tamilnadu

img

ஹிந்துராஷ்டிரத்தில் சூத்திரர்கள் அல்லது தீண்டத்தகாதவர்கள் அடிமைகளாக மட்டுமே இருக்க முடியும் - பன்வர் மேக்வன்ஷி

அகிம்சை என்பது கோழைத்தனம் என்று எங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது: ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகிய தலித் ஆர்வலர் பன்வர் மேக்வன்ஷி

சுஷில் குமார் நடத்திய நேர்காணல்

2020 மார்ச் 14, கேரவான் இதழ்

’வேத வன்முறை என்பது வன்முறை அல்ல என்று அனைத்து பிராமண வேதங்களிலும் கூறப்படுவதன் மூலம், வன்முறைக்கு எப்போதும் உயர்ந்த இடம் ஒன்று ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்குள் கட்டப்பட்டிருக்கின்றது’ என்று ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த போது, தான் கற்றுக் கொண்டவை குறித்து தலித் ஆர்வலரான பன்வர் மேக்வன்ஷி குறிப்பிடுகிறார்.

1980களின் பிற்பகுதியில், தலித் சமூகத்தைச் சார்ந்த 13 வயதான பன்வர் மேக்வன்ஷி, ராஜஸ்தானில் உள்ள ராஷ்டிரிய  ஸ்வயம் சேவக் 
சங்கம் நடத்தி வந்த சாகாக்களில்  கலந்து கொள்ளத் தொடங்கினார். சுமார் நான்கு ஆண்டுகளில், முஸ்லீம்கள் மீது வெறுப்பைக் கக்கும் அளவிற்கு வளர்ந்த மேக்வன்ஷி,. தன்னுடைய ஹிந்து அடையாளத்தின் மீது மிகுந்த பெருமை கொள்ளத் தொடங்கினார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஹிந்து ராஷ்டிரத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அவர், அந்த  அமைப்பிடமிருந்து ராணுவ  பயிற்சியையும் பெற்றுக் கொண்டார். ஆனாலும் தன்னிடம் ஆர்எஸ்எஸ் காட்டிய பாகுபாட்டை எதிர்கொண்ட பிறகே,  சாதி ஹிந்துக்களுக்கும், 
தலித்துகளுக்கும் இடையே அந்த அமைப்பு கொண்டிருந்த பார்வை வேறுபட்டதாக இருந்ததை அவர்  உணர்ந்து கொண்டார்.

மேகவன்ஷி இப்போது பத்திரிகையாளராக, தலித் ஆர்வலராக இருந்து வருகிறார். அவருடைய  ’நான் கரசேவகனாக இருந்தேன்’ (மெயின் ஏக் கர்சேவாக் தா) என்ற நூல் ஹிந்தியில் முதன்முதலாக 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான ’நான் ஹிந்துவாக இருக்க முடியாது: ஒரு தலித்தின் கதை’ இந்த ஆண்டு ஜனவரியில் நவயாணா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அந்த நூல் வெளியான மாதத்தில், தனது தொண்டர்களைப் பயிற்றுவிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்முறைகள், அது எவ்வாறு வன்முறையை பெருமைப்படுத்துகிறது, ஹிந்து ராஷ்டிரம் குறித்து அது கொண்டிருக்கும் பார்வை பற்றி சுஷில் குமார் என்ற பத்திரிகையாளர் மேக்வன்ஷியிடம் பேசினார்.

நீங்கள் எந்த காலகட்டத்தில்  ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தீர்கள்? .

1987 முதல் 1991 வரை நான் அந்த அமைப்பில் தீவிரமாக இருந்தேன். 1990ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் அயோத்தியில் நடைபெற்ற முதல் கரசேவாவில் நான் பங்கேற்றேன். பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறினேன். ஆனால் சமாஜ்வாடி கட்சித் தலைவரான  முலாயம் சிங்கின் அரசாங்கம் ஆட்சியில் இருந்ததால் என்னால் அங்கு சென்றடைய முடியவில்லை. அந்த நேரத்தில், நாங்கள் அவரை "முல்லா-யாம்" சிங் என்றே அழைத்தோம், அதாவது ’மௌலானா முலாயம்’ என்று. அவருடைய அரசாங்கம் என்னை, துண்ட்லா நிலையத்திற்கு அருகே கைது செய்து, ஆக்ரா சிறையில் பத்து நாட்கள் அடைத்து வைத்திருந்தது. அதற்குள், என்ன கரசேவா நடக்க வேண்டுமோ, அது நடந்து முடிந்திருந்தது. அதற்குப் பின்னர் நான் வீடு திரும்பினேன்.

