tamilnadu

img

5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்க! பள்ளி மாணவர் மாநில மாநாடு வலியுறுத்தல்

நாகர்கோவில், டிச.1- 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஏழை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் தேசிய கல்விக்கொள்கை 2019 ஐ ரத்து செய்ய வேண்டும் என பள்ளி மாணவர் மாநில கோரிக்கை மாநாடு வலியுறுத்தியுள்ளது. மத்திய மாநில அரசுகள்,  பொதுக்கல்வியை சீரழிக்கும் திட்டத்தை கைவிடக்கேட்டும், பொதுகல்வியை பாதுகாக்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பள்ளி மாணவர் மாநில கோரிக்கை மாநாடு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் சனியன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு, மாணவர் சங்க மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் சிவஸ்ரீ ரமேஷ் வரவேற்றார். பள்ளி மாணவர் உபகுழு ஒருங்கிணைப்பாளர் சந்துரு அறிக்கை சமர்ப்பித்தார். சுவாமி விவேகானந்தா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கா.மணிக்குமார், மூட்டா நிர்வாகி மனோகர் ஜஸ்டஸ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி உ.நாகராஜன், மாணவர் சங்க மத்தியக்குழு உறுப்பினர்கள் நிருபன் சக்கரவர்த்தி, இரா.ஜான்சி ராணி, மாநில துணைத்தலைவர்கள் ம.கண்ணன், திலீபன், மாநில இணை செயலாளர் ஆறு.பிரகாஷ், மாநில செயலாளர் வீ.மாரியப்பன், மாணவர் சங்க குமரி மாவட்ட தலைவர் பதில் சிங், செயலாளர் பிரிஸ்கில்  ஆகியோர் பேசினர்.  அரசாணை 270 ன்படி அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, வகுப்பறை வசதி, ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், தமிழகத்தில் மாணவர் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் மாணவர் தற்கொலைகளை தடுக்க ஆசிரியர், மாணவர், பெற்றோர், அரசு அதிகாரிகள், மனநல மருத்துவர் கொண்ட மனநல ஆலோசனை மையங்களை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 2017- 2018, 2018-2019 கல்வியாண்டில் 11, 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களில் மேற்கொண்டு படிக்காத, தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படாது என்ற அரசாணையை ரத்து செய்து முன்னர் இருந்தது போல் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;