tamilnadu

திருச்சிராப்பள்ளி மற்றும் அரியலூர் முக்கிய செய்திகள்

திருச்சியில் பலத்த காற்றுடன் மழை ரூ.10 லட்சம் வாழை சேதம்

திருச்சிராப்பள்ளி, மே 9-திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா சிலைபிள்ளையார்புதூர், நத்தம் காட்டுப்புத்தூர், ஐனாபட்டி, ஆராய்ச்சிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் புதனன்று இரவு பலத்த காற்று வீசியது. இதில் சுமார் 1 லட்சம் வாழை மரங்கள் முறிந்துவிழுந்தன. வாழை மரங்கள் குலைத்தள்ளிய நிலையில் விழுந்து சேதமானதால் சுமார் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. மின்கம்பங்கள் உடைந்தும், சாய்ந்தும் விழுந்தன. இதனால் 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. திருச்சி மாநகரில் பீமநகர், பாலக்கரை பகுதியில் புதனன்று இரவு 10 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் வியாழக்கிழமை மதியம் வரை வழங்கப்படவில்லை. மேலும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் விளம்பர பதாகைகள் சரிந்து விழுந்தன. ஒரு சில ஓடு மற்றும் கூரை வீடுகளும் சேதமடைந்தன.


குடிநீர் கேட்டு மக்கள் போராட்டம்  

அரியலூர், மே 9-அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் கடந்த சில மாதங்களாக தலித் மக்கள் குடியிருப்பு பகுதிக்கான குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தை தலித் மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறியதால் அவர்கள் கலைந்து சென்றனர். 

;