தமிழகம்

img

கொரோனா வதந்தி தற்கொலை செய்து கொண்ட வாலிபருக்கு ரூ.25 லட்சம் வழங்கக் கோரிக்கை...

மதுரை:
கொரோனா வதந்தியால் மதுரையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை  செய்து கொண்ட வாலிபருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச்  செயலாளர் இரா.விஜயராஜன் விடுத்துள்ள அறிக்கையில் ,மதுரை வில்லாபுரம் முல்லைநகரைச் சேர்ந்தவர் முஸ்தபா(32) இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன் மதுரைக்குத் திரும்பியுள்ளார். அவருக்கு காய்ச்சல் காரணமாக வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து கொரோனா தொற்று உள்ளதாக சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவர் இராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

\இந்த நிலையில் முஸ்தபாவுக்கு கொரோனா உள்ளதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இதைப் பார்த்த முஸ்தபா மனஉளைச்சலுக்கு ஆளாகி கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். முஸ்தபாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ருபாய் 25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். அதே நேரத்தில் வதந்தி  பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்   என்று கூறியுள்ளார்   .
 

;