articles

img

தியாகிகள் குமார் - ஆனந்தன் கால் நூற்றாண்டு நினைவுகள் - எஸ்.ஜி.ரமேஷ்பாபு

மின்னும் அந்தத் தாரகைகளை எப்போதும் வாழ்த்திக் கொண்டிருப்போம். தியாகிகள் விதைக்கப்பட்ட வீரிய விதைகள். இதோ தேசம் முழுவதும் வெள்ளை நிறக்கொடியுடன் ஆயிரம் ஆயிரமாய் எழுந்து வருகின்றனர், புதியதோர் உலகம் படைக்க!

அதிர்ச்சி அளிக்கும் விஷச்சாராய சாவுகள் காரணமாக கடந்த ஆண்டு மரக்காணம் ஊடகங்களில் பேசு பொருளானது; இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மரணங்கள் மிகுந்த அதிர்ச்சி யுடன் விவாதிக்கப்படுகிறது. மாவட்டத்தின் தலை நகரில் நீதிமன்றம், காவல் நிலையம், வருவாய்த்துறை அலுவலகங்கள் அருகே அரங்கேறியிருக்கும் அவல மாகும் இது. அரசே மதுபானக் கடைகளை நடத்துவதற்கு சொன்ன காரணம், மதுபான கடைகள் இல்லை எனில் கள்ளச் சாராயமும், விஷச்சாராயமும் பெருகும் என்பது தான். ஆனாலும் காவல்துறை உதவியுடன் கள்ளச் சாராயமும், விஷச்சாராயமும் அமோகமாக விற்பனையாகிக்கொண்டுதான் இருக்கிறது. மக்களும் மரணமடைந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

யார் கதாநாயகர்?

ஆனால் கள்ளச் சாராயத்தை குடித்ததால் மக்கள் மரணமடைந்த செய்திகளை காலம் காலமாக பார்த்துக் கொண்டிருக்கும்  தமிழ்ச் சமூகம், கள்ளச் சாராயத்தை  எதிர்த்த காரணத்தினால் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போனது. அது நடந்து  25 ஆண்டுகள் ஆகிறது. 1999 இல் கள்ளச் சாராய விற்பனை பெரிய அளவுக்கு அதிகரித்த நிலையில், அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கள்ளச் சாராய பானைகள் மீது துப்பாக்கித் தோட்டாக்கள் பாயும்; கள்ளச் சாராயத்தை எதிர்த்து யார் போராடுகிறார்களோ அவர்களை நான் மாலை போட்டு பாராட்டுவேன் என்று சட்டமன்றத்தில் எச்சரித்தார். ஆனால் சில தினங்களில் கள்ளச் சாராயத்தை எதிர்த்துப் போராடிய இரண்டு இளைஞர்களின் உயிரற்ற உடல்களுக்கு  மாலை சூட்டும் நிலை உருவானது.  ஆம், கடலூரில் இந்திய ஜனாநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த தோழர்கள் குமாரும் - ஆனந்த னும் கள்ளச் சாராயவியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் உயிர்த் தியாகம் செய்து 25 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவர்களது தியா கத்தைப் போற்றுவதும், அவர்களின் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் சமூகக் கடமையாகிறது. வாய்ச் சொல் வீரர்களை, சாதியத்தை  உயர்த்திப் பேசுபவர்களை, திரையில் தோன்றுபவர் களை, இனம் சொல்லி அழைப்பவர்களை, ஒற்றை மதத்தை உயர்த்திப் பிடிப்போரை தலைவர்கள் அல்லது கதாநாயகர்கள் என கொண்டாடும் இன்றைய இளம் தலைமுறைக்கு, யார் உண்மையில் கதாநாயகர்கள் என அடையாளம் காட்ட வேண்டியுள்ளது. 

அந்த இருவர்...

