articles

img

ரயில்வே தனியார்மயத்தை ஒருபோதும் அனுமதியோம்!

நவீன தாராளமயக் கொள்கையின்  மிகவும் முக்கியமான முடிவுகளில் ஒன்று, ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கையை வெட்டிக் குறைப்பது என்பதாகும். நிரந்தரப் பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்தப் பணியிடங்களாக மாற்றப்படும். வேலைகள் வெளியில் கொடுத்து (outsourcing) வாங்கப்படும். பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த  3 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டிருக்கின்றன.

புதுதில்லியில் உள்ள ஹர்கிசன்சிங் சுர்ஜித் பவனில் 2023 ஜூலை 18 அன்று மின்வாரியம் மற்றும் ரயில்வே ஆகியவற்றைத் தனியா ருக்குத் தாரை வார்ப்பதற்கு எதிராக  சிஐடியு சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது ரயில்வே தனியார்மயப் பிரச்சனை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குறிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் சாராம்சம் இங்கு அளிக்கப்படுகிறது. இந்திய ரயில்வே நம் பொருளாதாரத்தின் உயிர் நாடியாகும். நம் மக்களில் பெரும்பாலானவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும்.  நாடு முழுதும் சுமார்  13452 பயணிகள் ரயில்கள் 7,300 ரயில்வே நிலை யங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த ரயில்களில் ஒவ்வொரு நாளும் 2 கோடியே 40 லட்சம் பயணிகள் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இத்துடன் இந்திய ரயில்வேயில் 9141 சரக்கு ரயில்கள் (goods trains) மூலமாக, சுமார் 1.42 பில்லயன் மெட்ரிக் டன்  அளவுள்ள, உணவு தானியங்கள் மற்றும் இதர பொருள்கள்; சாமானிய மக்களுக்கும், விவசாயம் மற்றும் தொழில்துறைக்கும் தேவையான சரக்குகள் மற்றும் இதர பொருள்கள் எடுத்துச் செல்லப்படு கின்றன.

மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் இத்தகைய சிறப்புமிகு பொதுப் போக்குவரத்துத் துறையைத்தான் ஒழித்துக்கட்ட விரும்புகிறது. இதனை பெரும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்திட  தீர்மானித்திருக்கிறது. தனியார் கார்ப்ப ரேட்டுகள் எவருமே இதன் உள்கட்டமைப்பு வசதி களை உருவாக்கியதில் எவ்விதமான முதலீட்டையும் இதுவரை செலுத்தாதவர்கள். மக்களின் பணத்தில் கட்டப்பட்ட ரயில்வேயைக் கொண்டே மக்களைச் சூறையாடவும், கொள்ளை லாபம் ஈட்டவும் அவர்களுக்கு வழிவகை செய்துதர மோடி அரசாங்கம் துடித்துக் கொண்டிருக்கிறது. தனியார்மயம் என்பது நவீன தாராளமயக் கொள்கையின் முக்கியமான கூறுகளில் ஒன்று.  இந்திய ரயில்வேயைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் முயற்சிகளும் நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியேயாகும். மோடி ஆட்சிக்கு வந்த பின் அமைக்கப்பட்ட விவேக் தேவ்ராய் குழு  (Bibek Debroy Committee) அளித்திட்ட பரிந்துரை களின்படி ரயில்வே செங்குத்தாகவும் நீள்வாட்டத்தி லும் (vertically and horizontally) துண்டாகும் செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ரயில்வேயைத் தனியாருக்குப் பகுதி பகுதியாக தருவதற்கு வசதி செய்து தருவதற்காகவே இந்த ஏற்பாடுகள் அனைத்தும். மேலும், இந்திய ரயில்வே மேற்கொண்டு வந்த அனைத்துச் செயல்களும், அதா வது கட்டுமானம், இயக்கப்படுதல், நிர்வகித்தல், ரோலிங் ஸ்டாக், முக்கிய ரயில்பாதைகள், ரயில் பெட்டி கள் தயாரித்தல் போன்ற அனைத்திலும் அந்நிய நேரடி முதலீடு 100 விழுக்காடு அறிவிக்கப்பட்டி ருக்கிறது.

