tamilnadu

குழந்தைகளை விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் தரகர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதிர்ச்சி தகவல்

ராசிபுரம்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இது வரை மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு தரகர்களுக்கு தொடர்பு இருப்பதாக அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் வாக்குமூலம் அளித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பச்சிளம் குழந்தைகளை பேரம் பேசி விற்றுவந்த விவகாரத்தில், விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா, அவரதுகணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அமுதாவிடம் நடத்திய விசாரணையில் குழந்தை விற்பனைத் தொழிலில், ஈரோட்டில் பணிபுரியும் தனியார் மருத்துவமனை செவிலியரான பர்வீனுக்கு கொல்லிமலையில் பணிபுரியும் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனரான முருகேசனுக்கும் தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டது.இதையடுத்து அந்த இருவரையும் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். செவிலியர் பர்வீனிடம் மேற்கொண்ட விசாரணையில், நாமக்கல்லில் ஒன்றும், திருச்சியில் ஒன்றும், மதுரையில் இரண்டுமாக மொத்தம் 4 குழந்தைகளை விற்றதாக அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசனிடம் மேற்கொண்ட விசாரணையில், கொல்லிமலையைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 10 குழந்தைகளை வாங்கி அமுதாவிடம் விற்றதாக ஒப்புக்கொண்டதாகவும், சொல்லப் படுகிறது. இதையடுத்து முருகேசனை போலீசார் கைது செய்தனர்.

7 பிரிவுகளில் வழக்கு

ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவருடைய கணவர் ரவிச் சந்திரனின் வங்கிக் கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இருந்து அவர்களது வங்கிக் கணக்குகளில் லட்சக்கணக்கான ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டது.மருத்துவமனையில் உதவி செவிலியராக பணிக்கு சேர்ந்த அமுதா, செவிலியர்களுக்கு உதவியாளராக இருந்து பிரசவம் பார்க்க கற்றுக் கொண்டதால் நாளடைவில் தன்னை செவிலியராக கூறிக் கொண்டு வலம் வந்ததாக சொல்லப்படுகிறது.இதனிடையே கைது செய்யப்பட்ட அமுதா, ரவிச் சந்திரன் ஆகியோர் மீது கடத்தல், நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், கையூட்டு பெற்று குற்றம் புரிதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை மே 9ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க நீதிபதி மாலதி உத்தரவிட்டார்.

தரகர்கள் கைது 

கைது செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் செவிலியர் பர்வீனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருச்செங்கோடு, குமாரபாளையம், பவானி உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த மேலும் 3 பெண்களுக்கு தொடர்பு இருப்பதாக பர்வீன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.அந்த 3 பெண்களையும் அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பர்வீனையும், செல்வி, தமிழ்ச்செல்வி, கோமதி என்ற 3 பெண் களையும் போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட மூன்று பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தரகர்களாக செயல்பட்ட ஈரோட்டைச் சேர்ந்த அருள்சாமி மற்றும் நிஷா, குமாரபாளையத்தைச் சேர்ந்த பாலாமணி, ஜெயராஜ், பாண்டியன் என்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு தரகர்களுக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்ததாகக் கூறப் படுகிறது இதனையடுத்து இராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.இதனிடையே அரியலூர் மாவட் டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த சேத்தியாதோப்பை சேர்ந்த சுந்தரபாண்டியன் – ராஜகுமாரி தம்பதிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை இரண்டே நாட்களில் காணாமல் போனது. இதில் அமுதா கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் தெரிவித்து ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜகுமாரி புகார் அளித்துள்ளார்.

போலியான பெயர்களில் பிறப்பு சான்றிதழ்கள்

இதனிடையே ராசிபுரம், கொல்லிமலை பகுதிகளில் மட்டும், பல குழந் தைகளுக்கு போலியான பெயர்களில் பிறப்பு சான்றிதழ்களை அமுதா வாங்கிக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியானதால், அதுகுறித்து விசாரிக்க மாவட்ட சுகாதாரத்துறை 12 குழுக்களை அமைத்துள்ளது. ராசிபுரம் நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த 4 ஆயிரத்து 800 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் களை இந்தக் குழுக்கள் சரிபார்த்து வருகின்றன.

2 குழுக்கள் அமைப்பு

கொல்லிமலையில் தலா ஒரு மருத்துவர் உள்ளிட்ட 5 பேரைக் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அப்பகுதியில் அதிகளவில் வீடுகளிலேயே பிரசவம் நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில், அவ்வாறு பிறந்த குழந்தைகளின் விவரங்கள், முறைப்படி தத்துக் கொடுக் கப்பட்ட ஆவணங்கள், ஒரு குடும் பத்தில் 3 பேருக்கு மேல் பிறந்த குழந்தைகளின் விவரங்கள் உள்ளிட்டவற்றை இந்தக் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.

விரிவான அறிக்கை தயாராகிறது

கொல்லிமலையில் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் தேவி தலைமையில் 15 உதவி செவிலியர்களைக் கொண்ட மேலும் ஒரு குழு அமைக் கப்பட்டுள்ளது. இந்த குழு கொல்லிமலையில் முகாமிட்டு வீடு வீடாகச் சென்று சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் ஈடுபட உள்ளது. இந்தக் குழு இன்னும் ஒரு வார காலத்திற்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

;