articles

img

‘வெட்டுக்கிளிகள் மத யானையைச் சாய்க்கும்’ - மல்லை சி. ஏ. சத்யா

தலைமுறைக்கு ஒருமுறை பூக்கும் மூங்கில் பூவைப் போன்று மூங்கில் தேசமான வியட்நாம் நாட்டில் 18 ஆம் நூற்றாண்டில் பிறந்த மார்க்ஸிய போராளி ஹோ சி மின் அவர்களின் 135 வது பிறந்தநாள் இன்று.  வியட்நாம் நாட்டில் வீரத்தின் விளைநில மாகத் திகழ்ந்த புகழ்பெற்ற கியான் வட்டாரத்தின் சிம்லியன் என்ற ஊர். இங்கு வாழ்ந்த மக்கள் ஏழைகள் ஆனால் கோழைகள் அல்ல. இங்கு  வாழ்ந்த குயென் சின் காக், பேரறிஞர் கன்பூசி யஸ் தத்துவத்தை உள்வாங்கி சிவில் நிர்வாகத் துறையில் பயோபங் பட்டம் பெற்று மக்களின் நலனே தன் நலன் என்று வாழ்ந்து வந்தார்.  இவருக்கு 19.05.1890 ஆம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தைக்கு குயென் டாட் தாங் என்று பெயர் வைத்து மகிழ்ந்தனர். பின்னர் குயென் புரட்சிப் பாதையில் பல்வேறு பெயர் களில் இயங்கி 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனப் பயணத்தின் போது வைத்துக் கொண்ட பெயர் ஹோ சி மின். அதுவே நிலைத்து விட்டது.  ஹோ சி மின், கன்பூசியஸ் தத்துவத்துடன் மார்க்சியத்தை உள்வாங்கி அடிமைத் தளையி லிருந்து தன் தாய் நாட்டை விடுவிக்க அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரான்ஸ், ஜப்பான், சீனா என்று பல்வேறு நாடுகளுக்கு நாடோடியைப் போன்று சென்று கடும் சித்ர வதை, சிறைத் தண்டனை, தலைமறைவு, மரண தண்டனை என்று பல துயரச் சிலுவைகளை தூக்கிச் சுமந்து, இறுதியாக மக்களைப் பண் படுத்தி புரட்சிப் பாதையில் வெற்றி பெற்ற மகத்தான மார்க்சியப் போராளி ஹோ சி மின் அவர்கள்.

 சின்னஞ் சிறிய நாடு வியட்நாம். இந்தியா - சீனத்திற்கு இடையே உள்ள நிலப்பரப்பு வியட்நாம் கம்போடியா, லாவோஸ் இந்த நிலப் பரப்பில் உள்ள கனிமவளங்களை சுவீகரித்துக் கொள்ள ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் அன்றைய ஜப்பான் பிடியிலிருந்த சீனா ஆகிய நாடுகள்  இப்பகுதியைத் தங்கள் காலனி நாடுகளாக ஆக் கிரமிப்பு செய்து கொண்டனர். ஏகாதிபத்திய அடிவருடிகளாக உள்நாட்டு நிலப்பிரபுக்கள் நிலவுடமையாளர்கள் மாறி இருந்த வேளை.  நதியிலே வெல்லம் கரையிலே நெருப்பு இந்த இரண்டுக்கும் இடையே உள்ள தகிப்பைப் போன்று எதிரிகளின் முகப்புற சவாலை யும் உள்நாட்டு நிலப்பிரபுக்களின் முதுகுப்புற சவாலையும் எதிர்கொண்டு ஒவ்வொரு நாட்டு ஏகாதிபத்தியத்திடம் இருந்து வியட்நாம் விடுதலை பெறவேண்டும்; அதற்கு பிறநாட்டின் உதவியை எதிர்பாராமல் வியட்நாம் மக்களைப் புரட்சியில் பங்கேற்க வைக்க மக்களைத் தயார்ப்படுத்த பாசறைகள் அமைத்து சுதந்திர தாகத்தை ஊட்ட ஹோசிமின் மேற்கொண்ட போராட்டங்கள் சொல்லி மாளாது.  வியட்நாம் பிரான்ஸ் நாட்டு ஏகாதிபத்தியத் தின் காலனி நாடாக இருந்த போது பிரான்ஸ் நாட்டை அறிந்து கொள்ள 1911 ஆம் ஆண்டு கப்பல் ஊழியராக பணியாற்றிக் கொண்டு அமெரிக்கா நியூயார்க் நகரில் கப்பலில் இருந்த போது வேலையை விட்டு விலகி புரூக்ளின் நகரத்தில் சிலமாதங்கள் தங்கியிருந்த போது முன்னேறிய நாடு அமெரிக்காவில் நிலவிய நிறவெறியைக் கண்டு வெறுப்புற்றார்.  1914 உலகப் போர்த் துவங்கிய கால கட்டத்தில் இங்கிலாந்து சென்று பின்னர் 1917 ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்று சென்று சேர்ந்தார்.  அப்போது மாவீரர் லெனின் தலைமையில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி சோவியத் யூனியன் விடுதலை பெற்றது. அந்தத் தாக்கத்தின் காரணமாக 1918 பிரான்ஸ் சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். ஹோசிமின் இதன் மூலம் வியட்நாமின் முதல்  சோசலிஸ்ட் என்ற பெருமை கொண்டு பிரான்ஸில் தங்கி இருந்த காலத்தில் பல்வேறு நாட்டுப் போராளிகளின் கருத்தியலை உள்வாங்கி 1921-இல் அதுவரை தான் பெற்ற அனுபவங்களை கொண்டு சர்வதேச காலனி நாடுகள் லீக் என்னும் அமைப்பை உருவாக்கி அதன்மூலம் அடிமைத் தளையிலிருக்கும் நாடு களை விடுதலைப் பெற வைப்பது; அதற்கு உறுதுணையாக ‘லேபாரிய’ என்ற பத்திரிகை யை துவங்கி புரட்சிகர கருத்தை பதிவு செய்து வெளியிட்டு வந்தார். 