ரயில்வேயின் சொத்துக்களை விற்று காசாக்கத் திட்டம்

மோடி அரசாங்கம், நாட்டின் சொத்துக்களை விற்றுக் காசாக்கும் திட்டமான தேசியப் பண மாக்கல் திட்டத்தின் (National Monetisation Pipeline) மூலமும் ரயில்வேயின் சொத்துக்களை விற்றுக் காசாக்கும் திட்டத்தையும் பிரதானமாகக் கொண்டிருக்கிறது. ரயில்வேக்குச் சொந்தமாக இப்போது இருந்துவரும் ரயில் நிலையங்கள், ரயில்  நிலையங்களைச் சுற்றியுள்ள ரயில்வேக்குச் சொந்த மான இடங்கள், ரயில்வே பாதைகள், ரயில்கள், சரக்கு ஷெட்டுகள், ரயில்வே குடியிருப்புப் பகுதிகள் (காலனிகள்), ரயில்வே ஸ்டேடியம்கள் முதலான வற்றையும் தனியாரிடம் நீண்ட கால குத்தகைக்குத் தாரை வார்த்திட முடிவு செய்திருக்கிறது.  

தனித்தனியாகப் பிரித்து விற்க சதித் திட்டங்கள்

இந்திய ரயில்வே இப்போது உலகில் மிகப்பெரிய வலைப்பின்னலுடன், முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்பட்டு வருகிறது. இதனை ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக, துண்டு துண்டாக்கி, பாதுகாப்பு அம்சங்களைப் பற்றியோ, பயணிகளின் பாதுகாப்பு பற்றியே கிஞ்சிற்றும் கவலைப் படாமல், தனியாரிடம் தாரை வார்த்திட முடிவு செய்திருக்கிறது மோடி அரசு. தனியாரிடம் தாரைவார்த்திடும் நடவடிக்கைகளை மக்களிடமிருந்து மறைப்பதற்காக, தனியார்மயம் ‘உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை அளித்தி டும்’ (‘world class travel experience’) என்றும், இது  சாமானிய மக்களுக்குப் பயனளிக்கும் என்றும், ரயில்வேயில் தனியார் முதலீடு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் என்றெல்லாம் கூறி,  மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. இவர்களின் கூற்றுகளுக்கும் உண்மை நிலைமைகளுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.

ரயில்வே தனியார்மயமானால் உண்மையில் என்னவாகும்?

ரயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டால் ‘உலகத் தரம்வாய்ந்த ரயில் நிலையங்களை உருவாக்குகிறோம்’ என்ற பெயரில், ஒட்டுமொத்த ரயில் நிலையமும் அதனைச் சுற்றியுள்ள நிலங்களும் தனியார்வசமாகும். ரயில் டிக்கெட்டுகள், இயங்கும் பணி மட்டும் ரயில்வேயிடம் இருந்திடும். பிளாட்பாரம் டிக்கெட்டுகள் விற்பது, உணவுப் பண்டங்கள் விற்பது, வாகனங்கள் நிறுத்துமிடம், விளம்பரங்கள் செய்யும் உரிமைகள் முதலானவை தனியாரிடம் ஒப்படைக்கப் படும். இதனை அமல்படுத்துவதற்காக அரசாங்கம் இந்தியன் ரயில்வே ஸ்டேஷன் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (IRSDC-Indian Railway Station Development Corporation) என்னும் நிறு வனத்தை உருவாக்கி இருக்கிறது. தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ரயில்வேயின் நிலங்களை அவர்கள் தங்கள் விருப்பம் போல் வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள லாம். ஓட்டல்கள் கட்டலாம், ஷாப்பிங் மால்கள்  கட்டலாம், என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ள லாம்.

இதன் விளைவுகள்  எப்படி இருக்கும்?

