articles

img

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் நடத்துநராகத் தொடங்கி சங்கத்தை வழிநடத்திய தோழர் -ஜி.ராமகிருஷ்ணன்

“இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத் தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறேயாகும்,” என மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் இருவரும் இணைந்து வெளியிட்ட ‘கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கை’ ஆவணத்தில் பொ றித்திருக்கிறார்கள். வரலாறு பற்றிய புதிய பார்வையை அவர்கள் அளித்தார்கள். வர்க்கப் போராட்டத்தை வழிநடத்து கிற, பங்கேற்கிற, ஆதரிக்கிற அனைவருமே  வரலாற்றை வடிவமைப்பதில் முக்கியத்து வம் பெறுகிறார்கள். தமிழகத்தில் தொழி லாளர்கள், விவசாயிகள் நடத்திய வர்க்கப்  போராட்டங்களில் பங்கேற்று வரலாற்றுப் பங்களித்த தோழர்கள் பலரும் ‘களப்பணி யில் கம்யூனிஸ்ட்டுகள்’ தொடரில் அறிமுக மாகியுள்ளார்கள். அரசுப் போக்குவரத்துத் துறைத் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்ற, வழிநடத்திய தோழர் எ.ரைமண்ட் பங்களிப்பு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கிராமத்திலிருந்து சென்னைக்கு

குமரி மாவட்டத்தின் குளச்சல் பகுதியில் கொட்டில்பாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் குடும்பத்தில் 1938இல் பிறந்த வர் ரைமண்ட். மீன்பிடி தொழிலை மட்டுமே  நம்பியிருந்த ஏழைக் குடும்பம் அது. இதனால் பள்ளியிறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) முடித்தும் உயர்கல்விக்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. வழக்கறிஞர் ஜேம்ஸ் ஆலோசனைப்படி சென்னைக்கு வந்து பேருந்து நடத்துந ருக்கான உரிமம் பெற்று 1964இல் எம்.எஸ்.டி. டி.-யில் (மெட்ராஸ் ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்ட்) வேலையில் சேர்ந்தார். சில நாட்களில் ஏஐடியுசி தலைமையிலான தொழிற்சங்கத்தில் உறுப்பினரானார். போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக மட்டுமல்லாமல், நிர்வாகம் மேற்கொண்ட  பழிவாங்கும் போக்கை எதிர்த்தும் வீர மிக்க பல போராட்டங்களை நடத்தியிருக்கி றார்கள். அவற்றிலெல்லாம் ரைமண்ட் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். 1964ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை இயக்குநராக இருந்த டி.என்.சேஷன் அவர்களின் அதிகார வர்க்க ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் மீது  காவல்துறை தடியடி நடத்தியது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பூ. நாராயணமூர்த்தி, ரைமண்ட் உள்ளிட்டு 48 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டதில் அவர்களில் ஒரு பகுதியினர் திரும்பவும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். ஒரு பகுதி தொழிலாளர்கள் 1967இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தோழர் வி.பி.சிந்தன் முன்முயற்சியில் அன்றைய போக்கு வரத்துத் துறை அமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலையில் சேர்க்கப்பட்டனர். மேற்கண்ட போராட்டத்திற்குப் பிறகு சங்கத் தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1966ஆம் ஆண்டு புதிய சங்கம் உருவாக்கப்பட்டது. இச்சங்கத்தின் தலை வராக எஸ். கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செய லாளராக கே.எம். ஹரிபட், துணைத் தலைவர்களாக வி.பி. சிந்தன், பூ. நாரா யணமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.  இச்சங்கத்தை அமைப்பதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்ட ஏழு தொழிலாளர்களில் தோழர் ரங்கபாஷ்யம் மட்டுமே இன்று நம்மோடு வாழ்ந்து வரு கிறார்.