உலகத்தின் முதல் பொதுவுடைமை நாடான சோவியத் யூனியன் செல்ல திட்டமிட்டு 1923 ஆம் ஆண்டு பயணத்திற்கு ஆயத்தமாகிறார் ரஷ்யப் புரட்சி பெற்றெடுத்த பிள்ளைகளுள் வியட்நாமும் ஒன்று. மாஸ்கோ, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளின் வரவேற்பு நுழைவு வாயில். பாசிசத்திற்கு எதிராக போராடும் போராளிகளின் இரண்டாவது தாய் வீடு.  சோவியத் ரஷ்யாவின் மீது என்றைக்கு ஹிட்லர் தாக்குதலைத் தொடங்குகிறாரோ அன்றைக்கே ஜெர்மானிய நாசிசத்தின் வீழ்ச்சித் தொடங்கி முடிவில் பாசிசம் வேரோடும் வேரடி மன்னோடும் சாய்க்கப்பட்டு உலகளா விய நாடுகளில் பொதுவுடைமை மலரும்; ரஷ்யா பெறும் வெற்றியின் துவக்கம் வியட்நாம் புரட்சிக்கு தொடக்கமாக அமையும் என்று உறுதியாக நம்பிய புரட்சி நாயகன் ஹோ சி மின்.  பிரான்ஸிலிருந்து வெளியேறி தலைமறை வாகப் போகும் முன் தன் தோழர்களுக்கு தன் திட்டத்தை விளக்கி கடிதம் எழுதுகிறார்:  “எனது பாசத்திற்குரிய தோழர்களே! நம் அனுபவத்தில் பிரான்ஸ் நாட்டின் இரண்டு முகங்களை கண்டோம். ஒன்று ஏகாதிபத்திய வெறிக்கொண்ட இறுமாப்பு அடக்குமுறை சுரண்டல் வெறி கொண்ட பிரான்ஸ். மற்றொரு முகம் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்று உரைத்த ஜனநாயக பிரான்ஸ் இதுதான் உண்மையான பிரான்ஸ் நாடு.  இதனை நமக்கு ஆதரவு சக்தியாக தட்டி எழுப்புவதில் வெற்றி பெற்றுள்ளோம்.  எனதருமை தோழர்களே உங்கள் அனை வரையும் பிரிந்து செல்வது மிகுந்த வருத்த மாக உள்ளது. தோழர்களே அடிமைச் சங்கிலி யை பொடி பொடியாக்கிவிட்டு நாம் சுதந்திர வீரர் களாக மீண்டும் சந்திப்போம்” என்று சொல்லி 1923 ஆம் ஆண்டு ஜெர்மன் வழியாக சோவியத் யூனியனுக்கு உள் நுழைகிறார். நோக்கம் ஒன்று தான் வரலாற்று நாயகன் ரஷ்யாவின் வெற்றித் திருமகன் புரட்சியாளர் லெனின் அவர்களை எப்படியாவது சந்தித்துப் பேசவேண்டும் என்ற ஆவல். ஆனால் கடைசி வரை அவரைச் சந்திக்க முடியாமல் 21.01.1924 அன்று மாவீரர் லெனின் இயற்கை எய்தினார். அவரின் உயிரற்ற பூதவுடலுக்கு உரை பனி யில் கடும் குளிரில் சென்று அஞ்சலி செலுத்தி நினைவிழந்து மயக்கம் உற்றார் ஹோ சி மின். 

