tamilnadu

img

ஆன்லைன் தேர்வு அடாவடி... கொரோனா தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு அச்சுறுத்தல்

பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இறுதிப் பருவத் தேர்வுகள் அனைத்தினையும் 2020 செப்டம்பர் இறுதிக்குள் நடத்தி முடிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) 06.07.2020 அன்று வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிப்பாக அனுப்பியுள்ளது. கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில், ருழுஊ இன் அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தையும் குழப்பத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவும் அபாயம் உள்ள சூழலில் கூட்டமாக அமர்ந்து தேர்வு எழுதுவது சாத்தியமில்லை என்று ஆசிரியர் மற்றும் மாணவர் அமைப்புகள் தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளன.

யுஜிசியின் புதிய அறிவிப்பிற்கு எதிர்ப்பு
யுஜிசி தனது அறிவிப்பினை மறு பரிசீலனை செய்ய வேண்டுமெனவும், பருவ இறுதித் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மாநிலங்கள் சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுக்க அனுமதிக்க வேண்டுமெனவும் கடிதம்எழுதிய தமிழக முதல்வர் இது தொடர்பாக மத்திய அரசின் தலையீட்டினையும் கோரியுள்ளார்.பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில முதல்வர்களும் இதே கருத்தினைத் தெரிவித்துள்ளனர். முன்னாள் யுஜிசி தலைவர் பேராசிரியர் சுக்தேவ் தோராட் உள்ளிட்ட பல கல்வியாளர்கள் மேற்கண்ட யுஜிசியின் அறிவிப்பினை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர். 

யுஜிசியின் முந்தைய நிலைபாடு 
முன்னதாக UGC 2020 ஏப்ரல் மாதத்தில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களின் தேர்வு தொடர்பாக ஓர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலின் அடிப்படையில், இறுதிப் பருவத் தேர்வுகள் குறித்து முடிவெடுத்து நடத்திடலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதிப் பருவத் தேர்வு நடத்துவது தொடர்பாக பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ஹரியானா பல்கலைக்கழகத் துணை வேந்தர் தலைமையிலான குழு, கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு “தற்போதைக்கு தேர்வுகள் நடத்த இயலாது” என்ற தனது அறிக்கையை அக்குழு யுஜிசிக்கு கொடுத்திருந்தது. யுஜிசி 2020 ஏப்ரல் மாத அறிவிப்பிற்கு அக்குழுவின் அறிக்கையும் ஒரு காரணமாகும்.

மாநில அரசுகளின் முடிவு
இந்த பெருந்தொற்று வேகமாகப் பரவிவந்த நிலையில், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான்,பஞ்சாப், தில்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம்உள்ளிட்ட மாநிலங்கள் பருவ இறுதித் தேர்வுகளை நடத்த இயலாது என முடிவெடுத்து ரத்துசெய்ததுடன், அம்மாணவர்களுக்கான இறுதிப்பருவ மதிப்பீட்டினை உள் மதிப்பீட்டு தேர்வு மதிப்பெண், மாணவர் வருகைப்பதிவு மற்றும் கடந்த பருவங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விகிதாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டு தேர்வு முடிவுகளை வெளியிடுவதென முடிவு செய்தன.  இதில்பாஜக ஆளும் மாநிலமான மத்தியப்பிரதேசமும் உண்டு. 

