tamilnadu

img

லாக் டவுனும் தனியார்மயமும்....

“குறிப்பிட்ட சில துறைகளை தவிர்த்து பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயமாக்கப்படும்” என்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.பொதுத்துறை வங்கிகள் ஏழை-எளிய, நடுத்தர மக்களுக்கு சேவை செய்வதை காட்டிலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன்களை வாரி வழங்கினால் நாட்டின் பொருளாதாரம் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறும் என்று அழுகிற குழந்தைக்கு ‘குச்சி மிட்டாய்’ கொடுப்பது போல் நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறது மத்திய பாஜக அரசு.பெரும் பணக்காரர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கிய கடன்கள் அனைத்தும் வராக் கடன்களாக மாற்றி பொதுத்துறை வங்கிகளை ‘திவால்’ நிலைக்கு தள்ளிவிட்டு, அவற்றின் நிர்வாகம் சரியில்லை. என்று கூறி தனியார் மயமாக்கும் மோ(ச)டி அரசின் வஞ்சக திட்டத்தை அறிவுஜீவிகள் உட்பட சிலரும் கண்மூடித்தனமாக ஆதரித்தனர்.மத்திய பாஜக அரசால் பாராட்டுப் பத்திரம் எழுதப்பட்ட தனியார்  வங்கிகளில் அரங்கேறிய நிகழ்வுகள் அனைத்தும் தலைகீழானது. தனியார் மயத்தைத் தூக்கிப்பிடித்தவர்களே அந்த வங்கிகளின் கணக்குகளை முடித்துக் கொண்டு தற்போது பொதுத்துறை வங்கிகளில் கணக்குகளை துவக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

“மக்களின் பணம் மக்களின் நலனுக்காகவே; தனியார் கொள்ளையடிக்க அல்ல”  என்பதால் தனியார் வங்கிகளையும் பொதுத்துறைகளாக மாற்ற வேண்டும் என்று ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய இந்தக் குரல்கள் சரியானதுதான் என்பதை ‘லாக் டவுனும்’ நிரூபித்துக் காட்டியது.இதற்கு காரணம் 1,200 கிளைகள், 18,000 ஊழியர்கள், 3 லட்சம் கோடி ரூபாய் சொத்து, நாட்டிலேயே நான்காவது பெரிய வங்கி என மார்தட்டிக் கொண்ட யெஸ் வங்கி மட்டுமன்றி, பிஎம்சி, லட்சுமி விலாஸ் வங்கிகள் முறைகேடுகளில் வரிசை கட்டின. இத்தகைய தனியார் வங்கிகளை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை, கடன் வாங்கி ஏப்பம் விட்டு தேடப்படும் குற்றவாளிகளான விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி, ராகேஷ், ராணே கபூர், பதஞ்சலி நிறுவனத்தின் யோகி ராம்தேவ் உள்ளிட்ட 50 முதலாளிகள் வங்கிகளுக்கு திரும்ப செலுத்தாத தொகையில் 68,000 கோடி ரூபாயை முழுமையாகதள்ளுபடி செய்து கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களுக்கு துணை நிற்கும் அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாகவே இருந்து வருகிறது.

உலக அரங்கில் பல்வேறு நாடுகளிலும் வங்கிகள் திவாலான சூழ்நிலையிலும், இந்திய நாட்டின்பொருளாதார வளர்ச்சியில் தூணாக நிற்பது பொதுத்துறை வங்கிகள் தான் என்பதை இந்த ஊரடங்கு உத்தரவு காலத்திலும் நிரூபித்து காட்டிய பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கிஉள்ளிட்ட வங்கி ஊழியர்களின் தன்னலமற்ற சேவைகளை யாராலும் மறைக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது.விமானம், ரயில், பேருந்து, ஆட்டோ என பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்ட லாக் டவுன் சூழ்நிலையிலும் ஏழை-எளிய, நடுத்தர மக்கள் நலனில் அக்கறை, மத்திய- மாநில அரசு ஓய்வூதியர்கள், முதியோர் உதவித் தொகை, விதவை பென்ஷன், மாற்று திறனாளிகள் உதவித் தொகை என பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் சேவைக்காக, வங்கிகளின் வாசலில் பந்தல் அமைத்து தனி மனித இடைவெளியுடன் செய்த சேவையை பாராட்டாதவர்களே கிடையாது.இது மட்டுமா?மக்களின் அத்தியாவசியத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் பாதுகாப்புத் துறையை சேர்ந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களும் வைரஸ் தொற்று பரவல் கட்டுக்கடங்காமல் இருந்த நிலையிலும் மக்கள் சேவையில் தமது பங்கினை சிறப்பாகச் செய்தனர்.
எல்ஐசி என்பது  இந்தியர்கள் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட பொதுத்துறை நிறுவனமாகும். ‘பொன் முட்டையிடும் வாத்து’. இந்த லாக் டவுன் காலகட்டத்திலும் பாதிக் கப்பட்ட மக்களுக்கு பொருளாகவும் நிதியாகவும் உதவி செய்து தனது சேவையை மீண்டும் மீண்டும் நிரூபித்து காட்டியது.ஆனாலும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எத்தகைய சூழ்நிலையில் அறிவித்திருக்கிறார். இது இத்துடன் நின்று விடுமா என்றால் இல்லை.மதவெறி பிடித்த கூட்டத்திடம் மிருக பலத்துடன் ஆட்சி அதிகாரத்தை கொடுத் தால் தானடித்த மூப்பாக நிர்வாகத்தை நடத்துவார்கள் என்பதற்கு இது ஒரு முன்னோட்டம் தான். இனி நாட்டில் பொதுத் துறை நிறுவனங்களே இருக்காது. மக்கள் சேவையும் கிடையாது. நாட்டையே கூறு போட்டு விற்பனை செய்வோம் என்பதை நிரூபித்துக் காட்டி வரும் மோடி வகையறாவுக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும் ஒரு ஓரணியில் அணிதிரள வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

===சி.ஸ்ரீராமுலு===

;