tamilnadu

img

கண்ணீரால் நிரம்பிய ஆழ்துளை

ஆழ்த்துளைகளுக்குள்
நேற்று
தண்ணீரைத் தேடிக்கொண்டிருந்தோம்
இன்று 
தமயன்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.


வெங்காடும் சொந்தமில்லை
வெள்ளாமையும் சொந்தமில்லை
மண்மூடிபோன 
தண்ணீர் துவாரங்களே!
தலைமுறைக்குச் சொந்தமாச்சு.

அத்தனைப் பிள்ளைகளையும்
ஆழ்த்துளையிலேயே
அடக்கம் செய்துவிட்டு
ஒப்பாரியை மட்டும்
ஊரெங்கும் வைக்கிறோம்.

விதைகளைத்தான்
மண்மூடி வைப்பார்கள்
பச்சிளம் செடிகளையுமா?

விவசாயம் பொய்த்து
தகப்பன்கள் தொங்கிய
கயிற்றின் மிச்சத்தைத்தான்
பிள்ளைகளுக்கு(சுர்ஜித்)
தாரைவார்க்கிறார்கள்.

உங்களின்
பாழாப்போன அறிவியல்
எலிகளை வைத்துத்தானே
பரிசோதனை செய்தது.
இப்போது 
ஏழைப்பிள்ளைகளை 
வைத்துமா?

மரங்களை வெட்டித்திருடிய
அடுத்தத் தலைமுறையின்
சுவாசக்காற்றை
சுஜீத்தின் உயிருக்காவது
ஊற்றி எழுப்புங்கள்.

இப்படியே
எத்தனையடி தோண்டினாலும்
கிடைக்கப்போவதேயில்லை
தண்ணீரும்
தமிழனும்.

தலையிலிருந்து விழுவது
மயிராக இருக்கலாம்
தலைமுறையே விழுவதற்கு
கயிறே காரணமாகலாமா?

உங்களை எல்லாம் 
காணச் சகியாமல்தான்
இரு கைகளைக் கொண்டு
கண்களை மூடிக்கொண்டான்.

ஓடிவிளையாடிய சுஜீத் 
ஒளிந்து விளையாடிக்கொண்டிருக்கிறான்.
சிறியவர்கள் ஓடிவிளையாடட்டும்
பெரியவர்கள் மூடிவினையாற்றுங்கள்.

இந்த பூமியின் 
அத்தனை செல்வங்களையும் 
திருட
பிளந்து பார்த்த பிசாசுகளே!
எங்கள் பிள்ளைச்செல்வம்
உயிரோடு இருக்கிறானா?
பார்த்துச் சொல்லுங்களேன்.

உன் பெயரில் 
பாறை இருப்பதால் 
மணப்பாறையே 
உன்மனசும் கல்தானா?

பூமி வங்கியிலிருந்து
தண்ணீர் திருடும் 
காட்டேரிகளே!
எங்கள் வீட்டு 
தங்க நாணயம் அங்கே
துருபிடித்து கிடைப்பதை
கண்டதில்லையா?

நடுகாடு
இடுகாடு ஆனதோ!

இரண்டு இரவுகளும்
இருள் போர்த்தி தூங்குகிற
என் மகனை
யாராவது
துயிலெழுப்புங்களேன்.

மீதேன் எடுத்த
அறிவியலே!
கார்பன் எடுத்த
அறிவியலே!
ஈத்தேன் எடுத்த
அறிவியலே
என் தமிழ்த்தேனை
எடுத்து தாயேன்?


விளையாடிய மகனிடம்
வினையாடியது யார்?

நீ
இருந்தாலும்
இறந்தாலும்
பொன்னடா!
பதில் பேசாமல் இருப்பது
ஏன்னடா?


கிணற்றுக்குள்
30 மதிப்பெண் எடுத்து
எடுத்து பாஸான
சுஜீத்தை.
100 மதிப்பெண்
எடுக்கவைத்து
பெயில் ஆக்கியது
நாமல்லவா?

ஈன்ற தாயை விட்டுவிட்டு
ஈரத்தாயின் மடியில்
அப்படியென்ன உறக்கம்.

பள்ளிச்செல்லவில்லை
என்று
பள்ளிகொள்கிறாயோ?


பட்டாசின் நறுமணமும்
இல்லை
பாஸ்பரஸின் நறுமணமும்
இல்லை
சுஜீத் நீயில்லாமல் 
எங்களூருக்கு 
எப்படி தீபாவளி?

நீ
உயிர்பிழைத்து வா!
துப்பாக்கி வாங்கிவைத்திருக்கிறேன்
நிறைய சுடவேண்டியிருக்கிறது.

சில மத்தாப்புகளும்
பல மத்த ஆப்புகளும்
வைக்கலாம்.


இதோ 
வந்துகொண்டிருக்கிறது...
என்ற அறிவிப்பு 
கேட்டுக்கொண்டே இருக்கிறது
எது?
அறிவியல்?
விஞ்ஞானம்?
தொழில்நுட்பம்?
மருத்துவ ஊர்தி?
எம வாகனம்?


குழந்தைகள் மீதான
குற்றமே
உலகின்
உட்சபட்ச குற்றம்.


எல்லாம்
எங்களுக்குத் தெரியும்
'மூடுங்கள்' என்பதுதான்
எங்களில் முடிவான செய்தி


மணப்பாறை 
முருக்கிற்கு சிறப்பான ஊர்
என்பதை
இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.
உன் வாழ்தலுக்கான பசிக்கு
எத்தனை கயிறுகளை
முருக்கி முருக்கி 
தந்தார்கள்.

நீ
கண்கொட்டாமல் பார்த்ததில்
இருட்டு உன்னைக்கண்டு
பயந்திருக்கும்.

நீ 
இமைகள் மூடாமல் இருந்ததில்
கனவு உனக்குப.பயந்து
ஓடியிருக்கும்.

உனது வீட்டில்
உயிராகி
உனது கொல்லையிலேயே
பயிரானவனே!
களைகள் முளையாமலிருக்க
விதையானவன் நீயல்லவா!


மூன்றாவது நாளும்
தூங்குகிறாயா?
கீழே
பூமித்தாய்
உனக்காக
தாலாட்டு பாடுகிறாளா?

பஞ்சபூதங்களில்
முதலில் 
ஜலத்தை சமாதியாக்கினோம் 
இரண்டாவது 
நிலத்தை சமாதியாக்கினோம் 
இப்போது 
உன்னையுமா சுர்ஜீத்?

ஆக்கம் : போ.மணிவண்ணன், நீலகிரி