tamilnadu

img

மீண்டும் பெண் சிசுக்கொலை... - வே.வசந்தி தேவி

சர்வதேசப் பெண்கள் தினம் - பெண்ணின் பெரு மையை ஆரவாரத்துடன் கொண்டாடும் நேரம், செக்காணூரணி அருகே ஒரு பெண் சிசுக் கொலை நடந்திருக்கிறது.   கடந்த சில ஆண்டுகளாக மறந்திருந்த, மறைந்திருந்த, கருக் கொலையாக உருமாறியிருந்த பெண் சிசுக் கொலை மீண்டும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பல உசிலம்பட்டிகள் இருக்கின்றன. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, என்று தமிழ்நாட்டின் மாவட்டங்கள் அணிவகுக்கின்றன. 

பெண்ணிற்கு இழைக்கப்படும் அநீதிகளின், அவள் மேல் தொடுக்கப்படும் வன்முறைகளின் இறுதி வடிவம் பெண் ணினத்தையே அழிக்கும் முயற்சி. இக் கொடூரத்தின்  பரிமா ணங்களைப் புரிந்து கொள்வதற்கு, அதன் மூலங்களை, தொடக்கத்தைத் தேடிப் போக வேண்டுமென்று நினைக்கிறேன். முதல் கேள்வி, பெண் சிசுக் கொலை பண்டைய மரபா, இன்றைய வீழ்ச்சியா என்பது. இந்தப் பிரச்சனை குறித்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்,  உசிலம்பட்டியில் என் ஆய்வு ஒன்றைத் தொடங்கி, பல காரணங்களினால் இடையில் கைவிட்டேன். அதன் சில துளிகளைப் பகிர்ந்து கொள்கிறேன். இங்கு நான் விவரிப்பது 1985-1992 க்கு இடையிலான உசிலம்பட்டி. ஆனால், இன்றும் பொருத்தமானதே. 

இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்கு என்னை இட்டுச் சென்ற அந்தத் தேடல் எனக்குக் கற்பித்த முதல் பாடம், இக் கொடுமை அப்பகுதி மக்களின் பாரம்பரியப் பழக்கமல்ல. சென்ற நூற்றாண்டின் இடைப் பகுதியில்தான், பல தாக்கங்க ளின் காரணமாகத் தோன்றி, வெகு வேகமாக, விஷம் போல் பரவியது. 

கிராமம் கிராமமாக நான் கேட்ட கேள்வி, “ஏன் பெற்ற குழந்தைகளைக் கொல்லுகிறீர்கள்?”

“ என்ன செய்யறது? அத பாசமா வளத்து, 18 வயசுல வரதட்சணை கொடுக்க முடியாம, கலியாணம் பண்ண முடி யாம, அது அரளி விதயை அரச்சுக் குடிச்சு சாகறதப் பாக்கற துக்கு, இப்பவே முடிச்சிடலாமுன்னுதான் செய்யறோம்.”

அனைத்து கிராமங்களிலும் கிடைத்த பதில் இது ஒன்றுதான். வரதட்சணையும், திருமணம் தொடர்பான செலவுகளும்தான் பெண் சிசுவைக் கொல்லக் காரணம். ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களிடம்  அவர்கள் வரதட்சணை வாங்கித்தான் திருமணம் செய்துகொண்டார்க ளா என்று கேட்டபோது, 

“அட! எங்க காலத்தில இதெல்லாம் எங்கம்மா இருந்தது? பொம்பள கிடைச்சா போதுமுன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.” 

“  இப்பமட்டும் ஏன் அப்படியில்லை?” 
 “இப்பத்தான் எல்லாம் மாறிப் போச்சே!”
 

“உங்க சாதியிலதான் வரதட்சணை வாங்கறப் பழக்கம் முன்னெல்லாம் இல்லையே! இப்ப ஏன் வாங்கணும்?”

“ இப்பதானேம்மா எங்க ஊருக்கு நாகரீகம் வந்திருக்கு. நாங்களும் மத்தவங்கள மாதிரி இருக்கணும் இல்லே!”

