tamilnadu

img

திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பட்டுச் சேலைகளின் சிறப்பு

திருச்சிராப்பள்ளி, அக்.22- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 9 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது  திருபுவனம். இந்நகரில் 1955 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள் 129 உறுப்பினர்களை கொண்டு துவங்கப்பட்ட இச்சங்கம் 2018-2019 ல் 1825 உறுப்பினர்களைக் கொண்டு 64 ஆண்டுகளை கடந்து தமிழகத்தின் தலைசிறந்த சங்கமாகவும், பட்டு சேலை விற்பனையில் தமிழகத்தில் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் சங்கமாகவும் திகழ்ந்து வருகிறது.  பட்டு என்று சொன்னாலே திருபுவனம் என்று சொல்லும் அளவிற்கு பேரும் புகழும் பெறுவதற்கு இப்பகுதி வாழ் கைதேர்ந்த நெசவாளர்களின் திறமையே காரணம். இச்சங்கத்தில் பட்டு சேலைகளின் வண்ணம், வடிவமைப்பு, சேலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி ஜரிகையின் தரம் ஆகியவை என்றும் தனித் தன்மையுடன் விளங்குவதால் ஆண்டு விற்பனையில் தமிழகத்தில் முதல் பட்டு கூட்டுறவு சங்கமாகவும் திகழ்ந்து வருகிறது.  திருபுவனம் பகுதியில் வசித்து வரும் கைதேர்ந்த நெசவாளர்களால் சேலையின் உடல் பகுதியில் பல்வேறு வேலைப்பாடுகளுடன் கூடிய சேலைகள், முழுவதும் ஜரிகையிலான டிஸ்யு சேலைகள், ஜாங்களா சேலைகள் மற்றும் சாமுத்ரிகா ரக சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டு சேலை உற்பத்திக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிர்ணயம் செய்துள்ள அளவீடுகளின்படி பட்டு மற்றும் ஜரிகையினை உபயோகப்படுத்தி பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால், திருபுவனம் பட்டு சேலைக்கு என புவிசார் குறியீடு பெற்ற சங்கமாகவும் திருப்புவனம் பட்டு கூட்டுறவு சங்கம் திகழ்கிறது.  

மேலும் இச்சங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பதற்காக கைத்தறி முத்திரை (Handloom Mark) உரிய அளவீடுகளின்படியான பட்டு  உற்பத்தி செய்யப்படும் சேலைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக பட்டு முத்திரை (Silk Mark) சேலைகளில் பதிக்கப்பட்டு வருகிறது.  பட்டு சேலைகளில் நேர்த்தியான வண்ணம் புதிய வடிவமைப்புகளைக் கொண்டு பட்டு சேலைகள் உற்பத்தி  செய்யப்படுவதன் அடிப்படையில் மாநில அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த வடிவமைப்புக்கென வழங்கும் பரிசினை இச்சங்க உறுப்பினர்கள் தொடர்ந்து பெற்று வருகின்றனர். 2018-2019 ஆம் ஆண்டில் இச்சங்க உறுப்பினர்களுக்கு சிறந்த வடிவமைப்புடன் கூடிய பட்டு சேலை நெசவு செய்தமைக்கான விருதும், சிறந்த வடிவமைப்பினை உருவாக்கிய வகையில் இச்சங்க பணியாளருக்கு சிறந்த வடிவமைப்பாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.  திருபுவனம் பட்டு கைக்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கைதேர்ந்த திருபுவனம் பகுதி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் ரூ.8000 முதல் ரூ.1,50,000 வரை சங்கத்தின் தலைமையக விற்பனை நிலையத்திலும், தமிழகத்தில் உள்ள 23 முகவர் கிளை விற்பனை நிலையங்கள் மற்றும் மாநில கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திலும்(Cooptex) கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;