தடுக்கப்பட்ட மோதல்

தோழர் ரைமண்ட் நினைவுகூரும் ஒரு நிகழ்வு: 1968ஆம் ஆண்டு வருந்தத்தக்க முறை யில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக் கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் உமர் என்ற தொழிலாளி உயிரி ழந்தார். சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இறந்த தொழிலாளியின் சடலத்தை எடுத்துக் கொண்டு புரசைவாக்கம் சட்டக் கல்லூரி விடுதிக்குச் செல்ல தொழிலாளர்கள் திட்ட மிட்டிருந்தனர். தோழர் வி.பி. சிந்தன், சட்ட மன்ற உறுப்பினர்கள் தோழர்  சி. கோவிந்த ராஜன், கே.பி.ஜானகியம்மாள் உள்ளிட்ட தலைவர்கள் மாணவர்களுக்கும், தொழிலா ளர்களுக்கும் இடையேயான மோதலைத் தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டனர். “இன்றைய மாணவர்கள், நாளைய தொழிலாளர்கள்; இன்றைய தொழிலாளர் கள் நேற்றைய மாணவர்கள். தொழிலா ளர்களும் மாணவர்களும் இரண்டு கண்க ளைப் போன்றவர்கள். இவர்களுக்குள் மோதல் கூடாது,” என தொழிலாளர்கள் முன் னிலையில் அவர்களை  அமைதிப்படுத்த நடந்த கூட்டத்தில் வி.பி. சிந்தன் உரையாற்றி னார். “என்னுடைய பிணத்தின் மேல் இறந்த தொழிலாளியின் உடலை எடுத்துச் செல்லு ங்கள்,” என உருக்கமாக வேண்டுகோள் விடுத் தார். கே.பி.ஜானகியம்மாள், தனது எளிய மொழியில் சாந்தப்படுத்தும் வகையில் பேசினார்.  அதன் பின் தொழிலாளர்கள் அமைதியானார்கள். பின்னர் நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தில் மார்க்சி ஸ்ட் கட்சித் தலைவர்களை முதலமைச்சர் அண்ணா மனம் திறந்து பாராட்டினார். நடந்த மோதல் குறித்து விசாரணைக்கும் உத்தர விட்டார்.

சிஐடியு உதயம்

1970இல் கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் அகில இந்திய அளவிலான சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் சிஐடியு தலைமையிலான அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்திற்குத் தலைவராக வி.பி. சிந்தன், பொதுச்செயலாளராக கே.எம். ஹரிபட், பொருளாளராக ரைமண்ட் தேர்வு செய்யப் பட்டனர். 1972 ஆம் ஆண்டு ஒரு பிரச்சனையில் சென்னையில் போக்குவரத்துத் தொழிலா ளர்கள் “சாலை வேலை நிறுத்தம்” (ரோடு ஸ்ட்ரைக்) மேற்கொண்டார்கள். அந்தப் போராட்டத்தையொட்டி 98 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு 31 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் தற்காலிக வேலை நீக்கமும் செய்யப்பட்ட னர். கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை பிணையில் விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, தொழிலா ளர்கள் சொத்து ஜாமீன் கொடுத்தால் விடுவிப்பதாக உத்தரவிட்டார். ஆனால், சென்னை மாநகரத்தில் அரசுப் போக்கு வரத்தில் பணியிலிருந்த தொழிலாளர்களில் ஒருவருக்குக் கூட சொந்த வீடோ வேறு  அசையா சொத்தோ இல்லை.  இப்பின்ன ணியில் வி.பி.சிந்தன் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் என். ராம் நீதிமன்றத்தில் ஆஜராகி அளித்த உத்தரவாதத்தின் பேரில் தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்ட னர். 10 மாதங்களுக்குப் பிறகே நிர்வாகம் 98 தொழிலாளர்கள் மீதான தற்காலிக வேலை நீக்கத்தை ரத்துச் செய்து அவர்கள் அனை வரையும் புறநகர் மாவட்டங்களுக்கு இட மாற்றம் செய்தது. சங்கத்தின் சார்பாக ஊதிய உயர்வு கோரிக்கை வைத்தபோது அன்றைய மாநில அரசு 1975 ஆம் ஆண்டு ஜப்பான் திட்டம் என ஒரு திட்டத்தை அறிவித்தது. இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. தொழிலாளர்க ளுடைய ஆட்சேபணையை மீறி மாநில அர சாங்கம் தனது திட்டத்தை அமலாக்கியது. மாநில அரசு போக்குவரத்துத்துறையை மாநகரப் போக்குவரத்து, மாவட்ட போக்கு வரத்து, மாநில விரைவுப் போக்குவரத்து என மூன்று பிரிவுகளாக்கியது. ரைமண்ட் விரைவுப் போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டார். முந்தைய எம்.எஸ்.டி.டி. நிறு வனத்தில் சென்னையில் வேலை செய்த வர்கள் பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த மாவட்டங்களி லெல்லாம் அவர்கள்  சிஐடியு சங்கத்தைக் கட்டி வளர்க்கும் பணியை ஈடுபாட்டுடன் செய்தனர். 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் துவக்கப்பட்டது. இதன் தலைவராக தோழர் வி.பி. சிந்தன், பொதுச்செயலாளராக தோழர் அ. சவுந்தரராசன், பொருளாளராக தோழர் ரைமண்ட் தேர்வு செய்யப்பட்டனர்.

