tamilnadu

வேலூர் அருகே போலி மது ஆலை: 3 பேர் கைது

வேலூர்,மே 11- வேலூர் அருகே பாதாள அறையில் போலி மதுபான ஆலையை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே போலி மதுபான பாட்டில்கள் தயாரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதிக்கு கடத்திச்சென்று விற்பதாக மத்திய புலனாய்வு பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அனைத்து பிரிவு போலீசாரும் கடந்த 3 தினங்களாக மத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் வெள்ளியன்று இரவு காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதில், அவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த மனோகரன்(25), கோவிந்தராஜ்(60), சரவணன்(36) என்பதும், இவர்கள் நாட்றம்பள்ளி பகுதியில் போலி மதுபாட்டில்கள் தயாரித்து மத்தூர் பகுதியில் விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.சனிக்கிழமையன்று அதிகாலை நாட்றம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி ஏரியூர் பகுதிக்கு 3 பேரையும் அழைத்து வந்தனர். அங்கு சரவணனுக்கு சொந்தமானஇடத்தில் தண்ணீர் தொட்டிபோல் இருந்த இடத்தில் ஒரு ஆள்மட்டும் நுழையும் அளவுக்கு அறை இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அதற்குள் இறங்கி பார்த்தபோது போலி மதுபாட்டில்கள், காலி பாட்டில்கள், மூடிகள், ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவை இருந்தன. இதையடுத்து மொத்தம் 720 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.