“மத்தவங்கன்னா?”
“மேல் சாதிக்காரங்க, வசதியானவங்க.”

“ இப்பதானேம்மா எங்க ஊருக்கு நாகரீகம் வந்திருக்கு. நாங்களும் மத்தவங்கள மாதிரி இருக்கணும் இல்லே!”

தமிழ் நாட்டின் மிகப் பெரும்பாலான சாதிகளில், தலித், மிகவும் பிற்பட்ட, பிற்பட்ட சாதிகளில் வரதட்சணை என்பது பாரம்பரியப் பழக்கம் அல்ல. மாறாக, மாப்பிள்ளை வீட்டில் திருமண செலவுகளை ஏற்றுக் கொள்வதும், மணமகளுக்குப் பரிசம் கொடுப்பதும்தான் அறுபது ஆண்டுகள் முன் வரை வழக்காக இருந்தது. வரதட்சணை கொடுக்க வேண்டியதில்லை என்றால், அதன் காரணமாகவே பெரும்பாலும் நடப்பதாகச் சொல்லப்படும் பெண் சிசுக் கொலைகளும் அன்று இல்லையா? அதற்கான விடையை, பெண்ணின் சமூக நிலையைக் குறிக்கும் பாலின விகிதத்தில் , 1000 ஆண்களுக்கு இத்தனை பெண்கள் என்ற கணக்கில், அதில் ஏற்பட்ட மாற்றங்களில் தேடலாம் என்று புறப்பட்டேன். பாலின விகிதம் என்பது பெண்ணின் சமூக அந்தஸ்தை சுருக்கமாக அறிவுறுத்தும் முக்கிய குறியீடாக சமூக-அறிவியல் வழக்கில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. பாலின விகிதம் குறைவாக இருப்பது பெண்ணின் தாழ்ந்த நிலைக்கு ஒரு முக்கிய அறிகுறி.

பாலின விகிதம்

உசிலம்பட்டியைப் பற்றிய சில புள்ளி விவரங்கள் மிகுந்த அதிர்ச்சியை அளித்தன. 1981 இல் உசிலம்பட்டி தாலுகாவில் பாலின விகிதம் 961; இது மதுரை மாவட்டத்தின் பாலின விகிதமான 989, தமிழ் நாட்டின் 987 ஆகிய வற்றைவிடக் குறைவு. 

உசிலம்பட்டி தாலுகாவில் கிராமவாரி பாலின விகிதம் சில முக்கிய அம்சங்களையும், போக்குகளையும் சுட்டிக் காட்டியது. சில கிராமங்களில் பாலின விகிதம் 800-க்கும் குறைவாக இருந்ததுடன், 1961, 1971ல் உயர்ந்திருந்த பாலின விகிதம், 1981-க்குள்  மிகக் கடுமையாக சரிந்தும் இருந்தது. அப்படியென்றால், அந்த கிராமங்களில் பெண்ணின் சமூக நிலையை மோசமாக வீழ்ச்சியடையச் செய்த விபரீத மாற்றங்கள் ஏதோ நிகழ்கின்றன; அவை சமீப காலமாகத்தான் நிகழ்கின்றன. ஆகவே அவற்றிற்கான காரணங்களை சமகாலப் போக்குகளில் தேட வேண்டு மென்ற எண்ணம் பிறந்தது.  ஒரு  கிராமத்தில் 1971 இல் 1026 ஆக இருந்த பாலின விகிதம் 1981 இல் 773 ஆக, பத்து ஆண்டுகளில் 253 புள்ளிகள் குறைந்திருக்கிறது. மக்கள் தொகை கணக்கிலேயே பத்தே ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த சரிவு ஒரு குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம். இந்த ஒரு எண்ணிற்குப் பின் எத்தகைய கொடூரங்கள், விபரீதங்கள் மறைந்திருக்கின்றன, எத்தனை பெண் குழந்தைகள், பெண்கள் தொலைந்து போனார்கள் என்பது சிந்தனைக்கும் எட்டவியலாத பெரும் துயரம். இது போன்ற பல கிராமங்கள். 

