முகநூல் விளம்பரத்திற்கு ரூ. 10 கோடி செலவிட்ட பாஜக!
புதுதில்லி, ஆக. 28 - கடந்த பதினெட்டு மாதங்களில், முகநூலின் மிகமுக்கிய தேர்தல், அரசியல் விளம்பரதாரராக பாஜக இருந்துள்ளது, தற்போது தெரிய வந்துள்ளது. இந்தக் காலத்தில், ரூ. 10 கோடியை முகநூல் விளம்பரங்களுக்காக பாஜக வாரி இறைத்துள்ளது. 2019 ஆண்டு பிப்ரவரி முதல் ஆகஸ்ட் 24 வரையிலான இந்த முகநூல் விளம்பரக் கணக்கில், பாஜக பெயரில் மட்டும் நேரடியாகவே ரூ. 4.61 கோடி ரூபாய்க்கு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, ‘மோடிக்கான எனது முதல் வாக்கு’ என்ற முகநூல் சமூகவலைத்தள பக்க த்திற்கு ரூ. 1 கோடியே 39 லட்சம், ‘பாரத் கே மான் கி பாத்’ என்ற முகநூல் சமூக வலைத்தள பக்கத்திற்கு ரூ. 2 கோடியே 24 லட்சம் செய்தி மற்றும் ஊடக வலைத் தளமாக வகைப்படுத்தப்பட்ட ‘நேஷன் வித் நமோ’ என்ற முகநூல் பக்கத்திற்கு ரூ. 1 கோடியே 28 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. பாஜக முன்னாள் எம்.பி.யும், எஸ்ஐஎஸ் (Security and Intelligence Services - SIS) நிறுவனத்தின் உரிமையாளருமான ஆர்.கே சின்ஹா வுடனும், ரூ. 65 லட்சம் செலவில் ஒரு வலைத் தள பக்கம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பக்கங்களில் ‘பாஜக-வுடன் தொடர்புடையவை’ என்று எந்த இடத்திலும் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், விளம்பரதாரர்கள் பற்றிய தகவலின் கீழ், மூவரும் தங்கள் முகவரியை “6 – ஏ, பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா மார்க், மிண்டோ பிரிட்ஜ் காலனி, பரகாம்பா சாலை, புது தில்லி 110002” என்றே பதிவிட்டுள்ளனர். இது, பாஜக-வின் தேசிய தலைமையகத்தின் முகவரி என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, முகநூல் விளம்பரங்களுக்கு பாஜக வாரியிறைத்த ஒட்டுமொத்த தொகை ரூ. 10 கோடியே 17 லட்சம் என்பது அம்பல மாகி இருக்கிறது. முகநூலின் “சமூகப் பிரச்சனைகள், தேர்தல்கள் மற்றும் அரசியல்” என்ற பிரிவில் முதல் 10 நபர்களின் விளம்பர செலவு ரூ. 15 கோடியே 81 லட்சம். இதில் 64 சதவிகிதத் தொகையை (ரூ. 10.17 கோடி) பாஜக மட்டும் அள்ளிக் கொடுத்துள்ளது. இந்த குறிப்பிட்ட விளம்பரப் பிரிவில் முதல் பத்து இடங்களில் உள்ள மற்ற விளம்பரதாரர் களில், செய்தித் தளமான ‘டெய்லிஹண்ட்’ ரூ. 1 கோடிக்கு சற்று அதிகமாக செலவிட்டுள்ளது. ஆன்லைன் வியாபார நிறுவனமான ‘பிளிப் கார்ட்’ ரூ. 86 லட்சத்து 43 ஆயிரம் செலவிட்டுள் ளது. ஆனால், வர்த்தக - வியாபார நிறு வனங்களைக் காட்டிலும் 10 மடங்கு அதிக மான தொகையை விளம்பரத்திற்கு பாஜக வாரி இறைத்துள்ளது. இதே காலகட்டத்தில், இந்தியாவின், பிர தான எதிர்க்கட்சியான காங்கிரஸ், ரூ. 1 கோடியே 84 லட்சம் வரை செலவு செய்துள் ளது. ஆம் ஆத்மி கட்சி ரூ. 69 லட்சம் செல விட்டுள்ளது. இந்தியாவில், ஆளும் பாஜக கட்சியினர் செய்யும் வெறுப்புப் பிரச்சாரங்களை, முக நூல் நிறுவனம் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ ஏடு அண்மையில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. பாஜக-வை பகைத்தால் வர்த்தக ஆதாயங்களை இழந்து விடுவோம் என்று ‘முகநூல் இந்தியா’ குழுவினரை, அதன் இயக்குநர் அங்கி தாஸ் மிரட்டி பணிய வைத்ததே இதற்கு காரணம் என்றும் ‘வால்ஸ்டீரிட் ஜர்னல்’ தனது கட்டுரையில் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.