம்,  உலகம் முழுதும் தன்னுடைய தடத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக அரசியல் ரீதியாகவும், பொரு ளாதார ரீதியாகவும், ராணுவக் கருவிகள் மூலமாகவும் விரிவான அளவில் திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது,” எனப் பிரகடனத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.  மேலும் சீனா, இணையவழி  செயல்பாடுகள் மூலம் தீங்கிழைத்து, நேட்டோ  கூட்டணி நாடுகளின் பாதுகாப்பிற்கு சேதங்களை  ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும்; முக்கியமான தொழில்நுட்பத் துறைகளையும், உள்கட்டமைப்பு களையும், ராணுவத் தளவாடங்கள் விநியோகத்தை யும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்து கொண்டிருப்பதாகவும் நேட்டோ பிரகடனம் குற்றம்சாட்டி இருக்கிறது.  மேலும், “விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை” சீனா மீறிவிட்ட தாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. “விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு” என்பது,  இரண்டாம் உலகப் போருக்குப்பிறகு, உலகின்மீது  அமெரிக்கா தன் மேலாதிக்கத்தைச் செலுத்துவதற்  காக, உருவாக்கப்பட்டதாகும்.  இவ்வாறு பிரகட னத்தில் சீனா குறிவைத்துத் தாக்கப்பட்டிருப்பதை, வில்நியஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற ‘குவாட்’ QUAD  (நான்கு நாடுகளின் கூட்டணி) மற்றும் ‘ஆக்கஸ்’ நாடுகள் (AUKUS countries) எனப்படும் ஆஸ்திரேலியா, கிரேட் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா கூட்டணி ஆகியவை அங்கீகரித்தன. ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்களும், தென் கொரியாவின் ஜனாதி பதியும் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார்கள். உலகின் கிழக்குப் பகுதியிலும் நேட்டோவை உருவாக்கி, சீனாவைத் தனிமைப்படுத்திட முடியும் என்று அமெரிக்கா நம்புவதாகத் தெரிகிறது.

இந்தியாவின் நிலை

‘குவாட்’  எனப்படும் கூட்டணியில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்தியா வும் ஓர் உறுப்பு நாடாக இருந்த போதிலும், வில்நியஸ் உச்சிமாநாட்டில் இந்தியா பங்கேற்கவில்லை. வில்நியஸ் உச்சி மாநாடு பிரதானமாக ரஷ்யாவுட னான உக்ரைன் மோதல் குறித்து நடைபெற்றதால், இந்தியா தன்னுடைய நடுநிலை நிலைபாட்டின் காரணமாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது. எனினும், நேட்டோ உச்சி மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ள மேற்கத்திய நாடுகளின் இந்தோ-பசிபிக் ராணுவ சூழ்ச்சி நடவடிக்கைகளுக்கு உடன்படும் நிலைக்கு இந்தியா ஏற்கனவே வந்துவிட்டது.

அமெரிக்காவின் சூழ்ச்சி வலையில் ஐரோப்பா

நேட்டோ உச்சிமாநாடு, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் மூர்க்கத்தனமான முறையில் வளர்ந்து கொண்டிருக்கும் ராணுவமயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரண்டாம் உலகப்  போருக்குப்பின்னர், தங்களை இராணுவமயப்படுத்து வதிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெர்மனியும், ஜப்பானும் இப்போது மீண்டும் ராணுவ சக்தியைக் கட்டி எழுப்பும் பாதையில் இறங்கி இருக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி பைடன், உக்ரைன் போர் நீண்ட காலத் திற்குத் தொடர வேண்டுமென்றே விரும்புகிறார். இவ்வாறு நீண்ட நாட்கள் நடைபெறும் யுத்தம் என்பது  ஐரோப்பாவின் மீது தன் மேலாதிக்கத்தை ஒருங்கிணை ப்பதற்கும், சீனாவுடனான மோதலில் தன் பக்கத்தில் ஐரோப்பிய நாடுகளை இணைத்துக்கொள்ள உதவும் என்றும் அமெரிக்கா கருதுகிறது.   இந்தப்பின்னணியில் தான் அமெரிக்காவின் மூர்க்கத்தனமான திட்டங்களுக்கு மோடி அரசாங்கமும் இசைந்து வருவதைப் பார்த்திட வேண்டும்.

ஜூலை 19, 2023 - தமிழில்: ச.வீரமணி 

;