பழம் கலாச்சாரம்

உசிலம்பட்டியின் பெரும்பான்மை சாதி சமுதாயத்தின் பாரம்பரிய நிறுவனங்களும், நெறிமுறைகளும், பழக்க வழக்கங்களும் இந்திய சமுதாயத்தின் மேல் சாதி, சமஸ்கிருதமயக் கலாச்சாரத்திலிருந்து - இந்நாட்டின் ஒரே கலாச்சாரம் என்று இன்று அடையாளம் காட்டப்படும் கலாச்சாரத்திலிருந்து - பெரிதும் வேறுபட்டவை. திருமணம் கலைக்க முடியாத புனித நிறுவனமல்ல. மண முறிவுகள் ஊர்ப் பஞ்சாயத்துகளால் எளிதில் செய்யப்பட்டதும், ஆண்கள், பெண்கள் இரு பாலருமே, குறிப்பாகப் பெண்கள் பல முறை திருமணம் செய்து கொண்டதும் அத்தகைய வேறுபாடுகளில் சில. நாற்பது வயதிற்குட்பட்ட விதவை களைக் காண்பது அரிது. விதி விலக்காய் இருந்த ஒரு சில விதவைகளும் மேல் சாதி சமுதாயங்களில் போன்று கொடுமைகளுக்கும், அவமானங்களுக்கும் ஒருபோதும் உட்படுத்தப்பட்டதில்லை.

பெண்ணுக்குப் பல உரிமைகளும், அந்தஸ்தும் இருந்தன. அது தந்தை வழி சமுதாயமாக இருப்பினும், தாய் வழி சமுதாயத்தின் சில அம்சங்கள் கலந்திருந்ததாகக் கருத இடமுண்டு. பெண்ணுக்கு ஓரளவு சொத்துரிமை, குறிப்பாக வீட்டை சுவீகரிக்கும் உரிமை இருந்தது.  பெரும்பாலான விவசாயிகள் ஒரு ஏக்கர் அளவு சிறிய நிலத்துக்குத்தான் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். கூட்டுக் குடும்பங்கள்  அரிதாகவே இருந்தன. ஓரளவு நில முடைய குடும்பங்களில் சொத்து பிரிந்துவிடாமல் இருப்பதற்கா கத்தான் கூட்டுக் குடும்ப அமைப்பு உருவாகிறது. திருமணத் திற்குப் பின் பெண் சந்திக்கும் பல துன்பங்களும், அவமா னங்களும், வரதட்சணை சார்ந்த எதிர்பார்ப்புகளும், மாமியார் தொல்லைகளும் தனிக் குடும்பங்களில் குறைவு.  இத்தகைய சமுதாயத்தில் பெண்ணின் நிலை வேகமாக சரிந்து, பெண்ணே வேண்டாமென்ற மறுப்பு எப்படி நிகழ்ந்தது?

பொருளாதார மாற்றங்கள்

கடந்த அறுபது ஆண்டுகளில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டதைப் போன்று, உசிலம்பட்டியிலும் விவசாயத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. 1950 களின் இறுதியில் கட்டி முடிக்கப்பட்ட வைகைக் கால்வாய்கள் தாலுகாவின் சில பகுதிகளுக்கு நீர்ப்பாசனத்தையும், அதன் மூலம் ஓரளவு செழிப்பையும் கொணர்ந்தன. அதற்கு முன் உசிலம்பட்டி முழுவதும் அநேகமாக வறண்ட பூமிதான்.