9.05.1974 இல் பிறந்த குமார் ஒடுக்கப்பட்ட பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஓர் இளைஞன். கடலூர்  மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டை ரீத்குப்பம் அவர்க ளது பூர்வீகம். தலைமுறை தலைமுறையாக சமூ கத்தால் ஒதுக்கப்பட்ட குடும்பம் அவர்களுடையது. கலிவரதன் மற்றும் சாவித்திரி தம்பதியரின் மூத்த  மகன் குமார்; அவருக்கு மாரிமுத்து மற்றும் கோவிந்த ராஜ் என்ற இரண்டு தம்பிகள். இவர்கள் தங்களது பூர்வீக கிராமத்தை விட்டு பிழைப்பதற்காக கடலூர் நகரம் வந்தனர். கடலூர் நகரம் புதுப்பாளையத்தில் பென்னை ஆற்றங்கரையில் வீடுகட்டி அமர்ந்தனர். அங்குதான் படித்தனர். அநேகமாக அந்த சமூகத்தில் கல்லூரி படித்தவர்களில் இவர்கள் முதல் தலை முறையாய் இருப்பர். 7.07.1977 இல் பிறந்த ஆனந்தன், கடலூர் சிப்காட் சங்கொலி குப்பம் கிராமத்தைச் சார்ந்த பிற்படுத் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தின் நான்கா வது வாரிசு. நடராஜன் மயிலாம்பாள் தம்பதிக்குப் பிறந்த ராஜேந்திரன், வனிதா, வரலட்சுமி, ஆனந்தன், அருணா என்ற ஐந்து குழந்தைகளும் பிறக்கும் முன்பே  இந்தக் குடும்பம் கடலூர் நகரம் புதுப்பாளையத்தில் குடியேறியது. இந்தக் குழந்தைகளின் சிறுவயதிலேயே அவர்களது தந்தை இறந்துவிட்டதால் குடும்பத்தின் பாரம் முழுவதும் அந்தத் தாயின் தோளில்தான் விழுந்தது. இதனால் ஆனந்தன் தனது பள்ளிப் பரு வத்திலேயே வேலை செய்யும் கட்டாயம் ஏற்பட்டது. கிடைக்கும் வேலையைச் செய்து கையில் கிடைக்கும் வருமானத்தை தாயிடம் கொடுத்து வந்தான். தங்கை கள் மீது அளவற்ற பாசம் கொண்டவன்.

விஷம் பரவிய காலம்

குமாரும் ஆனந்தனும் இளைஞர்களாகப் பரிண மித்த 1994 ஆம் ஆண்டில், புதுப்பாளையத்தில் இருந்த இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ் எனும் மதவெறி அமைப்பு திரட்டியது. தொடர்ந்து நான்கு ஆண்டுகள் அப்பகுதி யில் உள்ள சில இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்த னர். குமாரும் இதில் ஈர்க்கப்பட்டான். தினமும் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் பயிற்சி பெற்ற குமார், இஸ்லாமிய மக்களின் மீது விஷத்தைக் கக்கும் நிலைக்குச் சென்றான். விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம் பலத்தில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய 15 நாள் ஷாகாவில் கலந்துகொண்டு திரும்பிய குமார், அங்கு இருந்த ஒரு முஸ்லிம் வீட்டையும், சில கடைகளையும் அடித்து நொறுக்கினான். காரணம் கேட்டபோது ‘அவர்கள் பாகிஸ்தானில் இருக்க வேண்டியவர்கள்’ என்றான்.

நற்பணிகளை நோக்கி 

இந்த அளவு வெறி பிடித்த அந்த இளைஞன்தான், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயல்களால் ஈர்க்கப்பட்டான். இஸ்லாமிய மக்களுக்காக - அவர்க ளைப் பாதுகாக்க பல இயக்கங்கள் நடத்திய வாலிபர் சங்கத்தின் தலைவராக படிப்படியாக உயர்ந்தான்.  1995 ஆம் ஆண்டு வான்மயில் நற்பணி மன்றம் குமாரைத் தலைவராகக் கொண்டு செயல்பட்டது. ஆனந்தன் உள்ளிட்ட பல இளைஞர்கள் தெருவைச் சுத்தம் செய்வது, அங்குள்ள பள்ளிக்கு வெள்ளை யடிப்பது, தெருப் பிரச்சனைகளுக்காக மனு அனுப்பு வது, அப்பகுதியில் நடக்கும் எல்லாவித காரியங்க ளுக்கும் முன்னிலையில் நின்று செயலாற்றுவது என  பகுதி மக்களின் அன்புக்குப் பாத்திரமாய் திகழ்ந்தார்கள்.  அப்பகுதியில் எந்த நிகழ்வு நடந்தாலும் அந்த இளை ஞர்கள் அங்கு பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றியதால், அப்பகுதியில் மக்கள் வாழ்க்கையைப் பாதித்து வந்த - தினம் தினம் அப்பகுதி மக்களின் அமைதியை சீர் குலைத்து வந்த கள்ளச் சாராயக் கடையை எதிர்த்தும் அவர்களின் கவனம் திரும்பியது. அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்த கும்பல், இவர்கள் மீது கொலைவெறி கொள்ளக் காரணம் இது ஒன்றே போதுமானதாக இருந்தது.  இதனிடையே தெருப் பகுதியை சுத்தம் செய்த இளைஞர்கள் இந்த தேசத்தில் மண்டிக்கிடக்கும் வறுமை, கல்வியின்மை, வேலையின்மை,  தீண்டாமை போன்ற குப்பைகளை அகற்றுவது குறித்து சிந்தனை செய்தனர். ஒரு தெருவில் அல்லது ஒரு நகரத்தில் செய்யும் நற்பணிகளால் மட்டும் இந்த தேசத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. இந்தக் தெருவோ அல்லது நகரமோ தேசத்தின் ஒரு பகுதி, எனவே தேசம் தழுவிய மாற்றம்தான் தெருவின் மாற்றத்தைச் சாதிக்கும்; உதாரணமாக தெருவின் பள்ளி கேட்பா ரற்றுக் கிடக்கக் காரணம் அரசின் கல்விக்கொள்கை யுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டும்; மாநிலம், அல்லது நாடு தழுவிய மக்கள் போராட்டம்தான் முழுமை யான மாற்றத்தை உருவாக்கும் என புரிந்து கொண்டனர்.

