விமர்சனங்களை மோடி அரசு ஒடுக்க தீக்குள் விரல் வைப்பது போன்றது என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கொந்தளிப்புடன் கருத்து தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுச் சந்தைகளில் அரசே பாண்டுகளை (sovereign bonds) விற்று அதன்மூலம் நிதிதிரட்ட முடிவு செய்ததை பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவில் இருந்த ரதின் ராய் மற்றும் ஷாமிகா ரவி ஆகியோர் எதிர்த்தனர் என தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலிருந்து ரதின் ராய் மற்றும் ஷாமிகா ரவி ஆகியோரை நீக்க மோடி அரசு முடிவெடுத்திருக்கிறது. இந்நிலையில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலிருந்து இவர்கள் நீக்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் விமர்சனங்களை மத்திய அரசு ஒடுக்க நினைப்பது தீக்குள் விரலை வைப்பது போன்றது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராகக் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பதவி வகித்த ரகுராம் ராஜன். மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனது பதவியை ராஜினாமா செய்தார். ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலகிய ரகுராம் ராஜன், அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியர் பணிக்கு இவர் திரும்பினார். இந்தநிலையில், அதிகாரத்தில் இருப்பவர்கள் விமர்சனத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தனது லிங்க்டு இன் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ரகுராம் ராஜன், ``அரசு அதிகாரி அல்லது ஆளுங்கட்சி ஆதரவாளர்களிடமிருந்து ஒவ்வொரு விமர்சகருக்கும் போன் கால் சென்றால், அவர்களின் பெரும்பாலானவர்கள் விமர்சிக்கும் அளவைக் குறைத்துக் கொள்வர். அதன்பின்னர், கடினமான உண்மையை மறுக்கவே முடியாது என்ற சூழல் வரும்வரை அரசு விரும்பும் நல்ல சூழலே நிலவும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ``பத்திரிகைகள் உட்படச் சிலரின் விமர்சனங்கள் தனிநபரைத் தாக்கும் வகையிலும் மோசமாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கடந்த காலங்களில் நான் பணிபுரிந்தபோது அதேபோன்ற விமர்சனங்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன். இருப்பினும், விமர்சனங்களை ஒடுக்குவது என்பது தீக்குள் விரலை வைப்பது போன்றது. கொள்கை முடிவுகளில் ஏற்படும் தவறுகளில் அது எதிரொலிக்கும்'' என்றும் ரகுராம் ராஜன் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அதேபோல், பொதுமக்களின் விமர்சனங்களை ஒடுக்கும் அரசுகள், தங்களுக்குத் தாங்களே மிகப்பெரிய தீங்கிழைத்துக் கொள்கின்றன'' என்று அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்