tamilnadu

img

அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மே8-திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அரியமங்கலம் கோட்டத்தில் 360 துப்புரவு தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.இவர்களது வருகை பதிவேடு 20-ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள் கணக்கிடப்படும். ஆனால் பிரதிமாதம் 1-ம் தேதிசம்பளம் வழங்காமல் 2 மாதத்திற்கு ஒருமுறை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்களது சட்டக்கூலியான ரூ360 வழங்காமல் ரூ.270 மட்டுமே தினக்கூலியாக வழங்கப்படுகிறது.எனவே மாதம்தோறும் 1-ம் தேதியன்றே சம்பளம் வழங்க வேண்டும்.நியாயமாக வழங்கப்பட வேண்டியதினக்கூலி ரூ.360-ஐ உடனே அமல் படுத்த வேண்டும். நியாயமான கூலி வழங்காத ஒப்பந்ததாரர் மற்றும் அவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் புதனன்று அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் மணிமாறன், சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ரெங்கராஜன், துப்புரவு சங்க மாவட்டப் பொருளாளர் விஜயன், மாவட்ட துணைச் செயலாளர்கள் டோம்னிக், நாகராஜ்,டிஒய்எப்ஐ விஜயேந்திரன், தோல்ஷாப்ராஜா, சுமைப்பணி சங்க முருகன் ஆகியோர் பேசினர். துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் விமலா, ராமசாமி, ரவி, வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.போராட்டத்தை தொடர்ந்து அரியமங்கலம் கோட்ட அலுவலக நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம் சம்பளத்திற்கான தொகையை காசோலையாக உடனே வழங்கினார். மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து உதவி ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என அறிவித்தார். இதனையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப் பட்டது.

;