சாகாவில் பெண்கள் இருந்தார்களா?

சாகாவில், அனைவரும் ஆண்களே. நாங்கள் புருஷார்த், ஆணாதிக்கம் பற்றி மட்டுமே பேசினோம். பெண்களுக்கு அங்கே இடமில்லை என்பது தெளிவாக இருந்தது. புருஷார்த்தத்தின்  பொருள் ஆண்மை, ஆணாதிக்கம் என்று ஒரு வழியாக நான் கண்டு கொண்டேன்.

சுயம்சேவக்காக இருந்த காலத்தில், அங்கே நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

பல விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். முதல் விஷயம், நான் மிகத் தெளிவாக பிற்போக்குத்தனம் கொண்டவனாக மாறினேன். நான் கற்றுக்கொண்ட இரண்டாவது விஷயம் என்னவென்றால், எனது கிராமம், பஞ்சாயத்தில் இல்லாத எவரொருவரையும் எதிரியாக கற்பனை செய்து, அவர்களுடன் சண்டையிட்டு, அவர்களைத் தோற்கடித்து வெறுத்து வந்தேன்.

பிறர் மீது வெறுப்பு கொள்வது உங்களுக்கு எவ்வாறு கற்பிக்கப்பட்டது?

எனது பஞ்சாயத்தில் முஸ்லீம்கள் யாருமே இல்லை. அஜான் சத்தம் கூட என் வீட்டிற்கு வந்ததில்லை. இதையும் மீறி, என் மனதில் முஸ்லீம்கள் மீதான வெறுப்பே நிரம்பியிருந்தது. ’முஸ்லீம்கள் மீது நாம்  வெறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று  நேரடியாக அங்கே சொல்லப்படுவதில்லை. மாறாக ’நாம் ஆரியர்கள், இது நமது நாடு, நாம் சிறந்தவர்கள், நமது ரத்தம் சிறந்தது. முஸ்லீம்கள் வெளியிலிருந்து வந்தவர்கள், நம்மை ஆக்கிரமித்தவர்கள், நம் நாட்டைச் சூறையாடியவர்கள், நம் கலாச்சாரத்தை அழித்தவர்கள், மசூதிகள் கட்ட கோயில்களை உடைத்தவர்கள், நாளந்தா போன்ற பல்கலைக்கழகங்களைப் பாழ்படுத்தியவர்கள். இந்த நாட்டிற்கு எந்த அளவிற்கு மோசமான சூழ்நிலை வந்தாலும், அது சாதியாக இருந்தாலும், தீண்டாமையாக இருந்தாலும், பர்தாவாக இருந்தாலும், அவையனைத்தும் இவர்களாலேயே நமக்கு வழங்கப்பட்டன’ என்று கூறுவதன் மூலம் அது சொல்லித் தரப்பட்டது.  

இந்த விஷயங்கள் மெதுவாக என் மூளைக்குள் நுழைந்து ஆக்கிரமித்தன. முஸ்லீம் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம், அவர்தான் எல்லா தீமைகளுக்கும் மூலகாரணம் - சோமநாதர் கோயிலை உடைத்து, ராமஜென்மபூமி கோயிலை  நாசப்படுத்தினார் - என்றே நான் உணர்ந்தேன். உங்கள் மூளை இந்த விஷயங்களால் நிரப்பப்பட்டிருக்கும் போது, வெறுப்பு என்பது உங்களால் உணர முடியாத வகையில், மிகவும் இயற்கையாக, மிகவும் எளிதாக அங்கே நிகழ்கிறது.

ஆர்எஸ்எஸ் உங்களுக்கு எந்த வடிவத்தில் ராணுவப்பயிற்சி  அளித்தது?

