அட்லாண்டிக் பெருங்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் - இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே உள்ள இங்கிலீஷ் கணவாய் வழியாக பெண்கள் உள்பட 34 அகதிகள் நேற்று இரவு ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இங்கிலீஷ் கணவாய் வழியாக சென்றபோது அகதிகள் படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது, அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிரான்ஸ் கடலோர காவல்படையினர் அகதிகள் படகு விபத்துக்குள்ளானது குறித்து கண்டுபிடித்தனர். மேலும், படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த அகதிகள் 2 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், இந்த கோர விபத்தில் படகில் இருந்த 31 அகதிகள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த 31 பேரின் உடல்களையும் பிரான்ஸ் கடலோர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், படகில் பயணம் செய்தவர்களில் ஒரு நபர் கடலில் விழுந்து மாயமாகியுள்ளார். அவரை தேடும் பணியில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.