  1.     ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள சேரிகளில் காலங்காலமாக வாழ்ந்துவரும் ஏழை மக்கள்  அந்த இடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்படு வார்கள். அவர்கள் வீடற்றவர்களாக வீதிகளில் நிற்பார்கள்.
  2.     ஏழை ரிக்சாக்காரர்கள், ஆட்டோ டிரைவர்கள் ரயில் நிலையங்கள் அருகே தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாது.
  3.  சாமானிய பயணிகளும்கூட உள்ளூரில் தங்களுக்குத் தேவைப்படும் போக்குவரத்திற்காக, கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்தில் வாகனங் களை அமைத்துக் கொள்ள முடியாது.
  4.      வெகு தூரங்களிலிருந்து வரும் பயணிகள் ரயில் நிலையங்களின் நடைமேடைகளில் காத்துக் கொண்டிருப்பதற்கும் அனுமதிக்கப்படமாட்டார் கள். அவர்கள் இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ள இடங்களில் கட்டணம் செலுத்தித்தான் காத்திருக்க வேண்டும். ரயில்களில் ஏறுவதற்கு மட்டுமே அவர்களுக்கு நடைமேடை பயன் படுத்திட அனுமதிக்கப்படும்.  

மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஹபிப்கஞ்ச் ரயில் நிலையம் (இப்போது ராணி கமலாபதி நிலையம் என பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), பன்சால் குழு மத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டி ருக்கிறது. குஜராத்தில் காந்தி நகர் ரயில் நிலையமும் அதானி மற்றும் எல்டெகோ உள்கட்டமைப்பு நிறு வனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதுபோல் ‘உலகத்தரம்’ வாய்ந்த நிலையங் களாக மாற்றிட மோடி அரசாங்கம் 400 ரயில் நிலை யங்களை அடையாளம் கண்டிருக்கிறது. இவற்றிற் காக டெண்டர்கள் விடப்பட்டிருக்கின்றன. இந்த ரயில் நிலையங்களில் புதுதில்லி, மும்பை, ஹவுரா, சென்னை, பெங்களூரு, செகந்திராபாத், விஜயவாடா முதலானவையும் அடங்கும்.

 சாமானிய மக்கள் ரயில்களைப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும்

ரயில் கட்டணங்கள் இனி அதற்கான செல வினத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். தற்சமயம் பயணிகளின் ரயில் கட்டணங்களில் 53 விழுக்காடு அதன் செலவினத்தையும் (cost), 47 விழுக்காடு அரசின் மான்யத்  தொகையையும் கொண்டிருக்கின்றன. இனி இந்த மானியத்தொகை இருக்காது. அது விலக்கிக்கொள்ளப்படும். இத னால் இப்போதுள்ள ரயில் கட்டணங்கள் உடனடி யாக இரட்டிப்பாகும். இத்துடன் கார்ப்பரேட்டுகளைக் குஷிப்படுத்துவதற்காகவும் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படும். ஏற்கனவே பல ரயில்நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் விலை 50 ரூபாய்க்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. பல வழித்தடங்களில் தனியார் ரயில்கள் விடப்பட  இருக்கின்றன. இவ்வாறு விடப்படும்போது அதற்கு  ஒரு மணி நேரத்திற்கு முன்பும், ஒரு மணி நேரத்தி ற்குப் பின்பும் அரசு ரயில்கள் விடப்படமாட்டாது.  இதனால் அவசரமாகச் செல்ல வேண்டும் என்றுள்ள  பயணிகள் தனியார் ரயிலில்தான் அதிகக் கட்டணங்கள் கொடுத்துப் பயணிக்க வேண்டும். இப்போது ஐஆர்சிடிசி மூலமாக தனியார் மூலமாக, தில்லிக்கும் லக்னோவிற்கும் இடையே ‘தேஜாஸ் ரயில்’ விடப்பட்டுள்ளது. இதன் ரயில் கட்டணம்  700 ரூபாயிலிருந்து 900 ரூபாயாகும். இதன் கட்ட ணங்கள் 4,700 ரூபாயாக உயர்த்தப்படஇருக்கின்றன. இப்போது விமானப் பயணங்களில் உள்ளது போன்று விரும்பும் இடத்திற்கும், லக்கேஜுகளுக்கும் தனித்தனியே கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இவையெல்லாம் டிக்கெட் கட்டணத்தில் இடம் பெறாது. ரயிலில் உணவு, படுக்கை வசதிகள், வைஃபி வசதிகளுக்குத் தனியே கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

பாரத் கவுரவ் ரயில்கள்

சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக பாரத்  கவுரவ் ரயில்கள் விடப்பட்டிருக்கின்றன. இவற்றைத்  தனியார் நிறுவனங்களே இயக்கிக் கொண்டிருக் கின்றன. கட்டணங்கள் மற்றும் வழிகள் முதலானவை அவர்கள் வைத்ததுதான்.

