tamilnadu

img

பாஜகவால் லவாசா உயிருக்கு ஆபத்தா?

புதுதில்லி:
இந்திய தேர்தல் ஆணையமானது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது, அப்பட்டமாக பாஜக ஆதரவு நிலையெடுத்தது. எதிர்க்கட்சிகள் இதுபற்றி வெளிப் படையாகவே குற்றச்சாட்டுக்களை வைத்தும் நிலைபாட்டை மாற்றிக் கொள்வதாக இல்லை.

இந்நிலையில்தான், மூன்று தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா என்பவரே, தேர்தல் ஆணையம் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.பிரதமரின் பிரச்சாரம் தேர்தல் விதிமுறைக்கு எதிரானது என்ற கருத்தை, சக அதிகாரிகளான சுனில்அரோரா, சுஷில் சந்திரா ஆகியோர்கவனத்திலேயே கொள்ள மறுப்பதாக குற்றம் சாட்டிய அவர், தேர்தல் முடியும் வரை, ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்றும்அறிவித்தார்.பாஜகவால், தேர்தல் ஆணையர்களுக்கு உள்ளேயே மோதல் ஏற்பட்டது, மக்களவைத் தேர்தலின் போது விவாதத்தையும் கிளப்பியது.இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராகத் தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா எழுதிய குறிப்புகள் என்ன? என்று கேட்டு,அண்மையில், புனேவைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் விகார் துர்வே தலைமை தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். 

பிரதமரின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையர் லவாசா தெரிவித்த கருத்துக்களை வெளியிட வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது.குறிப்பாக, பிரதமர் மோடியின் 2019 ஏப்ரல் 1 வார்தா உரை, ஏப்ரல் 9 லாத்தூர் உரை, ஏப்ரல் 21-ஆம் தேதி பதன், பர்மேர் ஆகிய பகுதிகளில் ஆற்றிய உரை, ஏப்ரல் 25 அன்று வாரணாசியில் ஆற்றிய உரை ஆகியவற்றின் மீது, அசோக்
லவாசா, தெரிவித்த கருத்து என்ன? என்று விகார் கேட்டிருந்தார். மேலும் லவாசாவின் குற்றச் சாட்டுக்கள் அடிப்படையில், பிரதமர் மோடியின் பிரச்சாரத்தின் மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்குத்தான் தேர்தல் ஆணையம் தற்போது ‘பதில்’ என்ற பயமுறுத்தல் ஒன்றை செய்துள்ளது. “இதுபோன்ற தகவலை வெளியிடுவது என்பது ஒரு சிலரின் உயிருக்கு ஆபத்தாகவோ, அல்லது அவர்கள் தாக்கப்படுவதற்குக் காரணமாகவோ அமையலாம்” என்று விகாருக்கு அளித்த பதிலில் ஆணையம்தெரிவித்துள்ளது. அத்துடன், ஒருவரின் உயிருக்கு ஆபத்தாக அமையும் தகவல்களைத் தரவேண்டியதில்லை என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால், அசோக் லவாசா, மோடி மீது வைத்த புகார்கள் குறித்து தெரிவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது. 

தேர்தல் ஆணையத்தின் இந்தபதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது. தேர்தல் ஆணையர் ஒருவர் கூறிய புகாரை வெளியிட்டால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால், பிரதமர் மோடி மற்றும்
பாஜகவால் அசோக் லவாசாவுக்கு ஆபத்து ஏற்படும் என்று தேர்தல் ஆணையமே கருதுகிறதா? என்று சமூக ஆர்வலர்கள் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

;