பாஜக எதிர்ப்பு
அதன் பின்னணியிலேயே, பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகளை 2020 செப்டம்பர் இறுதிக்குள் கண்டிப்பாக நடத்தவேண்டுமென யுஜிசி தனது இரண்டாவது (6.7.2020) அறிவிப்பின் மூலம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. மாநில அரசுகளுக்குபல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதிப் பருவத் தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க அதிகாரம் கிடையாது என ஆளும்கட்சி தரப்பிலும் மத்திய மனித வள மேம்பாட்டுஅமைச்சகம் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுஅமைச்சகத்தின் உயரதிகாரி, தேர்வு நடத்துவதுகுறித்து முடிவெடுப்பது யுஜிசியின் உரிமை எனவும் கொரோனா, வெள்ளம் போன்றவற்றைக் காட்டி விலக்குக் கோரினால் அது மோசமான முன்னுதாரணமாகி விடும் என்றும் அனைத்து மாநிலங்களும் பல்கலைக்கழகங்களும் யுஜிசியின் அறிவிப்பிற்குக் கட்டுப்பட்டு தேர்வுகளை 2020 செப்டம்பர் இறுதிக்குள் (கொரோனா பரவல்இருந்தாலும்) நடத்தி முடிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்தியா முழுவதும் தேர்வு நடத்திட, மத்தியஉள்துறை அமைச்சகத்திடம் உரிய அனுமதிபெற்றதன் அடிப்படையிலேயே யுஜிசி அறிவிப்புஅனுப்பியுள்ளது என்று கூறியுள்ளார். 

மாநில உரிமைகள் மீறல்
அரசியல் அமைப்புச் சட்டப்படி உயர்கல்விமத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டிய ஒத்திசைவுப் பட்டியலில் வருகிறது.உயர்கல்வி தொடர்பான எந்த ஒரு முக்கிய முடிவினையும் மாநில அரசுகளைக் கலந்தே செய் திடல் வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இலட்சக்கணக்கான மாணவர்கள் ஒன்றாகக் கூடுவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய பருவ இறுதித் தேர்வுக்கான அனுமதியை அளிப்பதற்கு முன்னர், மத்திய உள் துறை அமைச்சகம் மாநில அரசுகளை ஏன் கலந்தாலோசிக்கவில்லை? ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கிராமங்களில்/புறநகர்ப்பகுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் நகரின் மையப் பகுதியில் உள்ள தேர்வு மையங்களுக்கு வந்து எவ்வாறு தேர்வு எழுதமுடியும்? சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள பிறமாநில மாணவர்கள் எவ்வாறு தேர்வு எழுதுவார்கள்?  மேலும் மத்திய உள் துறை அமைச்சகம்அறிவித்துள்ள ‘கொரோனா காலத்தில் செயல்பாட்டிற்கான வழிமுறைகளில்’ (sop) குறிப்பிடப்பட்டுள்ள வசதிகள் அனைத்து தேர்வு மையங்களிலும் இருப்பதை யார் உத்தரவாதப்படுத்துவது? இது தொடர்பாக மாநில அரசுகளை மத்தியஅரசு ஏன் கலந்தாலோசிக்கவில்லை? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. இது மத்திய ,மாநில அரசுகளின் அதிகாரப்பகிர்மானம் தொடர்பானது. தற்போதைய மத்திய அரசு பல்வேறு விசயங்களில் மாநில அரசுகளின் உரிமைகளைப் புறந்தள்ளி தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. இதுவும் அதைப் போன்றதே.      

நாடு முழுவதும் ஒரே நிலை இல்லை
மேலும், கொரோனா வைரஸ் பரவல் நாடுமுழுவதும் ஒரே மாதிரி இல்லை. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தில்லி போன்ற மாநிலங்களில் அதிகப்பரவல் உள்ளது. வேறு சில மாநிலங்களில், பரவல் மிகவும் குறைவு. இந்த வைரஸ் பரவல்எப்போது குறையும் என்பது குறித்து வல்லுநர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒரே மாதிரிசெப்டம்பர் இறுதிக்குள் தேர்வுகளை நடத்திமுடிப்பது சாத்தியமில்லை என்பதை மத்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டும். சில கல்வியாளர்கள் இந்த ஆண்டு ஜீரோ கல்வியாண் டாக (Zero Academic Year) அமையவும் வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளனர்.   

