tamilnadu

img

தனியார் நிதி நிறுவன மோசடி பெரம்பலூர் ஆட்சியரிடம் புகார் மனு

 பெரம்பலூர், ஜூலை 30- தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் பணம் வசூலித்து, மோசடியில் ஈடுபட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் இருந்து தொகையை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பெரம்பலூர் ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர்.  பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கொளத் தூர் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் சாந்தா, எஸ்பி திஷாமித்தல் ஆகியோரிடம் அளித்த மனு வில் தெரிவித்துள்ளதாவது, கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அந்நிறுவனத்தில் மாதம் தோறும் சந்தா செலுத்தினால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுதல் வட்டி யுடன் அசல் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.  இதையறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை என பல லட்ச ரூபாய் அந்த பெண்ணிடம் செலுத்திய தாக கூறப்படுகிறது. 5 ஆண்டு கடந்தும் பொதுமக்கள் செலுத்திய தொகையை அந்தப் பெண் திருப்பித் தர வில்லையாம். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், அந்தப் பெண்ணிடம் கேட்டதற்கு வட்டியுடன் அசல் தொகை யை பெற்றுத் தருவதாக உறுதியளித்தாராம். இதனிடையே அந்தப் பெண் சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து பெண்ணின் பெற்றோரிடம் கேட்டதற்கு தர மறுத்தனராம். இதையடுத்து தாங்கள் செலுத்திய தொகையை சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோரிடமிருந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

;