tamilnadu

img

சிபிஎம் மூத்த தலைவர் தோழர் பி.தர்மலிங்கம் காலமானார்

சேலம், ஜூலை 24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஒன்றுபட்ட சேலம் மாவட்ட செயலாளராக பணியாற்றி யவருமான தோழர் பி.தர்மலிங்கம் புதனன்று இரவு 8 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 83. சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் 1936ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பி.தர்மலிங்கம். இளம்வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பு ஏற்பட்டு, இளைஞர்களை திரட்டும் பணியில் ஈடுபட்டார். 1953ல் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் போன்ற தலைவர்களால் ஈர்க்கப்பட்டு, கூட்டுறவு வங்கிப் பணியை கைவிட்டு முழுநேர கட்சி ஊழியராக மாறினார். 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போது, அதில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றத் தொடங்கிய தோழர் தர்மலிங்கம், சேலம் மாவட்டம் முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஆகியோரை அணிதிரட்டி எண்ணற்ற போராட்டங்களுக்கு தலைமையேற்று நடத்தியவர். 1985ல் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அவர், 14 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக வும், 15 ஆண்டுகள் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், திறம்பட செயலாற்றி, கட்சியின் வளர்ச்சிக்கு பாதை வகுத்தவர். தோழர் தர்மலிங்கத்திற்கு டி.ரவீந்திரன், வெற்றிச் செல்வன் ஆகிய மகன்களும், செல்வி, சத்தியவாணி ஆகிய மகள்களும் உள்ளனர். டி.ரவீந்திரன் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராவார். மருமகன் ஆர்.வெங்கிடபதி தமிழ்நாடு சுமைப்பணித் தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் ஆவார். வாழ்நாள் முழுவதும் செங்கொடி இயக்கத்திற்கு அர்ப்பணித்து, குடும்பமே கட்சிக் குடும்பமாக செங்கொடியை உயர்த்திப் பிடிக்கச் செய்த தோழர் பி.தர்மலிங்கம் மறைவுக்கு கட்சியின் சேலம் மாவட்டக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது என மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இறுதி நிகழ்ச்சி

தோழர் பி.தர்மலிங்கம் இறுதிநிகழ்ச்சி இன்று (ஜூலை 25) மாலை 4 மணிக்கு சேலம் அஸ்தம்பட்டி கண்ணங்குறிச்சி சாலையில் உள்ள சின்னதிருப்பதியில் நடைபெறுகிறது.

சிபிஎம் இரங்கல்

கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட சேலம் மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் பி.தர்மலிங்கம் மறைவுக்கு கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.  தோழர் தர்மலிங்கம் சேலம் மாவட்டத்தில் உழைப்பாளி மக்களைத் திரட்டுவதில் முன்வரிசையில் நின்று பணியாற்றியவர். கட்சியின் மாவட்டச் செயலாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் நெடுங்காலம் செயலாற்றியவர். இளம்வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களின் போராட்டங்களுக்கு தலைமையேற்று சிறை சென்றவர். அவரைப் பிரிந்து வாடும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான டி.ரவீந்திரன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தோழர் தர்மலிங்கம் மறைவுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

;