1960 களுக்குப் பின் உசிலம்பட்டியின் கால்வாய்ப் பாசனம் கொண்ட கிராமங்களில், விவசாய சமுதா யத்திற்குள் பெரும் ஏற்றத்தாழ்வுகள் உருவாகின. அந்த கிராமங்களில் மத்தியதர விவசாய வர்க்கம் ஒன்று உரு வாகிற்று.  இவர்கள் ஒவ்வொருவருக்கும் 20 ஏக்கரிலிருந்து, 100 ஏக்கர் வரை சொந்த நிலம் இருக்கிறது. அதே சமயத்தில் பல விவசாயிகள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். சில கிராமங்களில் பெருமளவில் நிலம் வெகுவேகமாகக் கைமாறியுள்ளது. நிலச் சொந்தக்காரராக இருந்த ஒரு வர்க்கம் நிலத்தை இழந்து, நிலமற்ற கூலி விவசாயி வர்க்கமாக மாறிற்று. நீர்ப்பாசனமுடைய கிராமங்களில் 1961-லிருந்து 1981-வரையிலான இருபதாண்டு காலத்தில் கிராம மக்கள் தொகையில் விவசாயக் கூலிகளின் சதவிகிதம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

அந்த சாதி-சமுதாயத்தின் மேல் மட்டத்தினரிடையே பல வகைகளில் செல்வம் குவியத் தொடங்கியது. ஒரு புதுப் பணக்கார வர்க்கம் உருவாகியது. பல வீடுகளில் பசையுள்ள வாழ்க்கையின் இலக்கணங்களும், வெளிப்பாடுகளும் நன்கு தெரிந்தன. ஆண் பிள்ளைகள் அருகிலிருக்கும் கருமாத்தூர், மதுரை நகர் கல்லூரிகளில் படிக்கின்றனர். இவர்களிடம்தான் வரதட்சணையின் கடுமையும், அதிகரிக்கும் ரேட்டும், ஓரளவு ஆடம்பரத் திருமணங்களும் தொடங்கி, மற்ற மட்டங்களுக்கும் பரவின. 

பெண்ணின்  சமூக நிலையில் மாற்றங்கள்

இந்த மாற்றங்கள் பெண்ணின் சமூக அந்தஸ்தை ஆழமாகப் பாதித்தன. ஒரு பகுதி விவசாயிகள் நிலத்தை இழந்தபோது, ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக இழந்தனர்; விவசாயக் கூலிகளாயினர்.  கூலியில் ஆண்-பெண் வேறுபாடு அதிகமாக இருந்தது. ஆண்கள் பெறும் கூலியில் 1/3- பங்கிலிருந்து, 1/2 பங்கு வரைதான் பெண்களுக்குக் கிடைத்தது. விவசாயிகளில் பெரும்பாலோர் சொந்த நிலம் உடையவர்களாக இருந்த பொழுது, குடும்ப நிலத்தில் பெண் செய்த உழைப்பைத் தனியாகக் கணக்கிட முடியாது. அதனால் அவருக்கு சமுதாயத்தில் ஓரளவு மதிப்பும், கெளரவமும், அந்தஸ்தும் இருந்தன. ஆனால், பெரும்பாலான விவசாயிகள் நிலமிழந்து, விவசாயக் கூலிகளானபோது, பெண்ணுக்குக் கிடைக்கும் குறை கூலி அவரது தாழ்வை, இரண்டாம் தரத்தை முத்திரையிட்டு, முழக்கிற்று. பெண் இழிந்தவள், அழிக்கப்பட வேண்டியவள் என்பதை சமுதாயம் ஏற்றுக் கொண்ட மதிப்பீடாக்கிற்று.

விவசாயம் தவிர்த்த மற்ற துறைகளில் புதிதாக உருவான வாய்ப்புகள் பெண்ணுக்குக் கிட்டவில்லை. குறிப்பாக, காண்ட்ராக்டுகள், நகர் சார்ந்த வியாபாரம் போன்ற துறைகளெல்லாம் பெண்ணைப் பின் தள்ளும் பொருளாதார மாற்றங்களாயின. கிராமத்திலிருந்து நகரத்திற்குச் சென்று வர வேண்டிய தேவையும், புதிய தொழில் நுட்பங்களையும், திறமைகளையும் பெற வேண்டிய தேவையும் கொண்ட இந்தத் தொழில்களில் புது வாழ்வு தேடுவது பெண்ணுக்கு இயலாததாயிற்று.