 1925 ஜூன் மாதம் லெனினியப்பாதையில் வியட்நாம் விடுதலையை விரும்பும் இளைஞர் களைக் கொண்டு வியட்நாம் புரட்சிகர இளை ஞர் சங்கம் உருவாக்கி தான் நியென் என்னும் பத்திரிக்கையை தொடங்கி அதன் மூலம் விடு தலை தாகத்தை கிளர்ந்து எழச்செய்யஎழுதினார்.   1944 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வியட் நாம் திரும்பி புரட்சிப் படைகளை உருவாக்கி கொரில்லா யுத்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.  1945 ஆகஸ்ட் 16 ஜப்பான் சரணடைந்தது. 1945 செப்டம்பர் 2 இரண்டாயிரம் ஆண்டுகால முடியாட்சி 80 ஆண்டுகால காலனி ஆட்சியை சில ஆயிரம் பேர் கொண்ட புரட்சிப் படை வென்றது. மக்கள் எழுச்சி கொண்டனர். ஹோ  சி மின் தலைமையில் இடைக்கால அரசு உரு வாக்கப்பட்டது. வியட்நாம் வியட்நாமியருக்கே; உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று அறிவித்து நிலம் பகிர்ந்து அளிக்கப்பட்டது.  1946 ஜனவரி 6 ஆம் நாள் நடைபெற்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று  1950 ஆம் ஆண்டு அனைத்து நாட்டுத் தலைவர் களுக்கும் கடிதம் எழுதி தூதரக உறவை ஏற்படுத்தினார்.  மரம் ஒய்வு எடுக்க விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை என்ற மாவோ வின்  பொன்மொழிக்கு இனங்க மழை விட்டும் தூவா னம் விடவில்லை என்பதைப் போன்று பிரான்ஸ் நாட்டின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கள மாடினார். 

“செயல் தந்திரத்தில் நெகிழ்ச்சியுடனும் இருந்து எதிரியின் அணிவகுப்பில் உள்ள முரண்பாடுகளை திறமையுடன் பயன்படுத்தி ஊடறுத்து உள்ளே சென்று அவர்களை பிரித்து அதில் மிகவும் ஆபத்தான எதிரிகளை முற்றிலும் தனிமைப்படுத்தி அழித்தொழித்து புரட்சிகர அதிகாரத்தை தக்க வைப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் சாதகமான நிலைமை களை உருவாக்குவோம்; எதிரியின் பலம் சூரிய அஸ்தமனம் போன்றது அணையப் போகின்ற விளக்கைப் போன்று ஆணவம் அதிகாரம் இருந்தாலும் அது மறையப் போகிறது நம்முடைய பலம் என்பது அணைவிட்ட நீர்  போன்றது, புயல் தொட்ட நெருப்பை போன்றது,  வில்லிருந்து புறப்பட்ட அம்பைப் போன்றது; ராணுவம் மக்களிடம் இருந்துதான் உருவா கிறது, மக்களுக்காக போர் செய்கிறது, அந்த ராணுவமும் மக்களும் மீனும் தண்ணீரும் போன்றவர்கள்; வெட்டுக்கிளிகள் மதயானை யை சாய்க்கும், சிட்டுக்குருவிகள் வல்லூரை வீழ்த்தும் - என்ற பொன்மொழிக்கு ஒப்ப புரட்சிப்  படையுடன் விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர் வர்க்கமும் இணைந்து 15 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பிரஞ்சு படையை தியென்பி யென் யூ என்னும் இடத்தில் சுற்றி வளைத்து எங்கும் நகர முடியாமல், ஏன் இருந்த இடத்தை விட்டு அசைய முடியாமல் இருக்க வியூகம் அமைக்கப்பட்டு ஏழை குடியானவர்களின் உதவியோடு யாருக்கும் தெரியாமல் 300 கிலோமீட்டர் தூர சாலையும் தற்காப்புக்கான பதுங்கு குழிகளையும் அமைத்து 1954 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி பிரெஞ்சு படையின்  மீது திடீர் தாக்குதலை நடத்தி நிலைகுலைய வைத்து இருபதுக்கும் மேற்பட்ட பிரான்ஸ் நாட்டு ராணுவ விமானங்களை ஓடுபாதையில் சுட்டு வீழ்த்தினார்கள். 55 நாட்களாக நடைபெற்ற  போரில் இறுதி வெற்றியை வியட்நாம் தனதாக்கிக் கொண்டு போர் நிறுத்தத்தை முந்தி அறிவித்து மூன்றாவது நாட்டின் தலைமை யில் பேசத் தயார் என்று அறிவித்தார் ஹோ சி மின். இந்தப் போர் எங்கள் மீது திணிக்கப்பட்டதாகும், எங்களது சுதந்திர உரிமையை பாதுகாத்துக் கொள்ளவே ஆயுதம் ஏந்தி போர்க்களத்தில் நிற்கின்றோம், நாங்கள் இறுதி வெற்றி பெறும் வரை போராடுவோம் என்று உறுதியாக இருந்தனர். 