ஒவ்வொரு சுயம்சேவக்கும் இதை தனது முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டில் செய்ய வேண்டும். மூன்றாம் ஆண்டில், அவர்கள் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமிற்கு அதாவது OTCக்குச்  செல்வார்கள். இதில் அவர்களுக்கு கத்தி, ஈட்டி, லத்தி மற்றும் துப்பாக்கியைப் பயன்படுத்துவதில் பயிற்சி தரப்படும். சட்லி மற்றும் பெட்ரோல் குண்டுகளை எவ்வாறு தயாரிப்பது என்பதை நானே கற்றுக்கொண்டேன் . மதப் போரில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்கு இது  அவசியம் தேவைப்படும். அது இல்லாமல் உங்களால் எதுவும் செய்ய முடியாது.

ஆர்எஸ்எஸ்சின்  நிறுவன அமைப்பு எவ்வாறு இருக்கிறது?

சாகா தான் அவர்களுடைய முக்கியமான தொழிற்சாலையாக இருக்கிறது. சாகாவை விட்டு வெளியேறிய பிறகு, தேவையின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ்சின் வெவ்வேறு கிளைகளுக்கு தொண்டர்கள் செல்கிறார்கள். மாணவர்களாக இருப்பவர்கள் ஆர்எஸ்எஸ்சின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்துக்குச் செல்வார்கள். வன்முறை போக்குகளைக் கொண்டிருப்பவர்கள், பஜ்ரங் தளம் அல்லது துர்கா வாகினிக்குச் செல்வார்கள். மதப்பற்று கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் பாரத் விகாஸ் பரிஷத் அல்லது சத்சங் மண்டலுக்குச்  செல்வார்கள்.

கலவரங்களின் போது,  அவர்களை  பஜ்ரங் தளம் - விஸ்வ ஹிந்து பரிஷத் வடிவத்தில் நீங்கள் காண்பீர்கள்; கல்லூரி வளாகங்களில் அவர்களை ஏபிவிபி வடிவத்தில் நீங்கள் பார்க்கலாம். அதே நபர்களை பின்னர் அரசியலிலும் காணலாம். இருந்தாலும் பஜ்ரங் தளம் - வி.எச்.பி.யைச் சேர்ந்தவர்களும்  அரசியலில் காணப்படுகிறார்கள். அடிப்படையில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை.

அகிம்சை என்பது கோழைத்தனம் என்றும், இந்த கோழைத்தனத்தாலேயே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாங்கள் அடிமையாக இருந்தோம் என்று மிகத் தெளிவாகக் கூறப்படுகிறது,. எனவே, அவர்கள் சதே சத்ய சமாச்சாரத் என்பதைக் கற்பிக்கிறார்கள், அதாவது பழிக்குப் பழி. இப்போது இவர்கள் முகமூடி அணிந்து கொண்டு, தடிகளையும், இரும்பு கம்பிகளையும் ஏந்தி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் பிற இடங்களுக்கு வந்திருக்கிறார்கள் என்று தங்களுடைய ஆச்சரியத்தை பலரும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றே நான் நினைக்கிறேன். வன்முறை எப்போதுமே ஆர்எஸ்எஸ் அமைப்பில் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. வேத வன்முறை வன்முறை அல்ல என்றே அனைத்து பிராமண வேதங்களும் கூறுகின்றன. பல நல்லொழுக்கங்களும் லத்தியில்தான் இருக்கின்றன. எனவே அதை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள் என்று கூட எங்களுக்கு கற்பிக்கப்பட்டது. நான் அதிலிருந்து வெளியே வந்து விட்டேன். ’அறிவாலலயமாக இருக்கின்ற வளாகத்திற்குள் எவ்வாறு லத்திகளுடன் நுழைவது’ என்று மக்கள் நினைக்கக் கூடும். ஆனால் லத்தியின் மொழியில் பதிலளிப்பதற்கு, லத்தியை  கைகளில் வைத்திருக்க வேண்டும் என்றே எங்களுக்கு கற்பிக்கப்பட்டது.

அவர்களுக்கு எதிராக ஏன் நீங்கள் கிளர்ந்தெழுந்தீர்கள்?

