tamilnadu

img

ப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ காவல்

புதுதில்லி,ஆக.22-  ஐ.என்.எக்ஸ். மீடியா முறை கேடு வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை  5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரணை நடத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.  ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான  ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் புதனன்று இரவு தில்லியில் உள்ள அவரது வீட்டில் சுவர் ஏறிக்குதித்து கைது செய்தனர். 

ஐ.என்.எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம் 2007ஆம் ஆண்டில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாக சிபிஐயும் அமலாக்கத்துறை யும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில், அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து  ப.சிதம்பரம் தில்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அங்கு முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.பின்னர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வெள்ளிக்கிழமையன்றுதான் மனு மீது விசாரணை நடத்துகிறது.

சுவர் ஏறிக் குதித்து...

இதற்கிடையில்  புதனன்று தெற்கு தில்லி யின் ஜோர் பாஃக்கில் உள்ள சிதம்பரத்தின் வீட்டிற்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அன்று இரவு சுவர் ஏறிக்குதித்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசார ணை நடத்தப்பட்டது. இந்நிலையில் வியாழ னன்று  தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அஜய் குமார் குஹார் முன்னிலை யில் விசாரணை நடைபெற்றது.   சிதம்பரம் தரப்பில் வாதங்களை முன் வைக்க அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான குழு ஆஜ ரானது. சிபிஐ சார்பில் சொலிசிட்டர் ஜென ரல் துஷார் மேத்தா, உதவி சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ் ஆகியோர் வாதிட்டனர். அப்போது ப.சிதம்பரம் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று புகார் கூறிய சிபிஐ, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்தது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில் இன்னும் மிகப்பெரிய சதித் திட்டங்கள் இருக்கக் கூடும் என்பதால் அதை வெளிக்கொண்டு வர காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிதம்பரம்  தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், சிதம்பரத் திடம் கேட்பதற்கென்று சிபிஐயிடம் கேள்வி களே இல்லை என்று குற்றம்சாட்டினார். குற்றப்பத்திரிக்கை கூட இன்னும் தாக்கல் செய்யவில்லை என்று வாதிட்டார். 

ஆதாரத்தின்படி விசாரணை நடக்கவில்லை

ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி  வாதிடுகை யில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு அடிப்படை ஆதாரங்களின் அடிப்படையில் நடக்கவில்லை, வேறு எதற்காகவோ நடக்கிறது. சிதம்பரத்திடம் சிபிஐ எதிர்பார் ப்பது கேள்விகளையா? பதில் களையா? இடைக்கால முன்ஜாமீனை 7 மாதங்கள் கழித்து தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது ஏன்? சிபிஐயின் வாதங்களை அடிப்படையிலேயே எதிர்க்கிறேன். ஏற்கனவே விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளே சிதம்பரத்திடம் மீண்டும் கேட்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததில் சம்பந்தப்பட்ட 6 அரசு செயலாளர்களும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் எந்த ஆதார மும் இல்லாமல் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தைக் கைது செய் திருப்பது தவறு. நேற்றைய விசாரணையின் போது கேட்கப்பட்ட 12 கேள்விகளில் 6 கேள்விகள் ஏற்கனவே சிதம்பரம் பதி லளித்தவை. கடந்த 11 மாதங்களில் சிபிஐ தரப்பில் எந்த சம்மனும் அனுப்பப்பட வில்லை. ஆனால் சம்மன் அனுப்பியும் சிபிஐ  சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியிருக்க லாமே? அவ்வாறு ஏன் செய்யவில்லை. சிதம்பரத்திடம் 12 கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அபிஷேக் சிங்வி வாதங்களை முன் வைத்தார்.

தீர்ப்பு

இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர் நீதிபதி அளித்த தீர்ப்பில், ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை 5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும் அவரது குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் தினமும் 30 நிமிடம் சந்தித்து பேசவும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மருத்துவப்பரிசோதனை செய்யவும் சிபிஐ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

‘மகளை கொன்றவரை சிபிஐ நம்புகிறது’

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா கூறுகையில்,தனது சொந்த மகளை கொலை  செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணின் அறிக்கையின் பேரில் ஒரு அனுபவமுள்ள அரசியல்வாதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார். 

விசாரணை அதிகாரி திடீர் மாற்றம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து  வந்த அதிகாரி ராகேஷ் அகுஜா தில்லி  காவல்துறைக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை, அமலாக்கத் துறை சார்பில் விசாரித்து வந்த விசாரணை அதிகாரி ராகேஷ் அகுஜா திடீரென தில்லி  காவல்துறைக்கு  திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்.  இது குறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அமலாக்கத்துறையில்  ராகேஷ் அகுஜாவின் பதவிக்காலம் 3 வாரத்திற்கு முன்பே முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளது.

(பிடிஐ)

ப. சிதம்பரம் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறையும், மத்திய புலனாய்வுத்துறையும் புதன் இரவு அவரது வீட்டில் புகுந்து வலுக்கட்டாயமாக கைது செய்து, சிபிஐயின் கட்டுப்பாட்டில் அடைத்து வைத்துள்ளனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை நேர்மையற்ற, பழிவாங்கும் நோக்கோடு நடைபெற்றுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.  ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை தில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார். அவ்வழக்கு வெள்ளியன்று (23.8.2019) விசாரணைக்கு வரவுள்ள சூழ்நிலையில்,  அவசர கதியில் அவரது வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, பயங்கரவாதியை கைது செய்வது போல சுற்றிவளைத்து கைது செய்துள்ளதானது கண்டனத்திற்குரியதாகும்.

பதவியிலிருக்கும் போது தவறுகள் இழைக்கப்பட்டிருக்குமாயின் சம்பந்தப்பட்டவர் யாராயிருப்பினும் அவர் மீது வழக்கு பதிவு செய்து சட்டவிதிகளுக்கு உட்பட்டு கைது செய்வது தவறானதல்ல. ஆனால், ப. சிதம்பரம் அவர்களை கைது செய்திருக்கும் விதம் மற்றும் அவரை கைது செய்தே ஆக வேண்டும் என்பதில் காட்டப்பட்டிருக்கும் தீவிரம் அரசியல் பழிவாங்குதல் நடவடிக்கையேயாகும். எதிர்கட்சித் தலைவர்களை அச்சுறுத்துவதற்கும், காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்குவதற்கும் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பாஜக அரசு சட்ட நியதிகளுக்கு புறம்பாக பயன்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

சிபிஎம் மாநில செயலாளர்  கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை



 

;