வாலிபர் சங்கத்தின் கரம் பற்றி...

குமார், ஆனந்தன் உள்ளிட்ட அப்பகுதி இளை ஞர்கள்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் 1997ஆம் ஆண்டு இறுதி மாதத்தில் இணைந்தனர். அனை வருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என முழக்க மிடும் ஒரு தேசம் தழுவிய வாலிபர் அமைப்பில் பணி யாற்றுவது அந்த இளைஞர்களுக்கும் பிடித்திருந்தது. மக்கள் நலன் என்ற மையப் புள்ளியில் அனைவரும் ஒன்றிணைந்தனர்.  1998இல் புதுப்பாளையம் பகுதியில் சுப்பிரமணிய கோயில் தெரு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை அமைப்புக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கிளைத் தலைவராக தாமோதரன், செயலாளராக குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  அந்த நேரத்தில் கள்ளச்சாராயக்கடையை எதிர்த்து வாலிபர் சங்கத்தின் மூலம் போராடியதால் இத்தனை ஆண்டு காலம் சாராய “மாமூல் வாழ்க்கை” வாழ்ந்து வந்த காவல்துறை வேறு வழியின்றி அந்தக் கடைக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கத் துவங்கியது. இதனால் சாராயக்கடை நடத்திய சமூக விரோதிகளின் ஆத்திரம் உச்சத்தை அடைந்தது. எந்த எதிர்ப்பும் இல்லாமல், மாதமொரு முறை மாமூல், கொடுத்தவர்கள் வாலிபர் சங்கம் தட்டிக்கேட்டதால் காவல்துறை வாரம் ஒருமுறை  சோதனை நடத்தியது. வாரம் ஒரு முறை மாமூல் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது.

கள்ளச் சாராயக் கடை மூடப்பட்டதால் கெடிலம் ஆற்றங்கரைக்குச் செல்லும் பெண்கள் நிம்மதி அடைந்தனர். வாலிபர் சங்க இளைஞர்களை வாழ்த்தி னர். இந்தப் பின்னணியில் தான் சமூகத்தின் அமைதி க்கு, கள்ளச் சாராயத்தை எதிர்த்து போராடி வாலிபர் சங்கத் தோழர்களை பலிகொள்ள கூலிப்பட்டா ளம் திட்டமிட்ட நாள் 1999 ஜுன் 26 ஆகும். காவல்துறை யினருக்கு பலமுறை எச்சரிக்கை செய்தும்- அதை  காவல்துறை அலட்சியப்படுத்தியதன் விளைவாக அன்று இரவு குமாரும்  ஆனந்தனும் வெட்டி வீழ்த்தப்பட்டனர். வட மாவட்டங்களில் சாதிக் கலவரங்கள் உச்சத்தில் இருந்த பொழுதில் - சாதிகளைக் கடந்து ஒற்றுமை யாய் களமாடிய குமாரும் ஆனந்தனும் ஒன்றாய் விதைக்கப்பட்டனர். இதோ 25 ஆண்டுகள் கடந்து விட்டாலும் அவர்கள் தமிழக இளைஞர்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் அவர்கள் வாழ்ந்த கடலூர் புதுப்பாளையம் பகுதியில் பல கட்சிகளை சேர்ந்த, பல சாதிகளை சேர்ந்த அனைத்து இளைஞர்களும் ஒன்று திரண்டு இந்த நாளில் அந்த மாவீரர்களுக்கு சிலை திறக்கின்றனர். அவர்கள் விதைக்கப்பட்ட இடத்தில்  வீர வணக்கம் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.  மின்னும் அந்தத் தாரகைகளை எப்போதும் வாழ்த்திக் கொண்டிருப்போம். தியாகிகள் விதைக்கப் பட்ட வீரிய விதைகள். இதோ தேசம் முழுவதும் வெள்ளை நிறக்கொடியுடன் ஆயிரம் ஆயிரமாய் எழுந்து வருகின்றனர், புதியதோர் உலகம் படைக்க!