அனைத்துத் தொழிலாளர்களுக்காகவும்

சிஐடியுவோடு இணைக்கப்பட்ட போக்கு வரத்து தொழிலாளர் சங்கங்கள் தங்களு டைய கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி  அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அகில இந்திய அளவில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டங்களிலும் கலந்து கொண்டிருக் கின்றன. 1982ஆம் ஆண்டு விலைவாசி உயர்வு எதிர்ப்பு, பொதுத்துறை தனியார்மய எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப் பட்டது. அப்போராட்டத்தில் விரைவுப் போக்குவரத்து கழகத் தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் 147 தொழிலாளர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். சங்கத்தின் சார்பில் இயக் கங்கள் நடத்திய பிறகு ஒரு மாதத்திற்கு  பிறகு இடை நீக்க ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டது. 1983ஆம் ஆண்டு நடைபெற்ற சங்கத்தின் ஆண்டுப் பேரவையில் தலைவராக அ. சவுந்தரராசன், பொதுச்செயலாளராக ரைமண்ட் தேர்வு செய்யப்பட்டனர். 1996ல்  பணி ஓய்வு பெறுகிற வரையில் தோழர் ரைமண்ட் சங்கத்தின் பொதுச் செயலாள ராகச் செயல்பட்டிருக்கிறார். 2001ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற தொழிலா ளர்களுக்காக ஒரு சங்கம் உருவாக்கப் பட்டது. அச்சங்கத்தின் தலைவராக தோழர் எம். சந்திரன், பொதுச்செயலாளராக தோழர் ரைமண்ட் தேர்வு செய்யப்பட்டனர்.

கட்சியின் அங்கமாக..

குமரி மாவட்டத்தில் பள்ளி மாணவராக இருந்தபோதே கம்யூனிஸ்ட் கட்சியின்பால் ரைமண்ட் ஈர்க்கப்பட்டார். ஒன்றுபட்ட கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் எம்.எம். அலி மணவாளக் குறிச்சியில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான அபூர்வமணல் (ரேர் எர்த்) தொழிலாளர்களின் உரிமைகளுக்காக 1958 ஆம் ஆண்டு காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். உண்ணா விரதத்தின் 14ஆவது நாளில் அவர் மயக்க முற்ற நிலையில் கைது செய்யப்பட்டார். இப்போராட்டம் நடைபெறுகிறபோது கட்சியின் சார்பில் அன்றாடம் ஊர்வலம் நடந்திருக்கிறது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் “அலியிண்ட ஜீவன் (அலியுடைய உயிர்) நம்முடைய ஜீவன் (எங்களு டைய உயிர்) அலி மரிக்கும்   (அலி இறந்தால்) ஞங்களும் மரிக்கும்” (நாங்களும் இறப்போம்) என்று முழக்கமிட்டனர். இந்த காட்சியை பார்த்த ரைமண்ட் எதிர்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவது என்று முடிவு செய்தார். அரசு போக்குவரத்து நிறு வனத்தில் சேர்ந்து தொழிற்சங்க உறுப்பின ரான தோழர் ரைமண்ட் சங்கத்தினுடைய தலைவர்களில் ஒருவராக இருந்த பூ.நாரா யணமூர்த்தி ரைமண்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக்கினார். அடுத்து சங்கத்தின் முக்கிய பொறுப்பு களுக்கு ரைமண்ட் தேர்வு செய்யப்பட்ட பிறகு  கட்சியின் சென்னை மாவட்டக்குழு உறுப்பினராகவும் பல ஆண்டுகள் செயல் பட்டிருக்கிறார். விரைவுப் போக்குவரத்து சங்கத்தின் பொதுச்செயலாளராகச் செயலாற்றிய ரைமண்ட் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கட்சியின் கிளைகளை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றினார். 1970ஆம் ஆண்டு தோழர் ரைமண்ட் - சார்லஸ் திருமணம் நடைபெற்றது. அவரு டைய இணையர் சார்லஸ் மற்றும் அவரது நான்கு மகள்கள் ரைமண்ட் அவர்களின் சங்கப் பணிக்கும் கட்சி பணிக்கும் ஆதரவாக  இருந்தனர்.

