tamilnadu

img

எதிர்காலத்தை நினைத்து கலங்கும் 67% பேர்...

புதுதில்லி:
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது 50 சதவிகிதக் குடும்பங்களின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.கொரோனா தொற்றுப் பரவல், இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 6 லட்சத்து 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 ஆயிரதது 848 பேர் உயிர் இழந்துள்ளனர். பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதுமுடக்கம் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து, சிஎன்பிசி - டிவி 18 (CNBC-TV18) இணைந்து, சர்வே ஒன்றை நடத்தியுள்ளன. நாடெங்கும் உள்ள ஆண்கள், பெண்கள் என பலதரப்பட்ட வயதினரிடையே நடந்த இந்த கருத்துக் கணிப்பில் 10,125 பேர் பங்கேற்று கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். 

இந்த கணக்கெடுப்பில் சுமார் 50 சதவிகித குடும்பங்கள், தங்களின் பொருளாதாரம் கடும் பாதிப்பு அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இவர்களில் ஊதியவெட்டுதான் தங்களின் பொருளாதாரப் பிரச்சனைக்கு காரணம் என்று 30 சதவிகிதம் பேரும், வேலையிழப்பு காரணம் என்று 19 சதவிகிதம் பேரும், தற்காலிக விடுப்பு என 23 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.அதேபோல, ஊதிய வெட்டு பாதிப்பை எதிர்கொண்டவர்களில் 56 சதவிகிதம் பேர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், வேலை இழந்தவர்களில் 47 சதவிகிதம் பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் இந்த சர்வே கூறுகிறது.

பாதிப்பு எவ்வளவு காலத்திற்கு தொடரும் என்ற கேள்விக்கு, 30 சதவிகிதம் பேர் இன்னும் 2 முதல் 3 மாதங்களுக்கு இந்த பொருளாதார பாதிப்பு தொடரும் எனக் கூறி உள்ளனர். இன்னும் ஆறு மாதங்களுக்கு இந்நிலை தொடரும் என்று 28 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.ஒட்டுமொத்தமாக 100-க்கு 67 பேர் வேலை இழப்பு, ஊதிய வெட்டு மற்றும் தற்காலிக விடுப்பு காரணமாக, தங்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். செலவுகளைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டுவோரில் 82 சதவிகிதம் பேர் தங்கள் செலவுகளைக் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் 37 சதவிகிதம் பேர் மிகக்கடுமையாக செலவுகளைக் குறைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தங்களின் செலவுகளில் 57 சதவிகிதத்தை மளிகை மற்றும் மருந்துக்குச் செலவிடுவதாகவும், 25 சதவிகிதத்தை மது மற்றும் துணிமணிகளுக்குச் செலவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.சுமார் 63 சதவிகிதம் பேர் பெரிய மின்னணு பொருட்கள் மற்றும் பர்னிச்சர்கள் வாங்குவதைத் தள்ளிப்போட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

;