tamilnadu

img

“தமிழ் திரை உலகில் திருப்புமுனை” - தாரைப்பிதா

திரைவிமர்சனம்

திரைக்கலைஞர் பார்த்தீபனின் ஒத்த செருப்பு திரைப்படம் தமிழ்திரை உலகில் ஒரு பெரும் திருப்புமுனை. இதன் வெற்றியில் அடங்கி இருக்கிறது. சமூக கருத்துக்களை மினிமம் பட்ஜெட்டில் மக்களிடம் கொண்டு செல்வதற்கான வாசல் திறப்பு எனலாம்.  ஒரு கொலைக்குற்றவாளியை காவல் நிலையத்தில் விசாரிப்பதுதான் கதை. அதை இத்தனை விறுவிறுப்போடு, அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று நம்மை இருக்கை நுனியில் அமர வைத்து விடுகிறார் பார்த்தீபன் என்கிற பன்முக ஒத்த கலைஞர். 

இனி, இதுபோல் (நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என) ஒருவராக வேறுயாரும் செய்ய முடியுமா என தெரியவில்லை. திரையில் 'நிஜ நிழாக' ஒரே ஒரு மாந்தர்தான். அந்த ஒரு பாத்திரமும் 99% குளோஸ்அப் ஷாட்தான். ஒரு பட்டம். ஒரு கேமிரா. ஒரு ஜன்னல். ஒரு அறை. ஒரு வாஷ்பேசன். ஒரு பொட்டலம் உணவு. ஒரு லத்தி, ஒரு ஜோடி செருப்பு. ஒரு உடை. ஒரு மூக்கு கண்ணாடி. ஒரு சேர். ஒரு டேபில். ஒரு பைல். இவ்வளவுதான் கதையின் நிழல் பொருள்கள். 

மற்ற பாத்திரங்கள்... மூன்று போலீசு அதிகாரிகள். ஒரு உளவியல் பெண் டாக்டர். ஒரு மனைவி. ஒரு மகன். குருவிகள் கீச் கீச் என மற்ற எல்லாமே வெறும் குரல்களும், ஓசைகளும்தான். இதெல்லாம் தமிழ் சினிமாவிற்கு, ஏன் இந்திய சினிமாவிற்கே புதுசு. அபார முயற்சி. ஆஸ்கர் பரிசுக்கு அனுப்பப்பட வேண்டிய ஒன்றுதான் ஒத்த செருப்பு. அதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. அது, விருதுகளை குவிக்கிறதோ, இல்லையோ உலகர் விழிகளை, புருவங்களை தமிழ் திரை உலகம் பக்கம் கட்டாயம் திருப்பும். பார்ப்போரின் உணர்வுகளை, 'உண்டு இல்லை' என செய்துவிடும். ஆம், விருது குழுவினரை மட்டுமல்ல, பார்க்கும் தமிழ்கூறும் நல்லுலகையும்தான். 

பார்த்தீபன் படத்திற்கான அத்தனை அம்சங்களும் இதில் உண்டு.  சமூகத்தில் வலியவர், எளியவர்களை எப்படியெல்லாம் பந்தாடுகிறார்கள் என்பதில் இருந்து, ஆட்சி அதிகாரத்தின் மீது விமர்சன கனைகளை வீச்சுவதில் இருந்து, வழக்கமான நக்கல், நையாண்டி, எள்ளல், துள்ளல் என்கிற வரை அனைத்தும் திரைக்கதையில், வசனத்தில் புகுந்து விளையாடி இருக்கிறார். 

அவரின் முகமொழி மற்றும் உடல்மொழி நம்விழிகளை படம் முழுக்க கொள்ளை கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒத்த செருப்பை ஒத்தை ஆளாக சமூக கடமைகளை கற்பிக்கும் காவியமாக படைத்திருக்கிறார் திரைக்கலைஞர் பார்த்தீபன் என்றால் மிகையல்ல. ஆட்டம், பாட்டம், சண்டை, எழில் கொஞ்சும் இயற்கை, பிரமாண்ட காட்சிகள், செட்டிங் என வருகிற படங்களைக்கூட பார்க்க 'போரடித்து' சோர்வைத் தந்துவிடும் திரைப்படங்கள் உண்டு. ஆனால், இதில் ஈர்ப்பு என்ன... கண்களை இமைக்கக்கூட விடாமல் நகரும் காட்சிகள் என்ன... அடடா... அற்புதமோ அற்புதம்..!

ஒரு கொலை வழக்கில், மாசி என்கிற மாசிலாமணி விசாரணையின்போது, 'தடயமாக' தன்னை அகப்பட வைப்பது தமது ஒத்த செருப்புதான். அதுபோல் ஒத்த செருப்புகளே தடயமாக வேறு சில கொலைகளும் மாசிமீது விழ செய்கிறது. இப்படியான விசாரணையில் மாசி தண்டிக்கப் படுகிறானா? அல்லது தப்பிக்க வைக்கப்படுகிறானா என்பதே மீதிக்கதை. 

ஒத்த செருப்பை ஒத்த நபராக ஒட்டு மொத்தக் கதையையும் நம் கண்முன்னே பிசிறின்றி, நகர்த்தும் பார்த்தீபனின் திறமையை, துணிச்சலைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. அதுபோல் காமிரா, பின்னணி இசை, பின்னணி குரல் மற்றும் ஓசை எல்லாமே கனக் கச்சிதமாக, திகட்டாமல் ஒத்த செருப்புக்கு உதவுகிறது. தமிழ் கூறும் நல்லுலகம் இந்த புதுமுயற்சிக்கு பேராதரவு தருவது காலத்தின் கட்டாயமும் அவசியமும்.

;