ரைமண்ட் தன்னடக்கத்தோடு இருப்பார். அதே நேரத்தில் தொழிலாளர்களின் உரிமை களை பாதுகாப்பதில் உறுதியாக நிற்பார். பல மாவட்டங்களில் சங்கக் கிளைகளைத் தொடங்குவதிலும் கட்சிக் கிளைகளை அமைப்பதிலும் தலையாய பங்காற்றினார். தற்போது 85 வயதாகும் தோழர் ரைமண்ட் சென்னையில் திருவொற்றியூர் பகுதிக்கு உட்பட்டு கட்சி உறுப்பினராக இருந்து கொண்டு தன்னால் இயன்ற  பணிகளைச் செய்து வருகிறார். பணியில் இருந்தபோது நான்கு முறை தற்காலிக வேலை நீக்கம் (2 ஆண்டுகள்) செய்யப்பட்டுள்ளார். சங்கப் பணிக்காகவும், கட்சிப் பணிக்காகவும் ஊதிய இழப்பு விடுப்பெடுத்து பணியாற்றியிருக்கிறார். எவ்வளவு நாட்கள் ஊதிய இழப்பு என்று கேட்டபோது சுமார் 7 ஆண்டுகள் இருக்கும் என நெகிழ்வோடு குறிப்பிட்டார். 1990இல் விரைவு போக்குவரத்துக் கழ கத்தில் சென்னை பாரிமுனையில் நேரக் காப்பாளராக பதவி உயர்வு பெற்றார். ஆனாலும், சங்கப் பணியை தொடர்ந்து செய்தார். சம்மேளனத்தின் ‘போக்குவரத்து தொழிலாளி’ என்ற இதழை மாநிலம் முழு வதும் விநியோகம் செய்வதில் முக்கிய பங்காற்றினார். எத்தனை முறை நீங்கள் நிர்வாகத்தினுடைய மெமோவை எதிர் கொண்டீர்கள் எனக் கேட்டபோது நூற்றுக் கும் மேலே இருக்கும் என்றார்.  பலமுறை தற்காலிக வேலை நீக்கம், வழக்கு, சிறை போன்ற அடக்குமுறைகளை உறுதியாக எதிர்கொண்டவர்.  இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளான தொழிலாளர்களை உற்சாகப் படுத்தி, நம்பிக்கையூட்டி, சோர்வின்றி மீண்டும் செயல்பட வைக்கக் கூடிய பணியை திறம்படச் செய்தவர் ரைமண்ட். இவர் ஒரு சிறந்த அமைப்பாளர். அரசுப் போக்கு வரத்துத் தொழிலாளர் சங்கம் இப்போதும் போர்க்குணத்துடன் செயல்படுவதற்கு, அக்காலத்தில் ரைமண்ட் போன்ற தோழர் கள் தொழிலாளர்களிடையே ஆற்றிய களப்பணிகள் அடித்தளமாக அமைந்தன. இத்தகு பங்களிப்புகளுடன் தோழர் ரைமண்ட் அவர்கள் கடந்த 60 ஆண்டுக ளுக்கு மேலாக அர்ப்பணிப்போடு ஆற்றிவரும் பணி பாராட்டத்தக்கது, பின்பற்றத்தக்கது. 

;