திங்கள், நவம்பர் 30, 2020

tamilnadu

img

தஞ்சாவூரில் பலத்த மழை அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்... மழைநீரில் மூழ்கியது மின் விநியோகம் துண்டிப்பு: விவசாயிகள், மக்கள் அவதி

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கியதால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில், நிகழாண்டு குறுவை நெல் 58,948 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு 40,185 ஹெக்டேரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நெற்கதிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் மாவட்டத்தில், திங்கட்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பாபநாசம் பகுதியில் கணபதிஅக்ரஹாரம், மணல்மேடு, கபிஸ்தலம், சாலியமங்கலம், கோவிலூர், அருள்மொழிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வயல்களில் மழைநீர் தேங்கியது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயல்களில் சாய்ந்து, நெற்கதிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

மின்கம்பங்கள் சேதம்
பாபநாசம் பகுதியில் காற்றுடன் கூடிய மழைபெய்ததால், தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் செவ்வாய்க்கிழமை மாலை வரை மின்விநியோகம் கிடைக்காமல் அய்யம்பேட்டை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர்.

நெல் மூட்டைகள் தேக்கம்
குறுவை அறுவடை தீவிரமாக நடைபெற்ற நிலையில், அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் குவியல் குவியலாக கொட்டி வைத்துள்ளனர். தற்போது கொள்முதல் நிலையங்களில் வருடாந்திர கணக்குகள் (அக்டோபர் 1 முதல் செப்டம்பர் வரை) முடிக்கப்படுவதால் கொள்முதல்பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொள் முதல் நடைபெறாததால், நெல்மூட்டைகள் தேங்கியுள்ளன. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நெல்மணிகளில், மேலும் ஈரப்பதம் அதிகமாக காணப்படுவதால் அதனை தினமும் பகல் நேரங்களில் விவசாயிகள் உலத்தி காய வைத்து வருகின்றனர். 

மழை அளவு
செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக நெய்வாசலில் 48 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதையடுத்து வெட்டிக்காடு 43.80, பட்டுக்கோட்டை 34, அய்யம்பேட்டை 32, கும்பகோணம் 30.30, பாபநாசம் 29, மதுக்கூர் 27, அதிராம்பட்டினம் 24.90, மஞ்சளாறு 24, அணைக்கரை 23, தஞ்சாவூர் 22.50, திருவிடைமருதூர் 19.30, திருவையாறு -16, ஒரத்தநாடு 14.8-, வல்லம் -14, குருங்குளம் 11 என பதிவாகியுள்ளது.இதுகுறித்து கணபதி அக்ரஹாரம் விவசாயி விஜயராஜன் கூறுகையில், தஞ்சாவூர் மாவட் டத்தில் தொடர்ந்து சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதே போல் காவிரி உள்ளிட்ட ஆறுகளிலும் தண்ணீர் அதிமாக செல்கிறது. ஆறுகளை ஓட்டி உள்ள பகுதிகளில் நீர் கசிவினால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் வடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. அறுவடை நேரத்தில் மழை பெய்வதால் மழை நீரில் நெல்மணிகள் மூழ்கியுள்ளன. இதனால் நெல்மணிகள் கருப்பாக மாறியும், ஈரப்பதம் அதிகரித்தும் காணப்படுவதால் மகசூல் கண்டும் பலனில்லாமல் உள்ளது” என்றார்.

;