கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டா நாட்டுடன் இங்கிலாந்து அரசு கடல் கடந்து நாட்டிற்குள் புகும் அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க 1,200 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி சட்டவிரோதமாக இங்கிலீஷ் கால்வாய் மூலம் 1-1- 2022 முதல் இங்கிலாந்து வரும் அகதிகள் ருவாண்டா நாட்டிற்கு மாற்றப்படுவர். மனித உரிமைக் குழுக்கள் இந்த ஆலோசனையை காட்டுமிராண்டித்தனமானது, கொடூரமானது, மனிதாபிமானம் அற்றது என தாக்கியுள்ளன. இதேபோல் கடந்த காலத்தில் ஆஸ்திரேலியா அகதிகளை தென் மேற்குப் பசிபிக் தீவான பாபுவா நியூ கினி மற்றும் ஆஸ்திரேலியா வடகிழக்கில் உள்ள தீவு நாடான நவுரு குடியரசுக்கும் மாற்றியது. அகதிகள் முகாம்களில் பாலியல் பலாத்காரம், கொலை ,தற்கொலை போன்ற பல பயங்கர சித்திரவதைகளை அனுபவித்தனர். ஆஸ்திரேலிய மனித உரிமை கமிஷன் முன்னாள் தலைவரும், சர்வதேச சட்டங்கள் குறித்த நிபுணருமான கில்லியன் டிரிங்க்ஸ் என்பவர் ,இங்கிலாந்தின் அகதிகள் கொள்கை ஒரு அருவருப்பான சர்வதேச அகதிகள் மற்றும் மனித உரிமை சட்டமீறல் எனக் கண்டித்துள்ளார். உலக அளவில் ,ஐநா மூலமாக முறையாக அகதிகள் மறுகுடியமர்த்தப்பட்டவர், மொத்த அகதிகளில் ஒரு சதவிகிதம் மட்டுமே. பெரும்பாலான அகதிகள் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர். எல்லைப் பாதுகாப்புப் படைகளால் கடும் வன்முறைக்கு உள்ளாகின்றனர்.
2021-ல் இங்கிலீஷ் கால்வாய் வழியாக 29 ஆயிரம் அகதிகள் இங்கிலாந்து வந்தனர். 2020-ஐக் காட்டிலும் இது 3 மடங்கு. இங்கிலாந்து எல்லை பாதுகாப்பு படை நிர்ணயிப்புப்படி, 2022 -ல் 60 ஆயிரம் அகதிகள் அபாயகரமான பயணம் செய்வர். இங்கிலாந்து நாட்டு புதிய அகதிகள் கொள்கைப்படி ,ஆவணங்கள் இன்றி நுழையும் அகதிகள் பரிசோதிக்கப்பட்டு, ருவாண்டா நாட்டிற்கு அனுப்பப்படுவர். ருவாண்டா தலைநகரம் கிகாலியில் அகதிகள் மனு கொடுத்து தஞ்சம் புக வேண்டும் .இல்லையேல் அகதிகள் அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவர் அல்லது வேறு நாட்டில் தஞ்சம் புக அனுப்பப்படலாம். தனி நபர்களாக இங்கிலாந்து வரும் அகதிகள் முதலில் ருவாண்டாவிற்கு அனுப்பப்படுவர். கடல்வழியாக வரும் அகதிகளை கண்காணிக்கும் பணி எல்லை பாதுகாப்பு படைக்கு பதிலாக பிரிட்டிஷ் கப்பல் படைக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய வடிவில் அகதிகள் ஒப்பந்தம் ஐந்தாண்டுக்கு நீடிக்கும் என ருவாண்டா அரசு கூறுகிறது. அகதிகளை குடியமர்த்த இங்கிலாந்து அரசு ஏற்கனவே பணம் அனுப்பி விட்டதாம்.
யுத்தம் ,சித்திரவதை, வழக்குகளினால் பாதிக்கப்பட்டவர் இங்கிலாந்தில் தஞ்சம் புக உரிமை உள்ளதாக சர்வதேச ஒப்பந்தங்கள் கூறுகிறது. இங்கிலாந்து உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் அகதிகள் ஒப்பந்தம் குறித்த தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர். இருப்பினும் இங்கிலாந்தின் உள்துறை செயலாளரான பிரசித்தி பட்டீல் ஒப்பந்தத்தை அமலாக்குவதில் பிடிவாதம் காட்டுகிறார். எல்லைகள் வழியாக மக்கள் சட்ட விரோதமாக இங்கிலாந்திற்கு கடத்தப்படுதலை தடுக்கவே புதிய கொள்கை என அரசு கூறுகிறது. மனித உரிமை குழுக்களும், இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியும் இக்கொள்கை சர்வதேச சட்டங்களை மீறுகிறது என கண்டித்துள்ளன. அயல்நாட்டினரை வெறுக்கும் இங்கிலாந்து கொள்கை கண்டிக்கத்தக்கது. இஸ்ரேல் இதேபோல , சூடானில் இருந்து, எரித்திரியாவில் இருந்து வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்க ஒப்பந்தம் போட்டது. நான்காயிரம் பேர் அவ்வாறு அனுப்பப்பட்டனர் . 2018இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் செய்த ஆய்வில், ருவாண்டாவில் தஞ்சமடைந்த அகதிகள் சித்திரவதை பொறுக்க முடியாமல் பலர் வேறு நாடுகளுக்கு ஓடி விட்டதாக தெரிகிறது பலர் ஐரோப்பா செல்ல முயற்சித்தனர். டென்மார்க் அரசு எந்த ஒரு அகதியையும் அனுமதிக்க மாட்டோம் என 2021-ல் சட்டமே நிறைவேற்றியுள்ளது. 150க்கும் மேற்பட்ட அமைப்புகள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதி அகதிகள் கொள்கை கைவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளன. அகதிகள் குறித்த சர்வதேச கோட்பாட்டை மீறக் கூடாது என தெரிவித்துள்ளன. உலகில் அகதிகளாக மாறும் நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதே நம் விருப்பம். ஆனால், முதலாளித்துவ அமைப்பு முறை அகதிகளை அதிகரிக்கவே செய்யும்.