tamilnadu

img

பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு உத்தரவை காற்றில் பறக்க விட்ட அரசு அதிகாரிகள்

அவிநாசி, ஜூன் 1-அவிநாசி ஒன்றியத்தில்பிளக்ஸ் வைப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவைஅமல்படுத்த அரசு அதிகாரிகள் தயங்குவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர். அவிநாசி ஒன்றியங்களில் பிளக்ஸ் பேனர் வைப்பது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியன்று அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதை அமல் படுத்தும் விதமாக பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது. இதில் நிகழ்ச்சிக்காக முடிவு செய்யப்பட்ட தேதியின் இரு தினங்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் படிவம் 1 விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். விளம்பர பலகை தனியார் இடத்தில் வைப்பதாக இருந்தால், அதன் உரிமையாளரிடமும், அரசு துறை இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடமும் தடையின்மைச் சான்று பெற்றும், அதற்கான உரிய கட்டணம் கருவூலத்தில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். நடைபாதைகள், சாலையோரம் ஆகிய இடங்களில் போக்குவரத்து இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கோவில், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, சாலை சந்திப்புகள், சுற்றுலா தலங்கள் ஆகிய பகுதிகளிலிருந்து 100 மீட்டர் தள்ளி பிளக்ஸ் பேனர்கள் வைக்கும் வேண்டும். பிளக்ஸ் பேனர்கள் வைக்கும் சாலையின் அகலம் 100 அடிக்கு மேல் இருந்தால் 15-24 அளவும், 60 இருந்து 100 அடி வரை உள்ள சாலையாக இருப்பின் 12-20 அளவும், 40 இருந்து 60 அடி வரை உள்ள சாலையாக இருப்பின் 10-16 அளவு, 20 இருந்து 40 அடி வரை உள்ள சாலையாக இருப்பின் 8-5  அளவும் ,10 இருந்து 20 அடி வரை உள்ள சாலையாக இருப்பின் 3-2.5 அளவுகளில்  மட்டுமே வைக்கப்பட வேண்டும்.

நடைபாதை இல்லாத சாலையாக இருப்பின்  சாலையின் விளிம்பிலிருந்து 10 அடி இடைவெளியிட்டு வைக்கப்பட வேண்டும். அனுமதி பெற்ற  பிளக்ஸ் பேனரில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற விபரம், நாள்  மற்றும் பிளக்ஸ் பேனரின் அளவு  குறிக்கப்பட்டவேண்டும்.  இப்பேனர்கள் ஆறு நாட்கள் மட்டுமே வைக்கப்பட வேண்டும். அனுமதியின்றி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றுவதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட நபர்களிடம் வசூலிக்கப்படும். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுவதுடன்,  ஒரு வருட சிறைத் தண்டனை  விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது  பிளக்ஸ் பேனர் வைப்பது தொடர்பாக சில அரசியல் கட்சிகள் உரிய அனுமதி பெறாமல்  ஆங்காங்கே பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். இப்படி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றியம் ஆணையாளர் உள்ளிட்டவர்கள் கண்டு கொள்வதில்லை.இது குறித்து  அதிகாரிகள் தரப்பில்  கூறுகையில், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு தனி பொறுப்பு அதிகாரிகளை நியமனம் செய்யப்பட வேண்டும். அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் வழக்குப் பதிவு செய்வதில் நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி அதிகாரிகளிடம் எல்லை வரையறையில் குழப்பம் ஏற்படுகிறது. வரும் நாட்களில் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர்.  (ந.நி)

;