tamilnadu

img

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா?

தில்லியில் ஜகோரி என்ற அமைப்பு வேலைக்குச் செல்லும் 5000 பெண்களிடம் ஒரு ஆய்வை நடத்தியது .அதில் 4000 பேர் தாங்கள்வேலைக்குச் செல்லும் போதும், வேலை யிடங்களிலும் ஏதாவது ஒரு வகையில் பாலியல் சீண்டல் செய்யப்பட்டதாக கூறி யிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தாங்கள் பாலியல் சீண்டலுக்குள்ளாக்கப்படுகிறோம் என எந்த இடத்திலும் புகார் கூறுவதில்லை. புகாரளிப்பவரையே  இழிவாக பார்க்கும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் தானே நாம்வாழ்கிறோம். அதையும் தாண்டி ஒருசில பெண்கள் பணியிடங்களில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை துணிந்து சொல்ல முன் வருவது பாராட்டத்தக்கது. 

பணியிடங்களில் பாலியல் தொல்லை யை தடுக்க 1997இல் உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதலைக் கொடுத்தது. அந்தவழிகாட்டுதல் 16 ஆண்டு கால போராட்டத் திற்குப் பின் 2013இல் சட்டமாக வந்தது. அச்சட்டம் பல நூற்றுக்கணக்கான பெண் களின் துன்பங்கள், மன உளைச்சல்கள், அவமானங்களை தாங்கியே பிறந்தது. அச்சட்டம் முறையாக பயன்படுத்தப்படுகிறதா?10 பெண்களுக்கு மேல் பணி புரியும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் புகார் அளிக்க உள் புகார் குழுவை அந்நிறுவனத்தில் அமைக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.எத்தனை நிறுவனங்களில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது?எல்ஐசி உழைக்கும் மகளிர் துணைக் குழுவின் ஜீவிகா அமைப்பு தென் மாவட்டங்களில் 100 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 51 நிறுவனங்களில்  புகார் குழு அமைக்கப்படவில்லை என தெரிகிறது.புகார் கமிட்டி அமைக்காத நிறுவனங் களுக்கு  ரூ 50,000 அபராதம் விதிக்க வேண்டும் என்பது சட்ட விதி. இதுவரை  உள்புகார் குழு அமைக்காத ஒரு நிறுவனத்திற்குக் கூட அபராதம் விதிக்கப்படவில்லை. சட்டம் வந்து 3 ஆண்டுகளுக்குப்  பின்னரே சென்னை உயர்நீதிமன்றத்தி லேயே புகார் குழு அமைக்கப்பட்டது.

புகார் கொடுக்கும் பெண்களின் கதி
கடந்த ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது அத்துறையில் பணிபுரியும் பெண் எஸ்பி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். விசாரணையை முறையாக நடத்தாமல் புகார் கூறிய பெண் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இது போன்றே உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன்கோகய் மீது பாலியல் குற்றச்சாட்டை சொன்ன பெண் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு குடும்பத்துடன் பந்தாடப்பட்டார்.ஒரு காட்சி ஊடகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் கேமிராமேன்  தன்னைபாலியல் சீண்டல் செய்ததாக நிர்வாகத்தில் புகார் செய்தார். நிர்வாகம் அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. மாறாகஅந்நிநிறுவனத்தில் பணிபுரியும் கேமரா மேன்கள் யாரும் இனி அப்பெண்ணுடன் படப்பிடிப்புக்கு  செல்லக் கூடாது என முடிவு செய்தனர். நிர்வாகம் அதையும் கண்டுகொள்ளவில்லை.  புகார் அளிக்கும் பெண்களின் வேலையையே காலி செய்தால்பாதிக்கப்படும் பெண்கள் எப்படி. தைரியமாக முன் வந்து புகார் அளிப்பார்கள்? சன் டிவியில் நியூஸ் எடிட்டரால் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர் ஒருவர் நிர்வாகத்திடம் நீதி கிடைத்காததால்  போலீஸில் தக்க ஆதாரத்துடன் புகார் செய்தார். விசாரணை மேற்கொண்ட காவல் துறை குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து 2 மாதம் அவரை சிறையிடைத்தது. இரண்டு மாதத்திற்குப்பின் மீண்டும் எடிட்டர் பொறுப்பில் வந்தமர்ந்தார். ஆனால் அப்பெண் அந்நிநிறுவனத்தை விட்டே துரத்தப்பட்டார். வேறு எந்த நிறுவனமும் அவருக்கு வேலை கொடுக்கவும் தயாரில்லை.

