tamilnadu

img

பிரதமர் மோடியின் தேர்தல் விதிமீறல்கள்

சீத்தாராம் யெச்சூரி பேட்டி

கொல்கத்தா, ஏப்.27-பிரதமர் நரேந்திர மோடி தேர்தல்நடத்தை விதிகளைத் தொடர்ந்து மீறிவந்தபோதிலும், தேர்தல் ஆணையம் அதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு எதிராக, எதிர்க்கட்சிகளுடன் கலந்துபேசி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.கொல்கத்தா வந்துள்ள சீத்தாராம் யெச்சூரி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் நடத்தை விதிகளைத் தொடர்ந்து அப்பட்டமாக மீறி வருகிறார். எனினும் தேர்தல் ஆணையம் அவர்மீதுஎவ்வித நடவடிக்கையும் எடுக்காமல்இருந்து வருகிறது. எதிர்க்கட்சிகளுடன் கலந்து பேசி இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுத்திட ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.இது தொடர்பாக சீத்தாராம் யெச்சூரி மேலும் கூறியதாவது: “மக்களவைத் தேர்தலுக்கான நான்காவது கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே – அதாவது ஏப்ரல் 29க்கு முன்பாகவே, எதிர்க்கட்சிகளின் சார்பில், உச்சநீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்படும். அடுத்து இன்னும் 240 இடங்களுக்குத்தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய சூழ்நிலையில் (இதில் சென்ற தேர்தலின்போது பாஜக 160 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது) மோடி மக்கள் மத்தியில் மதவெறித் தீயை உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்.

இதுபோன்றதொரு நிலைமை இதற்கு முன் இருந்ததில்லை. பிரதமர்மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு ராணுவத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். குஜராத்தில் பேசும் போது, “கொலைகளின் இரவு” ஏற்படும் என்றும், ராஜஸ்தானில் பார்மரில் பேசும்போது “பாகிஸ்தான்மீது அணு ஆயுதயுத்தம் ஏவப்படும்” என்றெல்லாம் பேசியிருக்கிறார். இவை அனைத்தும், அனைத்து நெறிமுறைகளுக்கும்விரோதமான செயல்களாகும். இவைதொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள அனைத்துக் கட்டளைகளையும் அவர் அப்பட்டமாக மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையமும் இவர் விஷயத்தில் முற்றிலுமாகச் செயலற்றுஇருக்கிறது. எனவே இவற்றுக்கெதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் என்பது ஜனநாயகத்தின் தூணாகும். ஆனால் அது இவ்வாறு செயலற்றிருப்பது நாட்டின் ஜனநாயகத்திற்கு முற்றிலுமாக கேடு விளைவித்திடும்.

கடந்த ஐந்தாண்டுகளில் பிரதமர்மோடியின் ஆட்சியில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் 109இலிருந்து 624 என மும்மடங்காகி இருக்கிறது. இறந்த ராணுவத்தினரின் எண்ணிக்கை 139இலிருந்து 483ஆகஉயர்ந்திருக்கிறது. சாமானிய மக்கள்இறந்திருப்பது என்பதும் 12இலிருந்து 219ஆக உயர்ந்திருக்கிறது. இவருடைய ஆட்சிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தமீறல்கள் என்பவை 563இலிருந்து 5596ஆக அதிகரித்திருக்கிறது.பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் இந்தியாவில் பிரதமராக மோடி வருவதையே விரும்புகிறார்கள். இப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் பாஜகவும் மோடியும் வெற்றி பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதேபோன்றே 2003இல் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் பாகிஸ்தானில் ஜமாய்த்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவராக இருந்தவர், இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் வாஜ்பாய் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். இவ்வாறு ஒரு நாட்டில் இயங்கும் மதவெறி அமைப்பு, இன்னொரு நாட்டில்இயங்கும் மதவெறி அமைப்பையே ஊட்டி வளர்த்திட விரும்புகிறது.நாடு இப்போது மோடியா அல்லதுநாட்டு மக்களா என்கிற முறையில்எதிரெதிராக இருந்துகொண்டிருக்கின்றன. மோடி, நாட்டில் மக்கள்மத்தியில் மதவெறித் தீயை உசுப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார். சாமானிய மக்கள் இத்தகைய சூழ்நிலையில் வரவிருக்கும் காலங்களில், தம்குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறோம் என்று தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.இதே நிலைமைதான் மேற்கு வங்கத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கே பாஜக-வினால் உருவாக்கப்பட்ட மதவெறிச் சூழலைதிரிணாமுல் காங்கிரஸ், ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறுபாஜகவும் திரிணாமுல் காங்கிரசும் மதவெறிச் சூழலை போட்டி போட்டுக்கொண்டு வளர்த்துக் கொண்டிருக்கின்றன.”இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.இந்தியாவில், இடதுசாரிகளின் ஆதரவு இல்லாமல் மாற்று அரசாங்கம் எதையும் அமைத்திட முடியாது என்பதை காங்கிரஸ் கட்சி தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சீத்தாராம் யெச்சூரி பதிலளித்தார்.அதேபோன்று மோடி – மம்தா இடையேயான பரஸ்பர பரிவர்த்தனை தொடர்பாக ஒரு செய்தியாளர் கேட்டபோது. அப்போது அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை மோடிதான் வெளிப்படுத்த வேண்டும். மோடி அதனை வெளிப்படுத்தாத வரை, யாரும் அதனைத் தெரிந்துகொள்ள முடியாது என்றார்.  

மேற்கு வங்க நிலைமை குறித்து அவர் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் கவலை என்னவெனில், மேற்கு வங்கத்தின் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களா என்பதேயாகும். இதுவரை நடைபெற்ற மூன்று கட்ட வாக்குப்பதிவுகளில் பல வாக்குச்சாவடிகள் ஆளும் கட்சியினரால் கைப்பற்றப்பட்டன. மத்திய ரிசர்வ் படையினர் குவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டபோதிலும், உண்மையில் அவ்வாறான நிலைமை இல்லை. எனவேமக்களவைத் தேர்தலிலும் இம்மாநிலத்தின் பஞ்சாயத்துத் தேர்தல்களில் நடைபெற்றதைப் போன்று மக்களின் வாக்குரிமைகள் பறிக்கப்படுமா என்பதேயாகும்.மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு என்பது, நாட்டைப்பாதுகாத்திட பாஜகவைத் தோற்கடிப்போம், மாநிலத்தைப் பாதுகாத்திட திரிணாமுல் காங்கிரசைத் தோற்கடிப்போம் என்பதாகும். மேலும் மத்தியில் ஒரு மதச்சார்பற்ற மாற்று அரசாங்கம் அமைவதற்கான நடவடிக்கைகளை எடுத்திடுவோம் என்பதும், அவ்வாறு அமைந்திடும்அரசாங்கம் சாமானிய மக்களுக்கு உதவிடும் வகையில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வைப்பதுமாகும்.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.


கொல்கத்தாவிலிருந்து சந்தீப் சக்ரவர்த்தி


;