tamilnadu

img

கொலையில் முடிந்த விளையாட்டு: தேனி வகுப்பறையில் மாணவர் உயிரிழப்பு

தேனியில் வகுப்பறையில் விளையாட்டாக மாணவர்கள் அடித்துக்கொண்டதில் 12ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தேனி மட்டன்ஸ்டால் தெருவில் வசித்து வருபவர் முருகன்.  கட்டிட வேலை செய்து வரும் இவருக்கு திருமால் என்ற மகன் இருந்தார்.  திருமால் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் மாணவர் சக்திவேல்.  இந்நிலையில், இன்று  மதிய உணவு இடைவேளையின்போது சக்திவேலும், திருமாலும் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. திடீரென இருவரும் ஒருவொருக்கொருவர் தாக்கியுள்ளனர். இதையடுத்து வகுப்பறையில் இருந்து மற்ற மாணவர்கள் அலறியடித்து வெளியேறினர். சக்திவேல் திருமாலின் கழுத்தை சுற்றி இறுக்கிப் பிடிக்க திருமால் சிறிது நேரத்திலேயே மயங்கி சரிந்து விழுந்துள்ளார்.
உடனே பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு ) ஈஸ்வரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தலைமையாசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் மாணவரை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே மாணவர் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர் . இதையடுத்து 108 ஆம்புலன்ஸில் இருந்த ஊழியர்கள் முதலுதவி அளிக்க முயன்றபோது மாணவர் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களும் மாணவரின் மரணத்தை உறுதி செய்துள்ளனர். 
தகவலறிந்து  திருமாலின் உறவினர்கள் பள்ளி முன் திரண்டு தேனி - பெரியகுளம் சாலையில் மறியல் செய்தனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிஎஸ்பி முத்துராஜ் தலைமையில் போலீஸ் விரைந்துவந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
உயிரிழந்த மாணவர் திருமாலின் பெற்றோர் மற்றும் உறவினர் மாணவர் பள்ளியின் முன் ஆவேசத்துடன் திரண்டதால் மாணவர் சக்திவேலை போலீஸார் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பள்ளிக்கு வந்த டிஇஓ ரேணுகா தேவி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் இன்றும் நாளையும் பள்ளிக்கு விடுமுறை அறிவித்தனர். 
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;