world

img

மகாராணி எலிசபெத் காலமானார்

லண்டன், செப். 9- இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96. செப்டம்பர் 8 அன்று மாலை  6 மணிக்குப் பின்னர் ராணி எலிசபெத் மறைவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார்.  இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மகாராணியின் உடல்நிலை ஆரோக்கியமாக இல்லை என்று தகவல்கள் வெளியாகின. உடல்நிலை மோசமான நிலையில், தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவந்தார்.  இதனிடையே, பால்மோரா இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக, பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவரின் மரணத்தை அடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

21 ஏப்ரல் 1926 அன்று லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்தவர் எலிசபெத்.  பிரிட்டிஷ் வரலாற்றில் சுமார் 70 ஆண்டுகாலம் அரச பதவியில் இருந்தவர்.  தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர் களை பதவியேற்க வைத்துள்ளார். தற்போது, பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட, லிஸ் ட்ரஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். பிரிட்டன் ராணி எலிசபெத் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவரது மகன் களான, இளவரசர்கள் சார்லஸ், எட்வர்ட்,  ஆண்ட்ரூ, மகள் ஆனி ஆகியோர் அவருடனேயே இருந்தனர்.

சார்லஸ் மன்னராகிறார்

ராணி எலிசபெத்தின் மறைவையடுத்து அவரது மகனான 73 வயது சார்லஸ் ஃபிலிப் ஆர்தர் ஜார்ஜ், இங்கிலாந்து மன்னராகிறார். சார்லஸ் தான் நீண்ட கால அரச குடும்ப வாரிசு என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.  மன்னர் பதவிக்காக காத்திருக்கும் வாரிசுக்கு  என்று குறிப்பிட்ட பணியோ, பொறுப்போ இல்லை. அதனால், அவரது பணியே காத்திருப் பாக மட்டும் தான் இருந்தது. சார்லஸ் கட்டுமானக் கலை, சுற்றுச்சூழல், விவசாயம், இறை நம்பிக்கை, மாற்று மருத்துவம் ஆகியனவற்றில் ஆர்வம் காட்டிவந்தார்.