நியூயார்க், செப். 8 -
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் விதமாக நாசா 2009 ஆம் ஆண்டிலிருந்து தனியார் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது. ஏற்கெனவே எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு டிராகன் விண்கலங்கள் தொடர்ச்சியாக அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், மற்றொரு முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான போயிங் சார்பில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலங்கள் உருவாக்கப்பட்டு அவை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்புவதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்படி “போயிங் ஸ்டார்லைனர்” திட்டம் என பெயரிடப்பட்டுள்ள முதல் போயிங் விண்கலத்தின் சோதனை ஓட்டம் ஜூன் 5 அன்று நடைபெற்றது. இந்த சோதனை திட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படை வீரரான புட்ச் வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்கள் ஸ்டார்லைனர் விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் சென்றனர். ஜூன் 7 அன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஜூன் 14 அன்று மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். அதாவது 15 நாட்களுக்குள் பூமி திரும்ப வேண்டும். இதுதான் திட்டம்.
ஆனால் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் விண்வெளி குப்பைகள் காரணமாக பூமிக்கு திரும்பும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஸ்டர்லைனர் விண்கலத்தின் ஹீலியம் கசிவு அதிக அளவில் ஏற்பட்டதன் காரணமாக திரஸ்டர்கள் செயல்படாத ஒரு நிலை இருந்ததாக நாசா தெரிவித்த நிலையில், ஹீலியம் கசிவை சரி செய்வதற்கு சர்வதேச விண்வெளி வீரர்கள் மற்றும் பூமியில் இருந்து நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் விண்வெளி மையத்தில் 90 நாட்களுக்கும் மேலாக உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை பூமிக்கு அழைத்து வர எந்த பலனும் கிட்டவில்லை. அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் தான் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்தது.
இதனிடையே விண்வெளி வீரர்கள் இல்லாமல் ஸ்டர்லைனர் விண்கலம் செப்டம்பர் 7 அன்று பூமிக்கு வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், திட்டமிட்டபடி ஸ்டெர்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிரிந்து பூமியை நோக்கி வந்தது. இந்திய நேரப்படி சனியன்று காலை 9.31 மணிக்கு அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள மணல் திட்டில் பாராசூட் மூலமாக தரையிறங்கியது ஸ்டார்லைனர் விண்கலம்.
திரஸ்டர்களின் ஹீலியம் கசிவு அதிகமாக இருந்ததாக முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஸ்டார்லைனர் விண்கலம் விண்கலம் பூமிக்கு திருப்பும் போது திரஸ்டர்கள் நல்ல முறையில் செயல்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் அடுத்த 4 மாதங்கள் சுனிதா மற்றும் வில்மோர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருப்பார்கள் என்றும், அடுத்த ஸ்பேஸ் எக்சின் டிராகன் திட்டத்தில் அவர்கள் பூமிக்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாசா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்றிச் சென்றவர்கள் விண்வெளியிலேயே இருக்க ஏற்றிச்சென்ற வாகனம் பூமிக்கு தரை இறங்கி இருப்பது போயிங் ஸ்டர்லைனர் விண்கலத்தின் மீதான நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை கிளப்பியுள்ள நிலையில், சுனிதா வில்லியம்சின் 8 நாள் விண்வெளிப் பயணம் 8 மாதமாக நீடித்துள்ளது.