சங்கத்தில் தொடர்ந்து நான் இருப்பதற்கான எந்த காரணமும் இருக்கவில்லை. எந்தவொரு குறிப்பிட்ட காரணத்திற்காகவும், நான்  என்னுடைய 13ஆவது வயதில் ஆர்எஸ்எஸ்சில் சேரவில்லை. அந்த வயதில் விளையாடுவதற்கான ஆர்வம் என்னிடம் இருந்தது. அங்கே சென்று விளையாடுவதை குழந்தைகள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதனால் நானும் அங்கே சென்று விளையாடினேன். விளையாடுவதற்காக  அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் என்னை அங்கே அழைத்துச் சென்றனர். நாங்கள் விளையாடுவது, பேசுவது, பாடுவது, காவிக் கொடியை ஏற்றுவது என்று எல்லாமே ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் என்று அழைக்கப்படுகின்ற அமைப்புக்கானது என்பதை ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்குப் பிறகு நாங்கள் கண்டு கொண்டோம். நாங்கள்  அனைவரும் அதன் சுயசேவகர்கள்-தன்னார்வலர்கள். 13 முதல் 18 வயதுக்குட்பட்ட சுயம்சேவக்காக நான் இருந்தேன்.

நான் ஏன் அதிலிருந்து விலகினேன் என்பதற்குப்  பின்னால் ஒரு கதை இருக்கிறது. உதாரணமாக, எனது புவியியல் ஆசிரியரே அங்கே நடக்கின்ர சாகாவையும் ஒருங்கிணைப்பார். புவியியல் வகுப்பில், சூரியன் நெருப்புப் பந்து என்று சொல்லிக் கொடுக்கும் அவர், மாலையில் நடக்கின்ற சாகாவில்  எங்களை சூரிய நமஸ்காரம் செய்யச் சொல்வார். அதற்கான  காரணத்தையும் அவர் கூறுவார். தன்னுடைய வாய்க்குள் சூரியனைப் போட்டு விழுங்கி விடும் அளவிற்கு அனுமன்ஜி மிகவும் தைரியமானவர் என்று அவர் எங்களிடம் கூறுவார். “சூரியன் நெருப்புப் பந்தா அல்லது கடவுளா, இதில் எது?” என்று ஒருமுறை நான் குருஜியிடம் கேட்டேன்.

பின்னர்,  ஒரு பிரச்சாரக் ஆக, அதாவது முழுநேர ஊழியராக இருக்கவே நான் விரும்பினேன். ஆனால் அவர்கள் ’எங்களுக்கு பிரச்சாரக்தான் தேவை, ஒரு விச்சாரக் [சிந்தனையாளர்] அல்ல’ என்று கூறி என்னைத் தடுத்து நிறுத்தி விட்டனர். ’நாக்பூரிலிருந்து வருகின்ற எந்த உத்தரவையும் நிறைவேற்றுகிறவர்களே எங்களுக்குத் தேவை. சகோதரரே, நீங்கள் பிரச்சாரக்காக இருப்பதற்குப் பதிலாக, விஸ்தாரக் [விரிவாக்கம் செய்பவர்] ஆக இருங்கள் – ஹிந்துஸ்தானில் இருக்கின்ற கிராமங்களுக்குச் செல்லுங்கள். நீங்கள் பிரசாரக்காக ஆகிவிட்டால், உங்கள் சாதியைக் கேட்டு, தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருக்கும் ஒரு தலித் நீங்கள் என்பதை மக்கள் கண்டுபிடித்து விடுவார்கள்’  என்று என்னிடம் கூறினார்கள். வழக்கமாக, தலித் என்ற சொல் சாகாவில் பயன்படுத்தப்படுவதில்லை. ’உங்களுக்குத் தெரியாத வகையில் யாராவது நடந்து கொள்ளலாம், நீங்கள் அதற்குப் பதிலடி கொடுக்கலாம். நேர்மறையான வேலையைச் செய்வதன் மூலம் நீங்கள் நிறுவனத்திற்கு எவ்வளவு பயனளிக்க முடியும், ஆனால் எதிர்மறையான வேலைகளைச் செய்வதன் மூலம் நீங்கள் அதற்கு தீங்கு விளைவிக்கலாம்’ என்னைப் பற்றிய சித்திரம், அங்கே பல கேள்விகளைக் கேட்கின்ற  நபரின்  உருவமாகி விட்டது.

