370வது பிரிவை ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம்
மாநிலத்தை உடைத்து 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றும் மசோதா நிறைவேற்றம்
புதுதில்லி, ஆக. 5- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானத்தை, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, மாநிலங்களவையில் திங்களன்று அராஜகமான முறையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியது. அது மட்டுமின்றி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை முற்றாக சிதைக்கும் நோக்கத்துடன் அம்மாநி லத்தையே இரண்டாக உடைத்து, மாநிலம் என்ற அந்தஸ்தை ரத்து செய்து, லடாக் பகுதியை தனியாகப் பிரித்து யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு-காஷ்மீரை தனி யூனியன் பிரதேச மாகவும் மாற்ற வகை செய்யும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இவ்விரண்டுக்கும் மாநிலங்களவையில் மிகக்கடுமையான எதிர்ப்பு எழுந்தது. எனினும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றி, இந்த மசோதாவை மக்களவையில் செவ்வாயன்று முன்மொழிவதற்கான அனுமதியையும் பெற்றுக் கொண்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை முற்றாக சிதைத்து, அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை அழித்தொழிக்கும் தனது நீண்டகால கனவை, நாடாளுமன்றத்தில் மிருகபலத்துடன் கூடிய தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆகஸ்ட் 5 திங்களன்று நிறைவேற்றிக் கொண்டது பாரதிய ஜனதா கட்சி. மாநிலங்களவையில் திங்களன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் இரண்டு முக்கிய விசயங்களை முன்மொழிந்தார். ஒன்று, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370வதை ரத்து செய்யும் தீர்மானம்; மற்றொன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிளந்து, லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் என மாற்ற வகைசெய்யும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019.
இனி ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்துடன் யூனியன் பிரதேசமாக இருக்கும் எனவும், லடாக் பகுதி தனியாக பிரிக்கப்பட்டு சட்டமன்றமில்லா யூனியன் பிரதேசமாகச் செயல்படும் எனவும் அமித்ஷா அறிவித்தார். லடாக் பகுதியில் நிர்வாகி மட்டுமே இருப்பார். இதற்கான அங்கீகாரத்தை வழங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடும் எனவும் அமித்ஷா முன்மொழிந்தார்.
பிரிப்பும் - விளக்கமும்
காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது ஏன் என அமித்ஷா விளக்கம் ஒன்றையும் அளித்தார். அதில், மக்கள் தொகை குறைந்த, செல்வதற்கு கடினமான பெரிய பகுதி லடாக் என்பதால் அதை கையாள்வதும் கடினமானது. யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது லடாக் மக்களின் நீண்ட கால கோரிக்கை. மக்களின் விருப்பத்தையும், நீண்ட கால கோரிக்கையையும் நிறைவேற்றும் விதமாக லடாக், சட்டசபை இல்லாத யூனியன் பிரதேச மாக மாற்றப்பட உள்ளது. பாதுகாப்பு காரணங் களுக்காகவும், காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் ஜம்மு-காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாக்கப்பட உள்ளது. சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் செயல்படும் என அவர் விளக்கமளித்தார்.
மாநிலங்களவையில் கடும் அமளி!
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370ஐ நீக்கும் மத்திய அரசின் அறிவிப்பை கேட்ட உடனேயே மக்கள் ஜனநாயக கட்சி(பிடிபி) எம்.பி.க்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் மாநிலங்களவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு காஷ்மீர் பிரிக்கப்படுவதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பிடிபி எம்.பி.க்கள் மிர் பயாஸ், நசீர் அகமது ஆகியோர் அரசியலமைப்புச் சட்ட நகலை கிழிக்க முயற்சி செய்ததைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் அவையிலிருந்து வெளியேற்ற அவைத்தலைவர் வெங்கைய்ய நாயுடு உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிர் பயாஸ் தனது உடையைக் கிழித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல் கடும் எதிர்ப்பு
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட தற்கு மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், டி.கே.ரங்கராஜன், வைகோ, திருச்சி சிவா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
‘காஷ்மீரில் போர்ச் சூழல்’
குலாம் நபி ஆசாத் கூறுகையில், காஷ்மீர் முழுவதும் போர்ச் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பிற்கு நாங்கள் துணை நிற்கிறோம். ஆனால் இன்று பாஜக அரசிய லமைப்பை கொலை செய்துள்ளது என்றார்.
வைகோ ஆவேசம்
சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து காஷ்மீர் மக்களின் உணர்வுகளோடு விளையாடி விட்டனர். கொசோவோ, கிழக்கு தைமூர் மற்றும் தெற்கு சூடானாக காஷ்மீர் ஆகக்கூடாது. காஷ்மீர் மக்களுக்கு நேரு கொடுத்த வாக்குறுதி யை மீறுகிறது பாஜக. காஷ்மீரை காக்க கார்கில் போரில் தமிழ் இளைஞர்கள் உயிர்நீத்தனர். காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா கவுன்சில் தலையிடக் கூடும். காஷ்மீரை பிரிக்கும் முடிவு ஜனநாயக படுகொலை. இந்த முடிவை நான் எதிர்க்கிறேன். இது அவமானம். இது ஜனநாயகத்தின் படுகொலை என வைகோ கூறினார். திரிணாமுல் கட்சியும் கடுமையாக எதிர்த்தது. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளக் கட்சியும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக ஆதரவு
மறுபுறம், இந்த இரண்டு அம்சங்களுக்கும் அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
நிறைவேற்றம்
காரசார விவாதத்திற்குப் பிறகு, பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, பூமியின் சொர்க்கமான காஷ்மீர் தொடர்ந்து சொர்க்கமாகவே நீடிக்கும் என்றும் அம்மாநி லத்தின் வளர்ச்சிக்கு 370வது பிரிவுதான் தடையாக இருப்பதாகவும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அப்பிரிவு தடையாக உள்ளது என்றும் கூறினார். தனியார் கல்வி நிறுவனங்களோ, தனியார் மருத்துவமனைகளோ காஷ்மீருக்குள் நுழைவதற்கு 370வது பிரிவு தடையாக இருக்கிறது என்றும் கூறினார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் 370வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை நிறைவேற்றப்படும் என்று அவைத் தலைவர் அறிவித்தார். குரல் வாக்கெடுப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து நடந்த குரல் வாக்கெ டுப்பில், அரசின் தீர்மானம் மற்றும் மசோதா வுக்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 61 வாக்குகளும் பதிவாகின. அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது பாஜகவுக்கு விசுவாசத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தின.
மக்களவை
இதைத்தொடர்ந்து உடனடியாக மக்களவை யில் இத்தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றிக் கொண்டது மத்திய அரசு. பின்னர், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை செவ்வாயன்று மக்களவையில் முன்மொழிந்து விவாதம் நடத்துவதற்கான அனுமதியைக் கோரி அவை முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு தீர்மானம் கொண்டு வந்து, அதையும் நிறைவேற்றிக் கொண்டார்.