திறமையா? குற்றமா?
சமீபத்தில் திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மாணவி, தன்னை  பேராசிரியர் ஒருவர்தொடர்ந்து துன்புறுத்தல் செய்ததாக கல்லூரி முதல்வர், மற்றும்பேராசிரியர்களிடம் புகார் செய்தார். எந்த நடவடிக்கையும் இல்லை. ஜனநாயக மாதர் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும், மார்க்ஸிஸ்ட் கட்சியும் போராட்டம் நடத்திய பின்னரே பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் அம்மாணவி கல்லூரி விடுதியைவிட்டே விரட்டப்பட்டார். திருச்சி கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டதால் அவர் கல்வியை தொடர முடியாமல் போனது.திருச்சியில் சட்டக் கல்லூரி மாணவன் மீது மாணவி ஒருவர் புகார் செய்தார். அம்மாணவியை தொடர்ந்து அதே மாணவனால் நாங்களும் பாதிக்கப்பட்டோம் என் 27 பேர் புகார் செய்தனர்’ அத்தனை நாட்கள் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்த மாணவிகள் ஒன்றிணைந்தனர். புகார் கொடுத்தனர். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. அவன் நன்றாகப் படிக்கும் மாணவனாம். எனவே அவன் 5 மாத காலம் சமூக சேவை செய்ய 
வேண்டுமென்ற தண்டனை கொடுக்கப் பட்டது. இது அவனுக்குக் கொடுத்த தண்டனையா? அல்லது  பரிசா? இத்தீர்ப்பு சமூக சேவையையே இழிவுபடுத்துவ தாக இல்லையா? பஞ்சாப் டிஜிபியாக இருந்த கேபிஎஸ் கில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை சீண்டல் செய்த வழக்கில் அப்பெண்ணின் 8 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பின் சிறு அபராதத் தொகையை நீதிமன்றம் விதித்தது. ஆனால் பஞ்சாபின் தீவிரவாதத்தையே அடக்கி ஒடுக்கிய காவல்துறை அதிகாரி மீதேஇப்படி ஒரு குற்றச் சாட்டா என ஊடகங்கள் கதறின. குற்றம் சாட்டப்பட்டவர் நேர்மையானவரா? திறமையானவரா என்பது பிரச்சனை அல்ல. அவர் மீது சொல்லப்பட்ட குற்றம் உண்மையானதா என்பது தான் முக்கியம்.

அணி திரட்டப்படாத துறைகளில் பெண்கள்
சென்னையில் தெருவோரம் வியாபாரம்செய்யும் பெண்களிடம் ஜனநாய மாதர் சங்கம் ஒரு ஆய்வை மேற்கொண்டது .அந்த ஆய்வில் அப்பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகளை கண்ணீ ரோடு பகிர்ந்தனர். 
பொம்மை வியாபாரம் செய்யும் பெண் பொம்மை விலையை சொன்னால், இந்த விலை பொம்மைக்கு மட்டுமா உனக்கும் சேர்த்தா என கேட்கிறார்கள். கந்து வட்டிக்காரனிடம் கடன் வாங்கி கடை போட்டு ஒரு நாள் போதுமான வசூலாகாமல் தின வட்டி செலுத்த முடியவில்லையென்றால் தண்டல்காரன் கடையின் முன்னால் தாண்டவமாடி விடுவான். அவன் கேட்கும்ஆபாச கேள்விகளுக்கு அளவே இல்லை என புலம்பினர். இப்பெண்கள் தங்களுக்குஏற்படும் தொல்லையை யாரிடம் சொல்வார்கள்’. வீட்டு வேலை செய்பவர்கள்,கட்டுமானப் பணியார்கள், பீடித் தொழிலாளிகள் எனஅணி திரட்டப்படாத துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பணி செய்யும் இடத்தில் பாலியல் வன்முறை நடந்தால் மாவட்ட அளவில் ஆட்சியர் பொறுப்பில் உள்ளூர் புகார் கமிட்டி  அமைக்கப்பட வேண்டும் என சட்டம் சொல்கிறது.கட்டுமானத் தொழிலாளி முதல் கார்ப்பரேட் நிறுவனஅதிகாரிகள் வரை இத்தகைய பாலியல் சீண்டலுக்கு தப்புவதில்லை. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் குற்றவாளிகளுக்கு சாதகமாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவுமே நிர்வாகங்கள், காவல் துறை ,நீதித்துறை என அனைத்துமே செயல்படுகின்றன. நீண்ட போராட்டத்திற்குப் பின் சட்டம் வந்தாலும் அச்சட்டம் எப்படிப் பட்டவர்கள் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே தீர்ப்புகள் வருகின்றன.

