tamilnadu

img

பாஜகவில் பாலியல் குற்றங்கள்... வழக்குப் பதிவு செய்ய கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்....

சென்னை:
பாலியல் ஆபாச வீடியோ விவகாரத்தில் பாஜகவின் மாநிலப் பொதுச்செயலாளர்  கே.டி.ராகவன் மற்றும் உடந்தையாக  இருந்தவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து,கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழக பாஜக தலைமையின் மீது எழுந்துள்ள பாலியல் புகார்களும், அடுத்தடுத்து வரும் செய்திகளும் அதிர்ச்சி தருகிறது. மனித மாண்புகளையே கேள்விக்குள்ளாக்குகிறது. பாஜகவின் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், ஏதோ பெருந்தன்மையானவர் போல ராஜினாமா செய்திருக்கிறார். இவ்விசயத்தில் ராஜினாமா மட்டும் தீர்வாகாது, அவர் சட்டத்திற்கு முன் பதில் சொல்லியாக வேண்டும்.இதுபற்றி, பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கை, நடந்துள்ள குற்றங்களை உறுதி செய்வது போல் இருப்பதுடன், மேலும் பல புகார்கள் விசாரிக்கப்படாமல் இருப்பதாக காட்டுகின்றன. இது குறித்து தனக்கு தெரியும் ன்றபோதிலும் நடவடிக்கையை தாமதப்படுத்தியதை வெளிப்படையாக கூறுகிறார். மேலும், திருமதி மலர்க்கொடி என்பவரைக் கொண்டு புகார்களை விசாரிக்க இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

பாஜகவின் தலைமையில் நடந்துவரும் பாலியல் குற்றங்களை ‘விசாகா குழு’ விசாரிக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னரே தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. ஆனால் அதற்கு கடுமையான எதிர்ப்பினை பாஜக தெரிவித்ததுடன், செய்தியும் நீக்கப்பட்டது. இப்போது பாஜகவைச் சேர்ந்த ஒருவராலேயே பாலியல் குற்றங்கள் நடந்திருப்பது உறுதியாகியுள்ளது. எனவே, இப்பிரச்சனையில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் தெளிவாகவே தெரிகின்றன. ஊடகங்களில் எழுதப்படும் வேறு பல செய்திகளைப் படித்தால், பாஜகவில் பெண்களுக்கு எதிராக  பாலியல் சுரண்டல்களும், அராஜகங்களும் நடந்திருப்பது அப்பட்டமாகிறது.இத்தகைய அவலம், பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் அனைவருக்கும் எதிரான கடுமையான குற்றமே ஆகும். இதுபோன்ற அவலங்களை கடுமையான முறையில் கையாண்டால்தான், அரசியல் மீதான நம்பிக்கையை பெண்களுக்கும், பொது மக்களுக்கும் ஏற்படுத்த முடியும். 

எனவே, இவ்விவகாரத்தை மூடிமறைக்க முயன்ற பாஜக தலைவர் அண்ணாமலை, புகாருக்கு ஆளான பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான ராகவன் உட்பட பத்துக்கும் அதிகமானவர்கள் அதிகாரம் மிக்க பதவிகளில் உள்ளவர்கள். எனவே, பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் தைரியமாக முன்வந்து பேச வேண்டுமென்றால், காவல்துறையின் தலையீடு அவசியமாகும். எனவே, இந்த பிரச்சனையை குற்ற வழக்காக பதிவு செய்ய வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்களையும், உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;