1993ஆம் ஆண்டு ஏபிவிபிக்கு எதிராகப் போராடி, வித்யார்த்தி ஆதார் ரக்ஷக் சங்கம் [மாணவர் உரிமைகளைப் பாதுகாக்கும் சங்கம்] என்ற புதிய அமைப்பை உருவாக்கிய நேரம் மற்றும் அப்போது நடந்த சம்பவங்கள் பற்றிய குறிப்பு எனது புத்தகத்தில் உள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் சுற்றி வளைத்து தாக்கப்பட்டார். அவரது தலையில் ஒரு ஸ்க்ரூடிரைவரை செருகி அவரைக் கொலை செய்தனர். எனவே வன்முறை என்பது அவர்களைப் பொறுத்தவரை புதிதல்ல. வன்முறைக்கு எப்போதும் அங்கே அதிக மரியாதை  உண்டு. அவர்களுடைய அமைப்பு முறை உண்மையில் லத்தியை அடிப்படையாகக் கொண்டது. மக்கள் முன்பாக அவர்களுடைய வீடியோக்கள் இப்போது வெளியாவதால், இன்று  அவற்றை உங்களால் பார்க்க முடிகிறது.

அன்றைய அரசாங்கத்திடம் கோவிலை ஒப்படைக்க வேண்டும் அல்லது அரசு ராஜினாமா  செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பில்வாராவில் 1991 மார்ச் 12  அன்று எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. அன்றைய தினம் பேரணியும், பிற்பகல் நமாஸும் ஒரே நேரத்தில் நடைபெறவிருந்தன. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற குல்மாண்டி பகுதி வழியாக நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சியில் இருந்தபோதிலும், அங்கிருந்த காவல்துறையினர் எங்களைத் தடுத்து நிறுத்தி, எங்கள் பாதையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். நாங்கள் காவல்துறையினரிடம், ’அந்தப் பகுதி வழியாகச் செல்லக்கூடாது என்று சொல்வதற்கு குல்மாண்டி என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது? நாங்கள் இந்த வழியாகத்தான் செல்வோம்’ என்றோம். அப்போது பின்னால் இருந்து ஒருவர் கற்களை வீசத் தொடங்கினார். இரண்டு மூன்று கற்கள் காவல்துறையினர் மீது விழுந்தன. காவல்துறையினர் முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர், நிலைமை கட்டுப்பாட்டை இழந்த  பின்னர், அவர்கள் அங்கே கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் அந்தப் பேரணியுடன் எந்த தொடர்பும் இல்லாத ஹிந்துக்கள்.  துப்பாக்கிச்  சூட்டின் சத்தம் கேட்டு  வீட்டிலிருந்து வெளியே வந்த அவர்களில் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது. தனக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக நகருக்கு வந்த மற்றொருவர் காவல்துறையின் தோட்டாக்களுக்கு இரையாகி விட்டார்.

ராமனின் பெயரால், தியாகிகள் என்ற பட்டத்தை அவர்கள் இருவருக்கும் சங்கம் கொடுத்தது. ஆஸ்தி-கலாஷ் என்ற இறுதிச் சடங்கு ஊர்வலத்திற்கு சங்கம் ஏற்பாடு செய்தது. ஊர்வலம் என் வீட்டை அடைந்ததும், அனைவருக்கும் அங்கே உணவு சமைக்கப்பட்டது. சங்கத்தின் சித்தாந்தத்தை எனது குடும்பம், குறிப்பாக எனது தந்தை ஏற்கவில்லை. நான் சங்கத்திற்கு சென்று வருவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் சரியில்லாதவர்கள் என்று என் தந்தை அடிக்கடி சொல்வார். அவர் ஒரு காங்கிரஸ் ஆதரவாளர், காங்கிரஸ் கட்சி ஹிந்துக்களுக்கு எதிரானது என்பதால், எனது தந்தைதான் சரியில்லை என்றே நான் அப்போது நினைத்தேன்.  அப்படியிருக்கும் போது சங்கத்தின் சாகாக்கள் அல்லது நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வதை அவர் விரும்புவாரா?