மீ டூ இயக்கம்
சட்டங்கள் செய்யாத பல விஷயங் களை இயக்கங்கள் செய்கின்றன என்பதற்கு மீடூ இயக்கம் ஒரு உதாரணம். அமெரிக்காவில் துவங்கிய இவ்வியக்கம் உலகில் பல நாடுகளில் பரவி அவ்வியக்கம் இந்தியாவிற்குள்ளும் வந்தது. பிரபலஆசாமிகளை மிரள வைத்தது .பல துறைகளில் வேலை பார்க்கும் பெண்கள் தங்களுக்கு  ஏற்பட்ட பாலியல் பிரச்சனைகளை தைரியமாக வெளிப்படுத்தினர்.ஆனால் சிலர் இத்தனை ஆண்டாக என்ன செய்தாய்? கவனமாக இருந்தால் இது நடக்குமா? இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டனர்.இவர்கள்ஆண்டாண்டு காலமாய் தங்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் தாக்குதலை தைரியமாக வெளியில் சொல்ல திராணியற்று துவண்டு கிடந்தவர்கள். தங்களுக்கு ஏற்படும் பாலியல் சீண்டலை வெளிப்படையாக சொல்வதற்கான சாதகமான சமூக சூழலையா நாம் அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்? மீடூ போன்ற இயக்கங்கள் பாதிக்கப்படும் பெண்களுக்கு தைரியத்தைத் கொடுத்திருக்கிறது.குற்றம் செய்யும் மனநிலையில் உள்ள ஆண்களை எச்சரித்துள்ளது.

சமத்துவம்... கண்ணியம்...
டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 14, 15, 21 ஆகியவை பெண்களுக்கு சமத்துவத்திற்கான உரிமையையும், கண்ணியமாக வாழ்வதற்கான உரிமை யையும் கொடுத்துள்ளது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் பெண்களை ஆண்களின் அடிமைகளாக கருதும் சித்தாந்தத்தை உடையவர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கூறினார்.  தங்கள் உயர் அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொண்டே பல பெண் பத்திரிக்கையாளர்கள் உயர் பதவிக்குச் சென்றுள்ளனர் என உச்சக்கட்ட இழிவை அள்ளி வீசுகிறார். எஸ்.வி.சேகர். இப்படிப்பட்ட மனுவாதிகள் கையில் தான் நம் தேசம் உள்ளது.  அவர்கள் அரசியலமைச் சட்டத்தை அடியோடு மாற்றிடத் துடிக்கிறார்கள்.எங்கள் அடிப்படை உரிமைகளை பறிக்க நாங்கள் ஒரு போதும் அனுமதியோம். பெண்களுக்கு பாதுகாப்பான பணி யிடத்தை உறுதிப்படுத்துவோம் என்ற முழக்கத்தோடு இன்று புதுக்கோட்டையில் மாநாடு நடைபெறுகிறது.
நம் பணியிடம் நம் கையில் கரம் இணைப்போம், குரல் கொடுப்போம். வெற்றி பெறுவோம்.

பி.சுகந்தி மாநில பொதுச் செயலாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

;