tamilnadu

img

மணல் கடத்தல் விவகாரம் நீதிபதிகள் காட்டம்

மதுரை:
மணல் கடத்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் காட்டமாகக் கூறியுள்ளனர்.

மணல் கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடும் எச்சரிக்கையை முன்வைத்தனர்.மணல் கடத்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை தொடர்ந்து சோதிக்க வேண்டாம், அவ்வாறு தொடர்ந்தால், தமிழக தலைமைச் செயலாளரை காணொலி காட்சி வாயிலாக விசாரிக்க வேண்டியது வரும்.தமிழக அரசின் அரசாணையின்படி மணல் குவாரிகள் அரசால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,  உபரி மண் எடுக்க, சவுடு மண் எடுக்க என்று உரிமம் வழங்கி விட்டு, மணல் கடத்தலை அரசே ஊக்குவிக்கிறது. அரசின் பதில் மனுக்களில் இருக்கும் திட்டங்கள், அரசாணைகள் அனைத்தும்பெயரளவில் மட்டுமே உள்ளது.
மணல் கடத்தலுக்கு உதவும் அரசு அதிகாரிகள்  மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்  நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு கேள்வியெழுப்பியுள்ளது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்  மணல் கடத்தல் புகார் தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய இரு வாரங்கள் அவகாசம் வழங்குமாறு கோரினார். அவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். விசாரணையை செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மோசமான நிலையில் சிவகங்கை
குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மணல் கடத்தல் நடைபெறுகிறது. ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை உடனடியாக பணியிடமாற்றம் செய்து வேறொரு அதிகாரியை நியமனம் செய்துத மணல் கடத்தல், முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

;