ஆன்லைன் தேர்வுகள்
மேலே குறிப்பிட்ட யுஜிசியின் வழிகாட்டு நெறிமுறைகளில், நேரடித் தேர்வுக்கு மாற்றாக ஆன்லைன் தேர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் அஜெண்டாவாகும். ஆன்லைன் கல்வி போதித்தல் மற்றும் தேர்வு முறைஎன்பது தேசிய கல்விக் கொள்கை 2019 இல்உள்ள முக்கிய அம்சமாகும். இது உயர்கல்வியை கார்ப்பரேட் மயமாக்குவதற்கான வழிமுறைஎன்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் தேர்வுகளை நாடு முழுவதும் நடத்துவதற்காக தொழில்நுட்ப வசதிகள் கல்லூரிகளில் கிடையாது.  35 சதவீத மாணவர்களுக்கேஇண்டெர்நெட் , லேப் டாப் உள்ளிட்ட வசதிகள்இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக, ஆன்லைன் தேர்வுகளில் நம்பகத்தன்மை இல்லை. ஆகவே, ஆன்லைன் தேர்வுகள் ஏற்பதற்கில்லை.  

இறுதியாண்டு மாணவர்களின் எதிர்காலம்
பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதிப் பருவத் தேர்வு நடத்தி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், கோடிக்கணக்கான இளம் மாணவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்த கவலையுடன் உள்ளனர்.  பல நகர்ப்புற மாணவர்கள்வளாகத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணியில்சேர்வதற்கு தயாராக உள்ளனர். கொரோனாதொற்று காரணமாக தேர்வுகள் தள்ளிப்போனால் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படுமெனவும் ஆகவே, முந்தையப் பருவத் தேர்வு மதிப் பெண் சராசரி அடிப்படையிலும், இறுதிப் பருவஉள் மதிப்பீட்டு தேர்வு மதிப்பெண் மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் தேர்வு முடிவுகளைஅறிவிக்க வேண்டுமெனவும் கோருகின்றனர். இதனை ஆமோதிக்கின்ற கல்வியாளர்கள், மதிப்பெண்ணை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு கொரோனாவிற்குப் பின்னர் சிறப்புத் தேர்வுகளை நடத்தலாம் எனவும் ஆலோசனை கூறியுள்ளனர்.   

ஆகவே, இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளம் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்புக் கருதி மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தனது பிடிவாதத்தினை விடுத்து யுஜிசியின் பருவ இறுதித்தேர்வு தொடர்பான 06.07.2020 வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக விலக்கிக் கொள்ள தக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், கொரோனா கட்டுப்படுத்துதல் குறித்து பிரதமர் மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடுவது போல, பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதிப் பருவத் தேர்வு நடத்துவது குறித்தும் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் கலந்துரையாடி அவர்களின் கருத்தினை அறிந்து அதனடிப்படையில் நல்லதொரு முடிவினை எடுத்திட வேண்டும். 

மாணவர் விரோத வழிகாட்டு  நெறிமுறைகளை திரும்பப் பெறுக! 
பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதிப் பருவத் தேர்வு நடத்துவது தொடர்பாக யுஜிசியின் வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாகவிலக்கிக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும், அனைத்து மாணவர்களுக்கான ஏப்ரல் 2020பருவ மதிப்பீட்டினை உள் மதிப்பீட்டு தேர்வு மதிப்பெண், மாணவர் வருகைப்பதிவு மற்றும் கடந்த பருவங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விகிதாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டு தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டுமெனவும், இதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் கலந்துரையாடி தக்க முடிவெடுக்கவேண்டும் என்பதே நமது கோரிக்கையாகும்.இதனை வலியுறுத்தி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மட்டுமல்லாது உயர்கல்வியில் அக்கறையுள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து குரல் கொடுக்க வேண்டும்.கொரோனா காலத்தில் முகநூல், வாட்ஸ் ஆப்,மின்னஞ்சல் போன்றவற்றை பயன்படுத்தி பொதுக் கருத்தினை உருவாக்கி 06.07.2020 தேதியிட்ட மாணவர் விரோத யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெற வைக்க வேண்டும்.
 

===பேரா.எஸ்.சுப்பாராஜு===
தேசியச் செயலாளர், அய்பெக்டோ

;