tamilnadu

img

குஜராத் பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!

புதுதில்லி:
குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு மோடி முதல்வராக இருந்தபோது, சங்-பரிவாரங்கள், சிறுபான்மை இஸ்லாமியர்க்கு எதிராக, மிகக் கொடூரமான வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

அப்போது, குஜராத்தின் டாஹோட் மாவட்டம், ரந்திக்பூர் கிராமத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு (அன்றைய வயது 19) என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண்ணும், வெறிபிடித்த ஒரு கும்பலால், மோசமான வகையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை, அந்தக் கும்பல் கொடூரமாக கொலை செய்தது. குறிப்பாக, பில்கிஸ் பானுவின் மூன்றரை வயதுக் குழந்தையின் தலை, பாறையில் அடித்து சிதைக்கப்பட்டது, நாட்டையே உலுக்கியது.
காட்டுமிராண்டித்தனமான இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு, பின்னாளில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும், 5 போலீசார் மற்றும் 2 அரசு மருத்துவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது, 11 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்ததுடன், விடுவிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் போலீசாரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மோடி அரசின் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உள்ளாகி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை அண்மையில் ராஜினாமா செய்த தஹில் ரமணிதான், இந்த முக்கியமான தீர்ப்பை வழங்கியவர் ஆவார்.இதனிடையே, குஜராத் அரசு தனக்கு அறிவித்திருந்த ரூ. 5 லட்சம் இழப்பீடு நியாயமானதல்ல என்று கூறி, பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இழப்பீட்டுத் தொகையை ரூ. 50 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டது. மேலும், அரசு வேலை மற்றும் வீடு வழங்கவும் உத்தரவிட்டு, கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது.

ஆனால், இந்த உத்தரவை 5 மாதமாக நிறைவேற்றாமல் குஜராத் அரசு காலம் கடத்தி வந்தது. மாறாக, தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ. பாப்டே, எஸ்.ஏ. நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குஜராத் அரசு சார்பில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.அவரிடம், “பில்கிஸ் பானுவுக்கான இழப்பீடுகளை ஏன் வழங்கவில்லை?” என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கேள்வி எழுப்பினார். அதற்கு, “இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளானவர்களுக்கு இழப்பீடு வழங்க ஏற்கனவே மாநில அரசிடம் ஒரு திட்டம் உள்ளது. அதன்படியே இழப்பீடு வழங்க முடியும் என்பதால்தான், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளோம்” என்று துஷார் மேத்தா பதிலளித்தார்.ஆனால், நீதிபதிகள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.“பில்கிஸ் பானு 22 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது மட்டுமின்றி, தனது வயிற்றிலிருந்த சிசுவை இழந்துள்ளார். அவருடைய மூன்றரை வயது குழந்தையைத் தலையில் அடித்துக் கொன்றுள்ளனர். தற்போது குடும்பத்தை இழந்து நாடோடி போல, ஒரு தொண்டு நிறுவனத்தில் வாழ்ந்து வருகின்றார். அவருக்கு இழப்பீடாகப் பணம் கொடுப்பதால் அவருடைய வலிகள் எல்லாம் ஆறிவிடுமா என்பது தெரியவில்லை, எனினும் அவருக்கு இதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்?” என்று துஷார் மேத்தாவைப் பார்த்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “பில்கிஸ் பானுவுக்கு 2 வாரங்களில் ரூ. 50 லட்சம் இழப்பீடு, தங்குவதற்கு வீடு, அரசு வேலை ஆகியவற்றை வழங்கியாக வேண்டும்” என்றும் கறாரான உத்தரவைப் பிறப்பித்தனர்.

;