கிராமப்புற வர்த்தக, புதுப் பணக்கார வர்க்கத்தின் மதிப்பீடுகள்  பெண்ணின் சுதந்திரத்தை, சுய சார்பை முழுவதும் அழிப்பவை. இந்தப் புதுப் பணக்காரக் குடும்பங்க ளைச் சேர்ந்த பெண்கள் வெளியில் சென்று உடல் உழைப்பில் ஈடுபடுவது கெளரவக் குறைவு என்று கருதப் பட்டது. விவசாயம், மற்ற கிராமத் தொழில்கள், கூலிவேலை ஆகியவற்றில் ஈடுபடுவது தடுக்கப்பட்டது. அதிலும் பெண் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டாலே, உடல் உழைப்பில் ஈடுபடுவது சிந்தனைக்கும் அப்பாற்பட்ட இழி வாகிற்று. பெண் வீட்டிற்குள் சிறைப்படுத்தப்பட்டாள். அவளுக்கு சொந்த சாதியிலேயே நல்ல வசதி படைத்த, குறிப்பாக அரசு உத்தியோகத்திலோ, வேறு நகர்ப்புற வேலையிலேயோ இருக்கும் மாப்பிள்ளையைத் தேடினர். வரதட்சணை கொடுத்து, மாப்பிள்ளை பிடித்தனர். பெண் சுமையாக ஆரம்பித்தாள். 

என் ஆய்வு முடியும் கட்டத்தில் பெண் சிசுக் கொலை கருக் கொலையாக மாறிற்று. உசிலம்பட்டியிலும், மதுரை யிலும் ஸ்கேன் சென்டர்கள்  வீதிக்கு ஒன்று முளைத்த  வண்ணம் இருந்தன. பெண் கருவிலேயே அழிக்கப்படு கிறார். சிசுக் கொலையைவிட எளிதாக, நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆன்மாவைத் தொலைத்த மருத்துவர்களின் உதவியுடன் கருக் கொலை இன்றும் நடந்து வருகிறது. 

முடிக்கு முன் 

வரலாற்றின் அனைத்து சமுதாயங்களும் பெண் அடிமை சமுதாயங்கள்தான். ஆனால், பெண் அடிமையின் வடிவங்கள், உக்கிரம், வெளிப்பாடுகள் ஆகியவற்றில் பெரும் வேறுபாடுகள் இருந்தன, இருக்கின்றன. இன்று இந்தியா முழுதும் ஒரே  மதம், ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே வகைப் பெண்ணடிமை என்று, மிகவும் வேறுபட்ட மக்கள் சமுதாயங்களை ஒரே அசுரப் போர்வையின் கீழ் அமுக்கி, பன்முகச் செழுமையை அழிக்கும் விபரீதப் போக்குகள் தலைதூக்கி இருக்கின்றன. இந்தக் கட்டத்தில் பெரும்பாலான சாதி சமுதாயங்கள் தங்கள் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து, அவற்றில் மனித மாண்புகள் இருந்தனவென்றால், அவற்றைக் காப்பாற்ற வேண்டும். குறிப்பாக, பெண்கள் பெற்றிருந்த ஓரளவு உரி மைகளும், கண்ணியமும் மீட்டெடுக்கப்பட வேண்டும். நிலத் திலும், காட்டிலும், மேட்டிலும் உழைத்த பெண் படிதாண்டாப் பெண்ணிலிருந்து வேறுபட்டவள். கொடிய உழைப்பு சுரண்ட லுக்கும், சாதிய அடிமைத்தனத்திற்கும் அவள் இலக்காகி இருந் தாலும், அவளது உழைப்பு அவளுக்கு ஓரளவு சுதந்திரத்தை யும், கண்ணியத்தையும் அளித்திருந்தது. அவையும் மறுக் கப்பட்ட நிலையில், இழப்பதற்கு ஒன்றுமில்லாதவளாக நிற்கிறாள். பெண் சிசுக் கொலையும், கருக் கொலையும் இந்த கதியற்ற நிலையின் வெளிப்பாடுகள். 

கட்டுரையாளர் : முன்னாள் துணைவேந்தர், 
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்




 

 

 

 

;