tamilnadu

திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி முக்கிய செய்திகள்

காதல் திருமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை, ஜன. 18- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் யாதமரி கோந்தி வாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் தேவராஜ் (22). கார் ஓட்டுநராக வேலை செய்து வந்த இவரும், அதேபகுதியை சேர்ந்த காயத்ரி (19) என்பரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2 பேரும்,  வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தம்பதிகள் பெங்களூரூவில் வசித்து வந்தனர். இந்நிலையில் தேவராஜ், காயத்ரி இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கஸ்தம்பாடி அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் உறவினர் வீட்டிற்கு பொங்கல் விழா கொண்டாட வந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை உறவினர்கள் வீட்டின் பின்புறம் சென்ற போது, அங்குள்ள ஒரு மரத்தில் தேவராஜ், காயத்ரி இருவரும் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த களம்பூர் காவல் துறையினர் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைகோள்  ஆராய்ச்சி மைய இயக்குநர் தகவல்  

புதுச்சேரி, ஜன. 18- சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைகோள் விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீஹரிகோட்டா சத்திஸ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் ராஜராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி உப்பளம் பகுதியில் அமைந்துள்ள பெத்தி செமினார் தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் அறிவியல் கண்காட்சியை ராஜராஜன் திறந்து வைத்து, அங்கு மாணவர்களின் காட்சி படைப்புகளான மீன் வளர்ப்பு முறைகள், பிளாஸ்டிக் தவிர்ப்பு, இயற்கையில் உருவான காடுகள் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைகோள் விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சூரியனின் தன்மை மற்றும் பல்வேறு செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தொடக்க கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.  முன்னதாக இயக்குநர் ராஜராஜனை பள்ளி முதல்வர் பஸ்கால்ராஜ் வரவேற்றார்.

ஜன. 21 செய்யாரில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை, ஜன. 18- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோட்ட அளவிலான பழங்குடியினர் நலக்குழுக் கூட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம் செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகத்தில்  செவ்வாய்க்கிழமை (ஜன. 21) நடைபெறுகிறது. கோட்டாட்சியர் கி.விமலா தலைமையில் காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டமும், மாலை 3 மணிக்கு பழங்குடியினர் நலக் குழுக் கூட்டமும் நடைபெறுகிறது. இதில் பழங்குடியின மக்கள், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம். ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்படும். வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாடு முட்டி வாலிபர் பலி

திருவண்ணாமலை,ஜன.18- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். தானிப்பாடி கிராமத்தில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டியில் கிராம இளைஞர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். செங்கத்தை அடுத்த மேல் கரியமங்கலம் கிராமத்தில் மாடு பிடிக்கும் நிகழ்ச்சியில் மாடு முட்டியதில் ஆனந்தன் (40) என்பவர் உயிரிழந்தார். மேலும், பல்வேறு கிராமங்களில் பொங்கல் விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பொன்னேரி அருகே  சாலை விபத்தில் இருவர் பலி

திருவள்ளூர், ஜன.18- கோயம்பேட்டிலிருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் சத்தியவேடு நோக்கி சென்றுகொண்டிருந்த சிறிய சரக்கு வாகனம் ஒன்றின் மீது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ள பெரவளூரில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார்  மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சத்தியவேடு பகுதியை சேர்ந்த  பூ வியாபாரிகள்  பரந்தாமன், சேகர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவரப்பேட்டை காவல்துறையினர் விபத்தில் காயமடைந்த 12 பேரை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி மற்றும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;