சலுகைகள் ரத்து

ரயில் கட்டணங்களில், மூத்த குடிமக்கள், குழந்தை  கள், மாற்றுத் திறனாளிகள், புற்று நோயாளிகள்,  மாணவர்கள் முதலானவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும், தனியாரிடம் ரயில் போக்குவரத்து தாரைவார்க்கப்பட்டபின் இயற்கை யாகவே,  ரத்து செய்யப்பட்டுவிடும். ஏற்கனவே மூத்த  குடிமக்கள் பெற்றுவந்த சலுகைகள் ரத்தாகிவிட்டன. இப்போதே ரயில்வே நிர்வாகம் பயணிகளை பல வழிகளில் சூறையாடும் நடவடிக்கைகளில் இறங்கி விட்டது. ரிசர்வ் பெர்த்துகள் கடுமையாகக் குறைக்கப்பட்டுவிட்டன. தட்கல் கோட்டா மூலம்  அளிக்கப்படும் பெர்த்துகள் அதிகப்படுத்தப்பட்டுள் ளன. மோடி அரசாங்கம் 2014இல் பிரிமியம் தட்கல் என்னும் முறையைக் கொண்டுவந்தது. இது தட்கல் கட்டணத்தைப்போல் இரண்டு மடங்காகும். 2016இல் ‘டைனமிக் பிரைசிங்’ (‘dynamic pricing’) என்னும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு 10 விழுக்காடு பெர்த்துகள் நிறைந்த பின்னும், 10 விழுக்காடு கட்டணம் உயர்த்தப்படும். இப்போது ஸ்லீப்பர் கோச்சுகளாக இருப்பவை யெல்லாம் படிப்படியாக ஏசி கோச்சுகளாக மாற்றப்படும். சாமானிய பயணிகள் பயணம் செய்வதற்கான பொதுப் பட்டியல் (ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டுகள்), ஜெனரல் ரிசர்வ் பெர்த்துகள் படிப்படியாகக் குறைக்கப்படும். இதனால் பொது பெட்டிகளில் பய ணிகள் பயணம் செய்வது மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும். ரயில் விபத்துகள் அதிகம் நடைபெறு வதற்கும்  இதில் ஏராளமானவர்கள் இறப்பதற்கும் இது ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் இதைப்பற்றி யெல்லாம் மோடி அரசாங்கம் கவலைப்படவில்லை.

ரயில்வே ஊழியர்கள் நிலை

நவீன தாராளமயக் கொள்கையின் மிகவும் முக்கியமான முடிவுகளில் ஒன்று, ரயில்வே ஊழி யர்களின் எண்ணிக்கையை வெட்டிக் குறைப்பது என்பதாகும். நிரந்தரப் பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்தப் பணியிடங்களாக மாற்றப்படும். வேலைகள் வெளியில் கொடுத்து (outsourcing) வாங்கப்படும். பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த சுமார் 3 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டிருக்கின்றன. வேலையில் இருக்கும் ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்தி ருக்கிறது. ஓடும் ரயில்களில் பணிபுரியும் ஊழியர்கள் சுமார் 14-16 மணி நேரம் வேலை செய்யக் கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.   இவ்வாறு மோடி அரசாங்கத்தின் ரயில்வேயைத் தனியார்மயமாக்கும் கொள்கை மக்களுக்கும், ரயில்வே ஊழியர்களுக்கும், நாட்டுக்கும் பேரழி வினை ஏற்படுத்திடும். ஆயினும் மோடி அரசாங்கம் தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வதிலேயே சுகம் காணுகிறது. நாட்டை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள தொழிலாளர் வர்க்கமும், உழைக்கும் மக்களும் இந்த அநியாயங்களை யெல்லாம் கண்டும் காணாமல் இருந்துவிட முடியாது. இதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்திட வேண்டும்.   ரயில்வேயைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டையும் நாட்டு மக்களையும் ரயில்வே ஊழியர்களையும் பாது காத்திட வேண்டும்.  

தமிழில்: ச.வீரமணி


 

;