tamilnadu

புதுச்சேரி ,கிருஷ்ணகிரி ,திருவண்ணாமலை மற்றும் மதுரை முக்கிய செய்திகள்

புதுவையில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு

புதுச்சேரி, மே 31-கோடை வெயிலின் தாக்கத்தால் ஜூன் 10ல் புதுச்சேரி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் நாராணசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதுச்சேரியிலுள்ள அனைத்து பள்ளிகலும் கோடை விடுமுறைக்கு பிறகு வரும் ஜூன் 3 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு வெப்பத்தின் அளவு அதிகமாக உள்ளது. திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பதை ஒரு வார காலம் கழித்து திறக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று வரும் ஜூன் 10 ஆம் தேதிக்கு திறக்க முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.இச்சந்திப்பின் போது கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன், அரசு கொறடா அனந்தராமன்,அரசு செயலர் அன்பரசு ஆகியோர் உடனிருந்தனர்.

சிஐடியு பொன் விழா கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி, மே 31-சிஐடியு சங்கத்தின் பொன்விழா ஆண்டு துவக்க நாள் கருத்தரங்கம் ஓசூர் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். செயலாளர் பீட்டர் துவக்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் தியாகராஜன் தொழிற் சங்கத்தின் தோற்றம், சிஐடியு சங்கத்தின் தோற்றம், முத்தியத்துவம் , வரலாறு, 50 ஆம் ஆண்டில், தொழிலாளர்கள், தொழிற்சங்களின், மத்திய மாநில அரசுகளின் நிலை குறித்து விளக்கினார்.பொருளாளர் மாதவன், துணைத் தலைவர் நாராயணமுர்த்தி நிர்வாகிகள் கிருஷ்ணன்.ஸ்டாலின் ராஜா, ஜோதியப்பா, ராமு, கதிர்வேல், ஆறுமுகம், போக்குவரத்து சங்க நிர்வாகிகள் பிரபாகர், தியாகராஜன், குமார், டிடிகே, அசோக் லேலண்டு, ஈசன், சங்க நிர்வாகிகள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
 

அறிவியல் இயக்க வகுப்புகள் நிறைவு

திருவண்ணாமலை, மே 31-திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்தன. அதை முன்னிட்டு, பெரணமல்லூரில் களம் –9 நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் மே மாத கோடை விடுமுறையில், ‘பகத்சிங் இலவச இரவுப்பள்ளி’ மூலம் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு அவ்வகுப்புகளின் நிறைவாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெரணமல்லூர் கிளைச் சார்பில் களம்9 என்ற பெயரில் பொது நிகழ்ச்சி, பெரணமல்லூர் அண்ணாசிலை முன்பு நடைபெற்றது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெரணமல்லூர் கிளையின் இணைச் செயலாளர் இரா.இராஜசேகரன் நிகழ்ச்சிக்கு  தலைமை தாங்கினார். செயலாளர் ஆ.பூபாலன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாணவர்கள் பங்கு பெற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  ‘இளைய பாரதத்தினாய் வா வா வா’ எனும் தலைப்பில் வேலூர் ஆக்சிலியம் கல்லூரிப் பேராசிரியை பேசி.அமுதா, ‘உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா’ எனும் தலைப்பில் எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வ.பழனி நன்றி கூறினார். இந்நிகழ்வில் திரளான மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

சட்டவிரோத மணல் குவாரிக்கு இடைக்கால தடை

மதுரை, மே 31-பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியான, மேற்குத் தொடர்ச்சிமலை அருகே தோவாளை பகுதியில், செயல்படும் சட்டவிரோத மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்துசென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தஜான்சியன் ராஜா, சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளைமனு தாக்கல் செய்திருந்தார். அதில்,“மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகில் அமைந்துள்ளதுகன்னியாகுமரி மாவட்டம். இங்குள்ள தோவாளை பகுதி அருகில் வன உயிரின சரணாலயம் அமைந்துள்ளது. தோவாளைஅருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.உச்சநீதிமன்ற உத்தரவின்படி வன உயிரின சரணாலயப் பகுதிகளில் இருந்து பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் குவாரிகள் அமைக்கக்கூடாது. ஆனால், தோவாளை பகுதியில் சுற்றுச்சூழல் அனுமதி உட்பட எந்த அனுமதியும் பெறாமல் சிலர் மணல் குவாரி நடத்துவது போல் மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர் . அனுமதி பெறாமல் இயங்கும் இந்தகுவாரியால் சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே விதிகளை மீறி இயங்கும் சட்ட விரோதமணல் குவாரிக்குத் தடை விதிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி அமர்வு, தோவாளை பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கும் மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், திருநெல்வேலி சரக வன உயிரினப் பாதுகாவலர், கனிமவளத்துறை துணை இயக்குநர் ஆகியோர் அறிக்கை அளிக்கஉத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 10- ஆம் தேதிக்குஒத்திவைத்தனர்.

;