திருவனந்தபுரம், மே 23-‘இந்த பெண், மலையாளிகளின் மனதிலிருந்து ஒருபோதும் மாய்ந்துவிட மாட்டார்; அவரது நினைவோடு தொற்றுநோய்களுக்கு எதிராக கரம் கோர்க்க நாம்உறுதியேற்போம்’ கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சரின் முகநூல் பதிவின் வரிகள் இவை. நிபா வைரசின் தீவிரத்தை அறிந்திருந்தும் நோயாளிகளுக்கு தைரியமூட்டி சிகிச்சை அளித்தபோது தன்னுயிரை பறிகொடுத்த செவிலியர் லினியின் ஓராண்டுநினைவு நாளில் தனது முகநூல் பதிவில்கேரளா அமைச்சர் சைலஜா மேலும்கூறியுள்ளதாவது: சிஸ்டர் லினி நம்மைவிட்டு பிரிந்து ஓராண்டு கடந்துவிட்டது.எதையும் எதிர்பார்க்காமல் மேற்கொண்ட சேவையின்போது உயிரை துறந்த இந்த பெண், மலையாளிகளின் நினைவிலிருந்து ஒருபோதும் மாய்ந்து போகமாட்டார். ஒட்டுமொத்தசமூகமும் நிபா வைரஸால் மிகவும் அச்சமடைந்த காலம், கோழிக்கோடு மாவட்டம் சங்ஙரோத்து கிராமத்தில் சூப்பிக்கடா என்கிற உட்பிரதேசத்தில் ஒருகுடும்பத்தைச் சேர்ந்தவர்களை நிபாவைரஸ் பாதித்தது. வைரசால் பாதிக்கப்பட்ட நான்குபேரும் மரணத்தின் பிடியில்சிக்கியிருந்தனர். ஸாபித்தின் மரணத்துக்கு பிறகே அது நிபா வைரசின் பாதிப்புஎன்பது தெரியவந்தது. கோழிக்கோடுபேபி மெமோரியல் மருத்துவமனையிலிருந்து மணிப்பால் வைரோலஜி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளை பரிசோதித்தபோதுதான் நிபா குறித்து தெரியவந்தது. 2018 மே 19 அன்று நிபாவைரஸ் பாதிப்பாக இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், பூனா வைரோலஜி ஆய்வகத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. மே 20ஆம் தேதி பூனாவிலிருந்து அறிக்கைகிடைத்தது. அது நிபா வைரசின் இருப்பை உறுதி செய்தது.
19ஆம் தேதி முதலே சுகாதாரத்துறை, விலங்குகள் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளும் களமிறங்கின. அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன் மற்றும்மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் முழுமையான விழிப்புணர்வு பிரச்சாரமும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. முதல் கட்டமாக வைரஸ் பாதிக்கப்பட்ட 18 பேர் தவிர கூடுதலாக யாருக்கும் நோய்தொற்று ஏற்படுவதை தடுக்க முடிந்தது. இறப்பு விகிதம் மிக அதிகமான வைரஸ் என்பதால் நோய் பாதிக்கப்பட்ட 18 பேரில் 16 பேர் மரணமடைந்தனர். அஜியானா,யுபிஷ் ஆகியோர் மரணத்தின் பிடியிலிருந்து மீண்டது பெரும் ஆறுதல் அளித்தது. இதற்கிடையே மே 21ஆம் தேதி நிபாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஆரம்பத்தில் சிகிச்சை அளித்தபேராம்பறா தாலுகா மருத்துவமனையின் செவிலியர் லினி மரணமடைந்தது அனைவரையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியது.
மிகவும் துணிச்சலான அணுகுமுறையை மரணத்தின் முன்னால் லினிமேற்கொண்டார். இறப்பதற்கு சற்று முன்பு தனது உயிருக்கு நிகரான கணவர் சஜீஸையும், பிஞ்சு குழந்தைகளையும் ஒருமுறை பார்க்ககூட முடியாத அவலநிலையிலும் உறுதியை கைவிடவில்லை. ‘குழந்தைகளை நன்றாகபார்த்துக்கொள்ளுங்கள், இனி நாம் பார்க்க முடியாது’ என குறிப்பிட்டு லினி எழுதிய வாசகங்கள் ஒவ்வொரு மலையாளிக்கும் மனம் வலிக்கும் நினைவுகளாகும். லினியின் வார்த்தைகளை போற்றி தனது குழந்தைகளுக்குஎந்த குறையும் ஏற்படாத வகையில் நடந்துகொள்கிறார் சஜீஸ். சுகாதாரத்துறையில் செயல்படும் செவிலியரும்மருத்துவர்களும் மற்ற ஊழியர்களும்அடங்கிய அமைப்பில் அனைவருக்கும் லினி ஒரு முன்மாதிரியும், ஆவேசம் ஊட்டுபவரும் ஆவார்.நிபா பரவிய பகுதிகளில் மீண்டும் வராது என்று கூற இயலாது என்பதுஆய்வாளர்களின் கூற்று. டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான வவ்வால்களின் இனப்பெருக்க காலத்தில் நிபா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இம்முறை சுகாதாரத்துறை முன்னதாகவே முன்னெச்சரிக்கை மேற்கொண்டிருந்தது. அனைத்துமருத்துவக் கல்லூரிகளிலும் ‘தனிமை’வார்டுகள் ஏற்படுத்தியும் சந்தேகத்துக்குரிய அறிகுறி உள்ள நோயாளிகளை பரிசோதனை செய்ய சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. மக்களிடம் நல்ல விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கூட்டாக முயன்றால் நிபாமட்டுமல்ல டெங்கு காய்ச்சல், எச்1 என்1,எல் காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற அனைத்து தொற்று நோய்களுக்கும் அமைப்பு ரீதியான செயல்பாடுகளால் தீர்வுகாண முடியும். நாடு முழுவதும் ஒன்றுபட்டு நின்றால் தூய்மையையும், நோய் எதிர்ப்பையும் நம்மால் உறுதி செய்ய முடியும். லினியின் நினைவோடு தொற்று நோய்களுக்கு எதிராக கரம் கோர்க்க உறுதியேற்போம்.’ இவ்வாறு அமைச்சர் சைலஜா கூறியுள்ளார்.