tamilnadu

img

நிதியமைச்சரின் அறிவிப்புகள் ஏமாற்றத்தின் இரண்டாம் பாகம்.... சு.வெங்கடேசன் எம்.பி.,விமர்சனம்

மதுரை:
பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிதி திட்டம் குறித்த இரண்டாம் கட்ட அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் வியாழனன்று அறிவித்தார். நிதியமைச்சரின் அறிவிப்பு ஏமாற்றத்தின் இரண்டாம் பாகம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* கிராமங்களுக்கு திரும்பியிருக்கிற புலம் பெயர் தொழிலாளர்களுக்கு 100 வேலை நாள் திட்டத்தில்(MGNREGS) இணைக்கப்படும் என்று சொல்லியிருக்கிறீர்களே...குடும்பத்திற்குத்தானே 100 நாள்... நபருக்கு 100 நாள் என்று மாற்றாவிட்டால் குடும்பத்தில் அப்பாவிடம், அம்மாவிடம் இருந்து பிள்ளைகளுக்கு பறித்துத் தருவீர்களா? 

* நகராட்சி பகுதிகளில் குடியிருக்கிற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே 100 நாள் திட்டத்தில் அனுமதி கிடையாதே... திரும்பிய புலம் பெயர் தொழிலாளர்கள் நகரங்களில் குடியிருந்தால் அவர்களுக்கு என்ன வேலை வாய்ப்பு? ஏற்கெனவே நகராட்சி பகுதிகளில் இருந்து வரும் விவசாயத் தொழிலாளர்களின் கதி என்ன? 

* உணவுக் கழகங்களில் நிரம்பி வழியும் உணவு தானியங்களை வழங்கக் கூடாதா என்ற குரல் உங்கள் காதுகளில் விழுந்து இரண்டு மாத விலையில்லா அரிசி, பருப்பு அறிவித்துள்ளீர்கள். ஆனால் ரூ. 7500- ஐ கிராமப்புற ஏழை எளிய மக்களின் கணக்குகளில் போடுங்கள் என்று பொருளாதார நிபுணர்கள் 3.5 லட்சம் கோடிக்கு கணக்கு போட்டு சொன்னார்களோ அது பற்றி பேச்சு இல்லையே! மூன்றாவது நாளுக்கு காத்திருக்க வேண்டுமா? இப்போது அறிவித்திருப்பது ரூ.3500 கோடி எனில் மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசமல்ல... மடுவை தாண்டியதோடு நின்று விடுவீர்களா? மலையை நாளை தாண்டுவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?

* கடன்... கடன்... கடன்... இதுதான் இரண்டாவது நாள் நிதியமைச்சர் அறிவிப்பிலும் திரும்ப திரும்ப நம் காதில் விழுந்த வார்த்தைகள்... மார்ச் மாதம் வரை அளிக்கப்பட்ட செலுத்துவதற்கான காலக்கெடு மே வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வட்டியையாவது தள்ளுபடி செய்வார்கள் என்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போகலாமா? இன்னும் ஒரு நாள் உங்களுக்கு இருக்கிறது நிதி அமைச்சரே...

* 44 தொழிலாளர் சட்டங்கள் 4 சட்டங்களாக மாற்றப்படுவது குறித்து எல்லா தர்ப்பினரிடமும் பேசி விட்டோம் என்று சொல்கிறீர்களே அது உண்மையா? ஜனவரி மாதம் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடந்தது ஏன்? குறைந்தபட்ச ஊதியமாக அவர்கள் கேட்கிற ரூ.21 ஆயிரமாக இருக்குமா? 

* பல பழைய திட்டங்கள் இப்போது மீண்டும் புதிய திட்டங்கள் போல் பேசப்படுகிறது. மீனவர், கால் நடை பராமரிப்போர் ஆகியோரும் கிசான் கடன் அட்டைகளில் இணைக்கப்படுவார்கள் என்பது 2019 ஆகஸ்ட் மாதமே எடுக்கப்பட்ட முடிவல்லவா?

* டோல் கேட் போல அரசு-தனியார் கூட்டில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மலிவு வாடகை திட்டம் என்பது யார் நலனுக்காக? மலிவு வாடகை எனில் தனியார் எவ்வளவு இறங்கி வருவார்கள்? அரசு எவ்வளவு செலவு செய்யும்? 

* அரசின் மலிவு விலை வீடு மானிய திட்டம் ஓராண்டிற்கு விரிவாக்கப்பட்டுள்ளது. சிமிண்ட், மணல், கம்பி விலை எல்லாம் ஏறி விட்டதே... இப்போதே பலத்த அடி வாங்கியுள்ள ஏழை எளிய மக்கள் வீடு கட்டுகிற செலவுகளை தாங்குவார்களா?

நிதியமைச்சரே... சாமானிய மக்களின் கைகளில் பணம் புழங்க வழி செய்யாதவரை, வருமானத்தை சூப்பர் ரிச், பில்லியனர்கள், கார்ப்பரேட்டுகளிடமிருந்து திரட்டாமல் தீர்வுகள் கிடைக்கவே கிடைக்காது. 
இன்னும் ஒரு நாள் காத்திருக்கிறார்கள் மக்கள்.... 6 ஆண்டு காத்திருந்தவர்கள்தானே...!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;