பின்னர் சோவியத் யூனியன் முன்னெடுப்பில் சர்வதேச மாநாட்டை ஜெனிவா வில் 1954 ஜூலை மாதம் 17 ஆம் தேதி முன்னெடுத்து வியட்நாமின் அமைதியை நிலைநாட்டவும் சுதந்திரத்திற்கு உறுதி அளித்தும் வடக்குத் தெற்குப் பகுதி இணைத்து  பொது தேர்தலை நடத்தி சுதந்திர இறை யாண்மை கொண்ட புதிய ஆட்சியை மலர செய்ய முடிவு எடுக்கப்பட்டது தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.  1954 ஜூலை மாதம் கொரில்லாப் படை வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து விட்டு  தலை நகர் ஹானோய்க்கு தனது படை வீரர்களுடன் சென்றபோது வியட்நாமின் வீரப் புதல்வன் ஹோ சி மின் வாழ்க என்று மக்கள் மலர் தூவி வரலாற்று நாயகனை வரவேற்றார்கள்.  ஜெனிவா ஒப்பந்தத்தின்படி தேர்தலை எதிர்பார்த்தார்கள். ஆனால், வியட்நாம் முழு மைக்கும் விடுதலை கொடுக்க அமெரிக்கா விரும்பாமல் தங்களுக்கு சாதகமான பொம்மை அரசை தெற்கு வியட்நாமில் பேராசிரியர் கோதின் தியெம்  தலைமையில் உரு வாக்கி குழப்பத்தை விளைவித்தது அமெரிக்கா.  அமெரிக்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங் களும் கிளர்ச்சிகளும்  முழு வீச்சாக நடை பெற்றது.  1960 ஆம் ஆண்டு அமெரிக்க கட்டுப்பாட்டில் இருந்த தெற்கு வியட்நாமை மீட்க யுத்தம் மூண்டது.  இந்த போர் ஆண்டுகள் பலவாக நீடிக்க லாம், நாட்டின் வளங்கள் முற்றிலுமாக அழிய லாம், ஆனால் நாம் உறுதியுடன் இறுதிவரை போராட வேண்டும், நாட்டு விடுதலையைக் காட்டிலும் உலகில் வேறு ஒன்றும் பெரிதில்லை என்று வானொலியில் பேசினார் ஹோ சி மின். 10 லட்சம் மக்கள் கிளர்ந்து எழுந்து வீதிக்கு வந்தனர்.  ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவை எதிர்த்துப் போராட சோசலிச நாடான சோவியத் ரஷ்யாவும் ஏனைய சோசலிச நாடுகளும் துணை நின்றன. ஆயுதப் பயிற்சியும் ஆயு தங்களும் வழங்கி உதவின. ஆதரவு சக்தி கிடைத்த மாத்திரத்தில் மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள்.

அதே வேளையில் எதிர்பாராத விதமாக ஹோ சி மின் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு நினைவு பிறழ்ச்சி ஏற்பட்டது. தனக்கு நினைவு வரும்போதெல்லாம் அமெரிக்கா வுக்கு எதிரான தெற்கு வியட்நாம் போரைப் பற்றியே கேட்டுக் கொண்டு இருந்த தலைவர் ஹோ சி மின், போரில் வெற்றிபெற்று வடக்கு, தெற்கு வியட்நாம் ஒன்று பட்ட நாடாக இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைச் சொல்லி உயிர் துறந்தார்.  மக்கள் தங்கள் தலைவனின் கனவை வென்றெடுக்க அமெரிக்காவுக்கு எதிரான வீரம்  செறிந்த போராட்டத்தை நடத்தி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திகிலுர வைத்து அகிலம் வியக்கும் வண்ணம் வெற்றிவாகை சூடினார்கள்.  1975 ஏப்ரல் 30 ஆம் நாள் தெற்கு வியட்நாம் தலைநகர் சைக்கோனில் பொன்னிற நட்சத்திரம் பொறிக்கப்பட்ட செங்கொடியை ஏற்றி வைத்து தங்கள் தலைவர் ஹோ சி மின் அவர்கள் கண்டகனவை நனவாக்கினார்கள்.

ஹோ சி மின் புகழ் ஓங்குக! 
புரட்சி வெல்க!

;