’நீங்கள் தயாரித்த உணவை நாங்கள் அப்புறம் சாப்பிட்டுக் கொள்கிறோம். உடன் வந்திருக்கின்ற பூசாரிகள், சாமியார்களுக்கு அந்த உணவை இப்போது சாப்பிடுவது சற்று சிரமமாக இருக்கும். எனவே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், உணவை மூட்டை கட்டி கொடுத்து விடுங்கள். அடுத்த கிராமத்திற்குச் செல்லும்போது நாங்கள் அதை அங்கே சாப்பிட்டுக் கொள்கிறோம்’ என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த கிராமத்தில் அதை  சாப்பிடுவதைத் தவிர்த்து விட்டு,  பிராமணர் ஒருவரின் வீட்டில் தனியாகச் சமைத்தார்கள். என் வீட்டிலிருந்து எடுத்து வந்த உணவை வழியில் கீழே தூக்கி எறிந்தார்கள். இதை நான் அடுத்த நாள் கண்டுபிடித்தேன். அதன் பிறகு, அவர்களிடம் சென்று, ‘நீங்கள் எங்கள் வீட்டில் சாப்பிடவில்லை; நீங்கள் உணவைக் கட்டி எடுத்து வந்தீர்கள், ஆனால் அதை சாப்பிடாமல் கீழே தூக்கி எறிந்திருக்கிறீர்கள். அன்று அயோத்தியில் உங்களுக்காக என் உயிரைக்  கொடுக்க நான் தயாராக இருந்தேன்; நான் உங்கள் மாவட்டத் தலைவர். உங்களுடன் சேர்ந்து ஹிந்துராஷ்டிரத்தை உருவாக்க விரும்புகிறேன். அதில் நீங்கள் எனக்கு எந்த இடத்தை தருவீர்கள்?’ என்று கேட்டேன்.

பின்னர் அங்கே ஒரு விவாதம் துவங்கியது. அவர்கள் இது மிகச் சாதாரண விஷயம் என்றும், நான் அதைப் பெரியதாக மாற்றுகிறேன் என்றும் சொன்னார்கள். ’காரில்  உட்கார்ந்திருந்தவர்களின் கையில் இருந்த உணவு, கார் திரும்பியபோது கீழே விழுந்து விட்டது. கீழே விழுந்த உணவை எங்களால் எப்படி உண்ண முடியும்? என்று அவர்கள் சொன்னார்கள். உண்மை என்னவென்றால், அந்த உணவு சாலையின் ஒரு பக்கத்தில் தூக்கி வீசப்பட்டிருந்தது. அது தவறி கீழே விழுந்திருந்தால்,  சாலையின் நடுவில்தான் கிடந்திருக்கும். இந்த வாதம் பல மாதங்களுக்கு நீடித்தது.  நான் கலகம் செய்யும் முறையில், ’உங்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் தலித்துகளுக்கான இடம் என்ன?’ என்று அவர்களிடம் கேட்டேன்.

ஹிந்து ராஷ்டிரம் பற்றி சங்கம் என்ன கருதுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

சங்கத்தின் பார்வையில், ஹிந்துராஷ்டிரம் என்பது வர்ண அமைப்பு, நான்கு வேதங்கள், மனுஸ்மிருதி ஆகியவற்றைக் கொண்டதொரு பிராமண தேசமாகும். நாடு இந்த அடித்தளத்திலே இயங்க வேண்டும் என்றே சங்கம் விரும்புகிறது. சங்கத்தின் ஹிந்துராஷ்டிரத்தில், சூத்திரர்கள் அல்லது தீண்டத்தகாதவர்கள் அடிமைகளாக மட்டுமே இருக்க முடியும், முஸ்லீம்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு இரண்டாம் தர அந்தஸ்து மட்டுமே வழங்கப்படும் என்றே நான் நினைக்கிறேன்.

https://caravanmagazine.in/politics/we-were-told-non-violence-is-cowardly-bhanwar-meghwanshi-a-dalit-activist-who-quit-the-rss    

தமிழில்: தா.சந்திரகுரு

;