tamilnadu

img

சூரியனின் நண்பன்

உதயசங்கர்

கொக்கரக்கோ… கொக்கரக்கோ… கொக்கரக்கோ.. என்று கூவியது சேவல்.  அடடா.. நேரமாகி விட்டதா? உடனே சூரியன் வீட்டை விட்டு வெளியே வந்தது.  சோம்பலுடன் கை கால்களை முறித்து விட்டது.  இன்னும் முகம் கழுவவில்லை. சேவல் மறுபடியும் கொக்கரக்கோ கொக்கரக்கோ என்று கூவியது. உடனே போகாவிட்டால் சேவலுக்குக் கோபம் வந்து விடும். பிறகு இன்னும் சத்தமாய் கொக்கரக்கோ கொக்கரக்கோ என்று கூவத் தொடங்கியது. அவசர அவசரமாக வெளியே வந்தது சூரியன். சேவல் அங்கே குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தது.  சேவலின் முன்னால் போய் நின்றது.  நான் வந்துட்டேன்.. வா.. விளையாடலாம்.. என்றது சூரியன். சேவல் பார்க்காதது போல தலையைக் குனிந்தே இருந்தது. இன்னும் அருகில் சென்றது சூரியன். சேவல் தன் வலது காலால் சூரியனை ஒரு எத்து எத்தியது. சூரியன் பறந்து போய் ஒரு செடியின் மீது விழுந்தது. அப்போது தான் மேய வந்த ஆடு ஒன்று அவசரத்தில் இலையோடு சூரியனையும் தின்று விட்டது. ஆட்டின் வயிற்றுக்குள் போன சூரியன் கிச்சுக்கிச்சு மூட்டியது. கூச்சத்தினால் ஆடு மே மேமே மே ம்மே என்று கத்திக் கொண்டே துள்ளிக்குதித்தது. ஆடு அப்படிக் கத்தும்போது வயிற்றிலிருந்த சூரியன் வாய் வழியேத் துள்ளிக்குதித்து வெளியே விழுந்தது. அங்கேயே வெகுநேரம் கிடந்தது. ஒரு நாய் வந்து சூரியனை முகர்ந்து பார்த்தது. நாயிடம், “ என்னோடு விளையாட வாயேன்..” என்று கேட்டது சூரியன். ” வள் வள் வள் ” என்று குரைத்துக்கொண்டே ஓடி விட்டது.  ஓணான் சூரியனைப் பார்த்து வேகமாக வந்தது. சூரியனை வெள்ளைப்பூச்சி என்று நினைத்து கண்களை உருட்டிப் பார்த்தது.

மேலும் கீழும் உடலை அசைத்து ஆடியது. சற்று அருகில் வந்து நாக்கை நீட்டியது. சூரியனைத் தொட்டதும் ஓணானின் நாக்கு சுட்டு விட்டது. உடனே வேகவேகமாக ஓடி அருகில் இருந்த முள்ச்செடியில் ஏறி நின்று சூரியனைப் பார்த்து உடலை அசைத்து வக்கணை காட்டியது. அப்போது ஒரு எலியை விரட்டிக் கொண்டு ஒரு பூனை வந்தது. பூனை சூரியனைப் பார்த்ததும் அப்படியே நின்றது.  மியாவ் மியாவ் மியாவ் பூனை எலியை மறந்து விட்டது. பூனையை பார்த்த சூரியன், ” என்னோடு விளையாட வாயேன்..” என்றது. பூனை மெல்ல அருகில் சென்று காலால் உதைத்தது. சூரியன் உருண்டு போய் ஒரு சாக்கடையில் விழுந்து விட்டது. இப்போது சூரியன் அழுக்காகி விட்டது. அப்போது மேகங்கள் திரண்டு மழை பொழிந்தது. சாக்கடையில் தண்ணீர் ஒடியது. அந்தத் தண்ணீரில் சூரியன் மிதந்து சென்றது. அந்தத் தண்ணீர் ஊருக்கு வெளியே போய் விழுந்தது. இப்போது சுத்தமாக பளீரென்று ஒளி வீசியது சூரியன்.மழை வெறித்தது. யாராவது வருகிறார்களா என்று பார்த்தது சூரியன். அருகில் இருந்த குடிசைக்குள்ளிருந்து ஆகாஷ் என்ற சிறுவன் வந்தான். ஆகாஷ் சூரியனைப் பார்த்ததும் கையில் எடுத்துக் கொண்டான். அவனுக்கு மகிழ்ச்சி.சூரியன் ஆகாஷிடம், “ என்னோடு விளையாட வாயேன்..” என்றது. ஆகாஷ் சிரித்துக் கொண்டே, “ வா.. நாம் விளையாடுவோம்.. எனக்கும் நண்பர்கள் இல்லை.. இனி நாம் நண்பர்களாக இருப்போம்…” என்றான். ஆகாஷ் இரண்டு கைகளிலும் சூரியனைத் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டே வீட்டுக்குப் போனான். சூரியனுக்கும் நண்பன் கிடைத்தான். சூரியன் சிரித்தது. அவனும் சிரித்தான்.

;